பழங்காலம் தொட்டு இந்திய பாரம்பரிய உணவுகளில் நெய்க்கு முக்கிய இடம் உண்டு. நாம் சாப்பிடக்கூடிய எந்த உணவாக இருந்தாலும் அதில் சிறிது நெய் சேர்த்தால் அதன் சுவை அலாதிதான். சூடான சாதத்தில் மட்டும் மதிய உணவில் அரை டீஸ்பூன் அளவிற்கு நெய் சேர்த்து சாப்பிடுவது மிகவும் நல்லது. உப்பில்லாமல் நெய் மட்டும் சேர்த்து சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். நெய் உடலுக்கு சக்தியை கொடுக்கும் என்பதோடல்லாமல் சருமத்தை பாதுகாத்து இளமையாக வைத்திருக்கும். இவ்வளவு சிறப்பு வாய்ந்த நெய்யை சாப்பிடக்கூடாத 5 நபர்கள் பற்றி இந்தப் பதிவில் காண்போம்.
நெய் சாப்பிட கூடாத 5 நபர்கள்:
1. செரிமானக் கோளாறு உள்ளவர்கள்: குறிப்பாக, அஜீரணக் கோளாறு, irritable bowel syndrome மற்றும் வயிறு சம்பந்தப்பட்ட பிரச்னை, செரிமான கோளாறு உள்ளவர்கள் உணவில் நெய் சேர்த்து சாப்பிடுவதால் அஜீரணம், வீக்கம், குமட்டல், பித்தப்பை பிரச்னைகள், இரைப்பை குடல் கோளாறுகள், கு டல் நோய்க் குறி எரிச்சல் போன்ற நோய்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்பதால் கட்டாயம் நெய் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும்.
2. எடை மேலாண்மை: நெய்யில் அதிக அளவு கொழுப்பு உள்ளதால் உடல் எடையை குறைக்க நினைப்பவர்களும் ஃபிட்டாக இருக்க வேண்டும் என்று விரும்புவர்களும் கட்டாயம் நெய் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும்.
3. கல்லீரல் நோய்கள்: அதிக நிறைவுற்ற கொழுப்பு உண்பதால் கல்லீரல் மோசமாக பாதிக்கப்படும் என ஆய்வறிக்கையே இருப்பதால் நெய்யில் உள்ள அதிகமான கொழுப்பு கல்லீரல் நோய் உள்ளவர்களுக்கு அதிக பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால் இவர்கள் கண்டிப்பாக நெய்யை உணவில் சேர்ப்பதைத் தவிர்க்க வேண்டும்.
4. காய்ச்சல் உள்ளவர்கள்: காய்ச்சல் போன்ற பருவ தொற்றுகள் இருக்கும் சமயம் நெய் சாப்பிடும்போது அது கபத்தை அதிகரிக்கும் என்பதால் காய்ச்சல் உள்ளவர்கள் இதனைத் தவிர்க்க வேண்டும்.
5. கர்ப்ப காலத்தில்: கர்ப்பிணிகள் பருமனாக இருக்கும் பட்சத்தில் இரட்டிப்பு கவனம் செலுத்தி நெய் சாப்பிடுவதை குறைத்துக் கொள்வது மிகவும் நல்லது. மேலுமஂ கல்லீரல் ஈரல் அழற்சி, மண்ணீரல், ஹெபடோமேகலி, ஹெபடைடிஸ் போன்ற கல்லீரல் மற்றும் மண்ணீரல் நோய் சம்பந்தப்பட்டவர்கள் நெய்யை தவிர்க்க வேண்டும்.