மூக்கில் ரத்தம் வருவது பலர் அனுபவிக்கும் ஒரு சிறிய பிரச்சினையாகத் தோன்றினாலும், அடிக்கடி இந்த பிரச்சனை ஏற்படும்போது கவலை ஏற்படுவது இயல்பானது. இந்த பிரச்சனை அதிக குளிர்ச்சி அல்லது வறண்ட காற்று காரணமாக ஏற்படலாம். ஆனால், அடிக்கடி இந்த பிரச்சனை நீடித்தால் அது வேறு ஏதேனும் உடல்நலப் பிரச்சனையின் அறிகுறியாக இருக்கலாம். இந்தப் பதிவில் அடிக்கடி மூக்கில் ரத்தம் வருவதற்கான காரணங்கள் பற்றி முழுமையாகப் பார்க்கலாம்.
மூக்கில் ரத்தம் வருவதற்கான காரணங்கள்:
பலருக்கு மூக்கில் ரத்தம் வருவதற்கு மூக்கின் உள்பகுதியில் உள்ள நுண்ணிய ரத்த நாளங்கள் உடைவது காரணமாக இருக்கும். இது பொதுவாக குளிர்ந்த அல்லது வறண்ட காற்று அல்லது மூக்கை இடித்துக் கொள்வது போன்றவற்றால் ஏற்படலாம்.
சிலருக்கு அலர்ஜி காரணமாக மூக்கில் தொடர்ச்சியாக அரிப்பு ஏற்பட்டு ரத்தம் வழித்ல் ஏற்படக்கூடும். உயர் ரத்த அழுத்த பிரச்சனை இருப்பவர்களுக்கு மூக்கில் ரத்தம் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம்.
சிலருக்கு மிகவும் அரிதாக மூக்கில் புற்றுநோய் ஏற்பட்டு அதன் காரணமாக ரத்தப்போக்கு ஏற்படும். சில வகையான மருந்துகள் ரத்தப்போக்கை ஏற்படுவதற்கு காரணமாக இருக்கலாம்.
ரத்தம் உறையாத நோய்கள் உள்ளவர்களுக்கு மூக்கில் அதிகப்படியான ரத்தப்போக்கு இருக்கும். பெண்களுக்கு கர்ப்ப காலத்தில் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்கள் மூக்கில் ரத்தப்போக்கு ஏற்படக் காரணமாகின்றன.
மற்ற அறிகுறிகள்: மூக்கில் ரத்தம் வருவதைத் தவிர வேறு ஏதேனும் அறிகுறிகள் இருக்கிறதா? என்பதை கவனிப்பது முக்கியம். சில சமயங்களில் மூக்கில் ரத்தப்போக்குடன் கூடிய பிற அறிகுறிகளின் அடிப்படையில் மற்ற உடல்நலப் பிரச்சனையை கண்டுபிடிக்க முடியும். ரத்தப்போக்குடன் தலைச்சுற்றல், தலைவலி, களைப்பு, இதயத்துடிப்பு அதிகரித்தல், மூச்சு விடுவதில் சிரமம் போன்றவை இருந்தால், உடனடியாக மருத்துவரை அணுகுவது நல்லது.
மூக்கில் ரத்தப்போக்கு ஏற்படும்போது முதலில் செய்ய வேண்டியது தலையை நிமிர்ந்து உட்கார்ந்து கட்டைவிரல் மற்றும் ஆட்காட்டி விரலால் மூக்கை அழுத்தி பிடிப்பதுதான். இது பெரும்பாலான சந்தர்ப்பங்களில் ரத்தத்தை உறைய வைத்து ரத்தப்போக்கை நிறுத்தும். மூக்கில் இருந்து ரத்தம் வழியும்போது ஒருபோதும் தலையை மேலே தூக்கிப் பிடிக்கக்கூடாது. இதனால், ரத்தம் உணவுப் பாதைக்கு சென்று வாய் வழியே வெளிவரும் வாய்ப்புள்ளது. இது உங்களது பதட்டத்தை மேலும் அதிகரிக்கும்.
மூக்கில் ரத்தம் வரும் பிரச்சனையை சாதாரணமாக நினைத்துக் கொள்ளாதீர்கள். குறிப்பாக அடிக்கடி ரத்தம் வந்தால், உண்மையான காரணத்தை தெரிந்து கொள்வது அவசியம். மூக்கில் ரத்தம் வரும்போது கவனமாக கவனித்து, மருத்துவ உதவியை நாடுவது நல்லது.