நாம் உண்ணும் உணவுகளில் உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்களை வழங்குவதில் பழ வகைகள் பெரும் பங்காற்றுகின்றன என்பது அனைவரும் அறிந்ததே. பழ வகைகளில் உள்ள அதிகளவு நார்ச் சத்துக்கள், வைட்டமின் மற்றும் மினரல்கள் போன்றவை உடல் ஆரோக்கியம் காக்க மிகத் தேவையான சத்துக்களாகும். இத்தனை முக்கியத்துவம் வாய்ந்த பழங்களில் சிலவற்றை காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடுவது ஆரோக்கியத்துக்கு உகந்தது அல்ல. எந்தெந்த பழங்களை வெறும் வயிற்றில் சாப்பிடக் கூடாது, அதற்கான காரணம் என்ன என்பதை இந்தப் பதிவில் பார்க்கலாம்.
1. பப்பாளி: பப்பாளி பழத்தில் பப்பைன் என்றொரு பொருள் உள்ளது. இது செரிமானத்துக்கு உதவக்கூடிய பொருள். பப்பாளி பழத்தை வெறும் வயிற்றில் உண்ணும்போது, பப்பைன் வயிற்றுக்குள் எரிச்சலை உண்டுபண்ணும். இதனால் வயிற்றில் வீக்கம் போன்ற வேறு சில அசௌகரியங்கள் உண்டாக வாய்ப்பாகும்.
2. கொய்யா: கொய்யாப் பழத்தில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. வெறும் வயிற்றில் இப்பழத்தைச் சாப்பிட்டால் அஜீரணம் உண்டாகும். எனவே, வயிறு நிறைய உணவு உட்கொண்ட பின் இப்பழத்தைச் சாப்பிடுவது நலம் தரும்.
3. பைனாப்பிள்: இப்பழத்தில் ப்ரோமெலைன் என்றொரு சக்தி வாய்ந்த என்சைம் உள்ளது. வெறும் வயிற்றில் பைனாப்பிள் பழத்தைச் சாப்பிட்டால் இந்த என்சைம் வயிற்றின் உள்பரப்பில் எரிச்சலூட்டி ஜீரணக் கோளாறுகளை உண்டுபண்ணும்.
4. பியர்ஸ்: பியர்ஸ் பழத்தில் இயற்கையாக கடினத்தன்மை கொண்ட நார்ச்சத்து அதிகம் உள்ளது. வெறும் வயிற்றில் இப்பழத்தைச் சாப்பிட்டால் வயிற்றில் எரிச்சல் உண்டாகி வீக்கம் போன்ற அசௌகரியங்கள் உண்டாகும்.
5. ஆப்பிள்: ஆப்பிள் பழத்தில் இயற்கையான அமிலங்களும் அதிகளவு நார்ச்சத்தும் உள்ளன. வெறும் வயிற்றில் ஆப்பிளை உண்ணும்போது வயிற்றுக்குள் உற்பத்தியாகும் அமிலமும் சேர்ந்து, சென்சிடிவ் ஸ்டொமக் உள்ளவர்களுக்கு செரிமான அசௌகரியங்களை உண்டுபண்ணும்.
6. வாழைப்பழம்: வாழைப்பழத்தில் பொட்டாசியம் மற்றும் மக்னீசியம் சத்துக்கள் அதிகம். வாழைப்பழத்தை வெறும் வயிற்றில் உண்ணும்போது இரத்தத்தில் மக்னீசியம் சத்தின் அளவு திடீரென உயர்ந்து இதய ஆரோக்கியத்தில் எதிர்மறை விளைவுகளை உண்டுபண்ணக் காரணமாகிவிடும்.
7. தக்காளி: தக்காளியில் அதிகளவில் காணப்படும் டான்னிக் (Tannic) என்ற அமிலமானது வயிற்றுக்குள் சென்று அங்குள்ள அமிலத்துடன் கலந்து அசிடிட்டியை உண்டுபண்ணக்கூடும். எனவே, தக்காளியை வெறும் வயிற்றில் உண்ணும்போது வயிற்றில் வீக்கம், வாய்வு போன்ற அசௌகரியங்கள் உண்டாவது திண்ணம்.
8. மாம்பழம்: மாம்பழத்தை வெறும் வயிற்றில் உட்கொண்டால் அதிலுள்ள அதிகளவு நார்ச்சத்து மலச்சிக்கல், வயிறு வீக்கம், வாய்வு போன்ற கோளாறுகளை உண்டுபண்ணும். எனவே, வயிறு நிறைய உணவு உட்கொண்ட பின் மாம்பழம் சாப்பிடுவது நன்மை தரும்.
9. கிரேப்ஸ்: கிரேப்ஸில் இனிப்புச் சத்து அதிகம். இதை வெறும் வயிற்றில் உண்ணும்போது இரத்த சர்க்கரை அளவு உயரும். வேறு சில அஜீரணக் கோளாறுகளும் உண்டாகும்.
10. ஆரஞ்சு: ஆரஞ்சு போன்ற சிட்ரஸ் பழங்களை வெறும் வயிற்றில் உண்ணும்போது அஜீரணம், நெஞ்செரிச்சல், ஆசிட் ரிஃப்ளெக்ஸ் போன்ற பிரச்னைகள் உண்டாகலாம். எனவே ஆரஞ்சு பழத்தை வயிறு நிறைய உணவு உண்ட பின் சாப்பிடுவது நலம்.
மேற்கூறிய 10 வகைப் பழங்களை வெறும் வயிற்றில் உண்பதைத் தவிர்த்து உடல் ஆரோக்கிய நலம் பெறுவோம்.