வேகமாக நடைப்பயிற்சி மேற்கொள்வது நல்லதுதான். ஆனால், அப்படி விறுவிறுப்பாக நடக்கும்பொழுது அதன் முழு பலனையும் பெறுவதற்கான சில யோசனைகளை இந்தப் பதிவில் பார்ப்போம்.
தினமும் காலையில் 30 நிமிடங்கள் வாக்கிங் செல்ல உடலில் ஏகப்பட்ட நன்மைகள் ஏற்படும். பொதுவாகவே, நடைப்பயிற்சி என்பது நம்மை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள உதவும். அதுவும் விறுவிறுப்பான நடைப்பயிற்சி நம் உடலில் உள்ள அதிகமான கலோரிகளை எரிக்க உதவும். தினமும் நடைப்பயிற்சி செய்வது பக்கவாதம், இதய நோய் வராமல் காப்பதுடன், நீரிழிவு வகை 2 மற்றும் பிற நோய்கள் உருவாகும் அபாயத்தையும் குறைக்கும்.
1. நடையின் வேகம்: விறுவிறுப்பான நடைப்பயிற்சியின்பொழுது நம் உடலில் இருந்து வியர்வை அதிகமாக வெளியேறும். அத்துடன் விரைவில் சோர்வடைந்து விடுவோம். இதனால் நடைப்பயிற்சி செய்யும் நேரத்தையும், தூரத்தையும் குறைத்து விடும் அபாயம் உள்ளது. எனவே, தவறான வேகத்தில் நடப்பதைத் தவிர்த்து நிமிடத்திற்கு 100 அடிகள் (ஸ்டெப்ஸ்) எடுத்து வைப்பது நம்மை தரும். நீண்ட தூரம் நடந்தாலும் சோர்வடையாமல் இருக்க உதவுவதுடன் நடக்கும் நேரத்தையும் குறைக்காது. நடைப்பயிற்சி என்பது மன அழுத்தம் இல்லாத சிறந்த உடற்பயிற்சியாகும்.
2. சரியான காலணிகளை தேர்வு செய்வது: வேகமாக நடக்கும்பொழுது நாம் சரியான அளவுள்ள காலணிகளை அணிந்து நடப்பது அவசியம். இல்லையெனில் குதிகால் வலி, உள்ளங்கால் வலி, கெண்டைக்கால் பகுதியில் வலி என கால்களில் பிரச்னைகளை ஏற்படுத்தி விடும்.
3. ஆடைகளில் கவனம்: நடைப்பயிற்சியின்போது இறுக்கமான உடைகளை அணிவதைத் தவிர்க்க வேண்டும். இறுக்கமான உள்ளாடைகள், ஜீன்ஸ் போன்றவற்றை அணிந்து நடக்கும்பொழுது அசௌகரியத்தை ஏற்படுத்தி நம்மால் நீண்ட தூரம் நடைப்பயிற்சி செய்ய முடியாமல் போய்விடும். நடைப்பயிற்சி செய்யும்போது அதற்குரிய ஆடைகளை தேர்ந்தெடுத்து அணிவதே நல்லது.
4. நடையில் கவனம்: நடக்கும்பொழுது முதுகை வளைத்துக் கொண்டு நடப்பதும் (கூன் போட்டு), நிமிர்ந்து நடக்காமல் தோள்களை சாய்த்துக்கொண்டு நடப்பதும் தோள் மற்றும் முதுகில் வலிகளை உண்டாக்கும். வேகமாக நடைப்பயிற்சி செய்யும்பொழுது கைகளையும் நாம் நடக்கும் திசையில் வேகமாக அசைத்து நடப்பது நல்லது. இப்படி இரு கைகளையும் வேகமுடன் அசைத்து நடக்க, அவை நம் உடலில் அதிர்வுகளை ஏற்படுத்தி எடையை குறைக்க உதவுவதுடன் அனைத்து உடல் உறுப்புகளையும் நன்கு செயல்பட வைக்கும்.
5. தண்ணீர் அருந்துவது: நடைப்பயிற்சியின்போது தண்ணீர் குடிப்பதை தவிர்க்கவும். சிலர் நடைப்பயிற்சி தொடங்கும் முன்பு நிறைய தண்ணீர் குடிப்பார்கள். இது சரியான முறையல்ல. தண்ணீர் குடித்தால் 20 நிமிடங்கள் கழித்துதான் நடைப்பயிற்சிக்கு செல்ல வேண்டும். நடைப்பயிற்சி முடிந்ததும் தாராளமாக தண்ணீர் குடிக்கலாம். இடையில் தாகம் எடுத்து தண்ணீர் குடிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டால் சிறிது தண்ணீர் குடித்துவிட்டு ஓய்வு எடுத்து பின் நடைப்பயிற்சியை தொடரவும்.
6. நடப்பதற்கான நேர அளவு: ஒரு நாளைக்கு நான்காயிரம் அடிகள் (ஸ்டெப்ஸ்) நடப்பது உடலில் இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்கும். சிலரால் தொடர்ந்து 30 நிமிடங்கள் நடைப்பயிற்சி செய்வது சிரமமாக இருக்கும். அவர்கள் காலையில் 10 நிமிடம், மாலையில் 10 நிமிடம், இரவு படுக்கச் செல்வதற்கு முன்பு பத்து நிமிடம் என பிரித்துக் கொண்டு நடைப்பயிற்சி செய்ய சர்க்கரை அளவை கட்டுப்படுத்தி உடலை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ள உதவும். சிறந்த நடைப்பயிற்சியை செய்வதன் மூலம் இரத்த ஓட்டம் தூண்டப்பட்டு உடலில் கிளைசெமிக் கட்டுப்பாட்டை மேம்படுத்த உதவும்.
மன ஆரோக்கியத்தையும், செரிமான அமைப்பை மேம்படுத்தவும், எலும்புகள் மூட்டுகளை பலப்படுத்தவும், அதிகப்படியான உடல் கொழுப்பை குறைக்கவும் உதவும் நடைப்பயிற்சியே சிறந்த உடற்பயிற்சி.