இரைப்பை மற்றும் குடல் ஆரோக்கியத்திற்கு உதவும் இசப்கோல் பற்றி தெரியுமா?

Isabgol helps in intestinal health
Isabgol helps in intestinal health
Published on

சப்கோல் (Isabgol) என்பது ஸைலியம் ஹஸ்க் (Psyllium Husk) எனவும் அழைக்கப்படுகிறது. இது ப்ளான்டகோ ஓவட்டா (Plantago Ovata) என்ற தாவரத்தின் விதைகளிலிருந்து எடுக்கப்படும் உமி போன்ற பொருள். இதில் கரையக்கூடிய நார்ச்சத்து மிக அதிகம். இதனாலேயே இது ஜீரணக் கோளாறுகளை குணப்படுத்துவதில் மிகவும் பிரசித்தி பெற்றுள்ளது. இசப்கோலிலிருந்து இரைப்பை மற்றும் குடல் ஆரோக்கியத்திற்கு கிடைக்கும் நன்மைகள் என்னென்ன என்பதைப் பற்றி இந்தப் பதிவில் பார்க்கலாம்.

1. இயற்கையாகவே இசப்கோலில் டயட்டரி நார்ச்சத்து மிக அதிகம் உள்ளது. இது நாம் உட்கொள்ளும் உணவு, உணவுப் பாதையில் பல்வேறு மாற்றங்களுக்குட்பட்டு பின், கழிவுகள் மலக்குடலை சென்றடையும் வரையிலான அனைத்து இயக்கங்களும் சுலபமாக நடைபெற உதவுகிறது. இது உணவுக் கழிவுகளில் உள்ள நீர்ச்சத்தை உறிஞ்சி ஜெல் போன்ற பொருளை உற்பத்தி செய்து மலம் சுலபமாக வெளியேற உதவும்.

2. இசப்கோல் இரைப்பை குடல் இயக்கங்களை ஒழுங்குபடுத்தும். மலச்சிக்கல் மற்றும் வயிற்றுப்போக்கு பிரச்னைகளுக்கு நிவாரணம் அளிக்கும். இயற்கை முறையில் கழிவுகளை ஒருங்கிணைத்து கெட்டிப்படுத்தவும் சிறந்த மலமிளக்கியாக செயல்பட்டு அவற்றை வெளியேற்றவும் உதவி புரியும்.

3. இசப்கோலில் உள்ள கரையக்கூடிய நார்ச்சத்து, ஜீரண மண்டல உறுப்புகளின் மொத்த ஆரோக்கியத்திற்கும் சிறப்பான செரிமானத்திற்கும் உதவக்கூடிய, குடலில்  உள்ள நல்ல பாக்டீரியாக்களின் ஆரோக்கியமான வளர்ச்சிக்கு பெரிதும் உதவி புரியும்.

4. இரவில் ஒன்று அல்லது இரண்டு டீஸ்பூன் இசப்கோலை வெது வெதுப்பான தண்ணீர் அல்லது பாலில் கலந்து குடித்துவிட்டு படுக்கச் சென்றால் காலையில் மலம் சிக்கலின்றி வெளியேறும்.

5. வயிற்றுப்போக்கு உள்ள நேரங்களில் இசப்கோலை தயிருடன் சேர்த்து உட்கொள்வது நலம் தரும். இசப்கோலில் உள்ள நார்ச்சத்து குடலில் இருக்கும் அதிகப்படியான நீரை உறிஞ்சிக் கொண்டு கழிவுகளைக் கெட்டிப்படுத்தும். இதனால் பேதியாவது குறைந்து படிப்படியாக குணம் கிடைக்கும்.

இதையும் படியுங்கள்:
ஆரோக்கிய நடைப்பயிற்சிக்கு அவசியம் கவனத்தில் கொள்ளவேண்டிய 6 விஷயங்கள்!
Isabgol helps in intestinal health

6. உணவுக்கு முன்பு இசப்கோல் உட்கொள்வது, அதிக நேரம் பசி ஏற்படும் உணர்வை தடுத்து நிறுத்தும். இதனால் உட்கொள்ளும் உணவின் அளவு குறையும். ஜீரணம் மற்றும் மெட்டபாலிசம் சிறந்த முறையில் நடைபெறும். இதனால் உடல் எடையை சமநிலையில் வைத்துப் பராமரிக்க முடியும்.

7. இசப்கோல், ஜீரணத்திற்கு உதவும் என்சைம்களின் உற்பத்தியை அதிகரிக்க பெரிதும் உதவுகிறது. இதன் மூலம் உணவு நன்கு உடைக்கப்பட்டு ஊட்டச்சத்துக்கள் சிறந்த முறையில் உறிஞ்சப்பட்டு உடலுக்குள் சேரும்.

8. இசப்கோலில் உள்ள ஜெல் போன்ற நார்ச்சத்து சர்க்கரை மற்றும் கார்போஹைட்ரேட் சத்துக்களை மெதுவாக உடலுக்குள் உறிஞ்சப்படச் செய்யும். இதனால் இரத்தத்தில் சர்க்கரை அளவு திடீரென உயர்வது தடுக்கப்படும். இது நீரிழிவு நோயாளிகளின் இரத்த சர்க்கரை அளவை சமநிலையில் வைத்துப் பராமரிக்க உதவும்.

ஜீரண மண்டல உறுப்புகளின் ஆரோக்கியத்திற்கும் அவற்றின் செயல்பாடுகளுக்கும் இத்தனை சிறப்பாக உதவக்கூடிய இசப்கோலை தேவையானபோது நாமும் உட்கொண்டு நலம் பல பெறுவோம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com