டீடாக்ஸ் வாட்டர் பற்றி உங்களுக்குத் தெரியுமா?
சமீபத்தில் மும்பையில், ஐந்து நட்சத்திர ஓட்டல் ஒன்றில் நடந்த ஒரு மருத்துவக் கருத்தரங்கில் குடிப்பதற்கு டீடாக்ஸ் வாட்டர் (detox water) தந்தார்கள். அதன் சுவை மிகவும் அருமையாக இருந்தது. மேலும், அது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும் என்று அறிந்தேன். அதன் பயன்களைப் பற்றி இந்தப் பதிவில் பார்ப்போம்.
டீடாக்ஸ் வாட்டர் என்றால் என்ன?: பல வகையான பழங்கள், காய்கறிகள், மூலிகைகள் போன்றவற்றை சுத்தமாகக் கழுவி, துண்டுகளாக நறுக்கி, சுத்தமான குடிநீரில் கலந்து குடிப்பதே டீடாக்ஸ் வாட்டர் ஆகும். இந்தப் பொருள்கள் நீரில் குறைந்தது எட்டு மணி நேரமாவது ஊறி இருக்க வேண்டும். அப்போதுதான் இதன் சத்துகள் நீரில் முழுமையாக கலக்கும். பின்பு தேவையானபோது சிறிது சிறிதாக நாள் முழுக்கக் குடிக்கலாம். இதில் சர்க்கரையோ வெல்லமோ சேர்க்கக்கூடாது.
டீடாக்ஸ் வாட்டர் தயாரிக்கத் தேவையான பொருட்கள்: ஏதாவது இரண்டு மூன்று பழங்களோ, காய்கறிகளோ சேர்த்து பின்வரும் காம்பினேஷனில் இந்த வாட்டரை தயாரிக்கலாம் என்றார் அந்த ஓட்டல் செப். இஞ்சியும் எலுமிச்சையும், புதினாவும் வெள்ளரிக்காயும், ஆப்பிளும் லவங்கப்பட்டையும், துளசியும் ஸ்ட்ராபெர்ரியும், மஞ்சளும் இஞ்சியும், மாம்பழம், அன்னாசி மற்றும் எலுமிச்சை, பீட்ரூட், கேரட் மற்றும் புதினா ஆரஞ்சு வீட்டில் இரவில் கண்ணாடி பாட்டிலில் தேவையான பொருட்களை சேர்த்து ஊறவைத்து மறுநாள் குடித்து வரலாம்
நன்மைகள்:
1.தொப்பை, உடல் எடையை குறைத்து, உடலின் மெட்டபாலிசத்தை அதிகரிக்கிறது.
2. நார்ச்சத்து நிரம்பிய பழங்களும், காய்களும் சேர்ந்த இந்த நீரை அவ்வப்போது குடித்து வருவதால், பசியைக் குறைத்து வயிறு நிரம்பிய உணர்வைத் தருகிறது. இதனால் நொறுக்குத்தீனிகளை நாட மாட்டோம்.
3. இதில் கொழுப்புச் சத்து இல்லாததால், கலோரிகளின் அளவும் குறைகிறது.
4. இந்த நீர் நாம் உண்ணும் உணவை உடல் உறிஞ்சிக்கொள்ள ஏதுவாக இருந்து, செரிமானத்திற்கும் உதவுகிறது. மலச்சிக்கல் பிரச்னையை தீர்க்கிறது. உடல் கழிவுகளை முழுவதுமாக வெளியேற்றுகிறது.
5. உடலுக்கு போதுமான அளவு நீர்ச்சத்தை வழங்குகிறது. அதனால் நீர்ச்சத்து குறைபாடு எழ வாய்ப்பில்லை. உடலை ஆற்றலுடனும் சுறுசுறுப்பாகவும் வைக்கிறது.
6. வெறும் நீர் குடிப்பதற்கு சுவையில்லாமல் இருப்பதால், அதிகமாக தண்ணீர் குடிக்காதவர்கள் கூட, சுவையான டீடாக்ஸ் நீரை விரும்பிப் பருகுவர். குழந்தைகள் கூட அவர்களுக்கு விருப்பமான பழங்கள் நிரம்பிய இந்த நீரை ஆர்வமாகக் குடித்து நாள் முழுக்க சுறுசுறுப்பாக இயங்குவர்.
7. இதில் உள்ள ஆன்டி ஆக்சிடென்ட்டுகள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து உடலை மிகவும் ஆரோக்கியமாக வைத்திருக்கும்.