மத்தியப் பிரதேசத்தின் ஒரு மாவட்டமாகிய சத்தர்பூரில் வளர்ந்து வருவது கரஞ்சா மரம். இம்மரம் ஆயுர்வேத மருந்துகளின் தயாரிப்பில் முக்கியப் பங்காற்றுகிறது. இம்மரத்தின் கிளைகளிலிருந்து பறிக்கப்படும் குச்சிகள் பாரம்பரியமாக அங்கு பல் துலக்கும் பிரஷ்ஷாக உபயோகப்படுத்தப்பட்டு வருகிறது. இயற்கை முறையிலான இந்த பிரஷ் பற்களை சிறந்த முறையில் சுத்தப்படுத்துவதுடன், பற்களில் சொத்தை உண்டாகாமல் பாதுகாக்கவும் ஈறுகளின் வீக்கத்தைக் குறைக்கவும் உதவும். மேலும், பாக்டீரியாக்களினால் உண்டாகும் ஈறு வீக்கம், மவுத் அல்சர் மற்றும் தாடை எலும்புகளை சிதைவடையச் செய்யும் பயோரியா (Pyorrhea) என்ற நோயை குணப்படுத்தவும் உதவும் இந்த பிரஷ். கரஞ்சா மரத்திலிருந்து நமக்குக் கிடைக்கும் வேறு பல நன்மைகள் என்னென்ன என்பதை இப்பதிவில் பார்க்கலாம்.
கரஞ்சா குச்சிகளால் தொடர்ந்து பற்களைத் துலக்கி வர, பற்கள் பலமடையும். ஒட்டுமொத்த வாய்ப்பகுதியின் ஆரோக்கியம் மேன்மையுறும். பல் வலி, பற்சொத்தை, பல் வீக்கம் குணமாகும். பஞ்சாங்கா (Panchanga) எனப்படும் கரஞ்சா மரத்தின் வேர், பட்டை, இலை, பூ மற்றும் பழம் ஆகிய ஐந்து பாகங்களைச் சேர்த்து எரித்துச் சாம்பலாக்கி அந்தச் சாம்பலுடன் சிறிது உப்பு சேர்த்துக் கலந்து வலி உள்ள பல் மீது தடவி வைத்தால் பல் வலி குணமாகும். பல் சம்பந்தப்பட்ட நோய்களைக் குணப்படுத்துவதே இந்த மரத்திலிருந்து கிடைக்கக்கூடிய சிறந்த பலனாகக் கூறப்படுகிறது.
பல் பாதுகாப்பிற்கு அப்பால், வேறு பல நோய்களைக் குணப்படுத்தவும் இம்மரத்தின் வெவ்வேறு பாகங்களும் பயன்படுகின்றன. இவற்றிலிருந்து தயாரிக்கப்படும் ஆயுர்வேத மருந்துகள் ஆர்த்ரைடிஸ், உடலில் பல்வேறு காரணங்களால் ஏற்படும் எரிச்சல் மற்றும் வலிகள் ஆகியவற்றை குணப்படுத்தும் புனிதமான மருந்தாகக் கருதப்பட்டு வருகிறது. கரஞ்சா ஆயில் தலையில் உள்ள பொடுகைக் குணப்படுத்தவும், முடி நன்கு வளரவும் உதவும். சருமத்தில் உள்ள பருக்களை நீக்கவும் இது உதவி புரியும்.
கரஞ்சா டாட்டன் (Datun) எனப்படும் இந்த மரத்தின் குச்சியினால் தொடர்ந்து பல் துலக்க, அதன் ஈர்க்குகள் சிறப்பாக செயல் புரிந்து பற்களை சுத்தப்படுத்தும். மேலும், அதிலுள்ள ஆன்டி பாக்டீரியல் குணமானது தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்களின் பெருக்கத்தைக் கட்டுப்படுத்தும்; வாய் துர்நாற்றத்தைப் போக்கவும், ஈறு பிரச்னைகளை தீர்க்கவும் உதவும். ஈறுகள் வலுப்பெறவும் வாய்ப் பகுதி ஆரோக்கியமடையவும் கரஞ்சா டாட்டன் உதவுகிறது.
கரஞ்சா டாட்டன் குச்சிகளை அளவுக்கு அதிகமாக அல்லது தவறான முறையில் உபயோகிப்பது எதிர்மறை விளைவுகளை உண்டுபண்ணக் கூடும். ஆகையால், இவற்றை உபயோகிக்க ஆரம்பிக்கும் முன் ஒரு பல் டாக்டரையோ ஆயுர்வேதிக் நிபுணரையோ கலந்து ஆலோசித்த பிறகு உபயோகிப்பது நன்மை தரும். இதன் நற்பண்புகளையும், முறையோடு உபயோகிக்கத் தவறினால் விளையும் தீங்குகளையும் நன்கு புரிந்து கொண்டால் நம் பற்கள் மற்றும் வாய்ப் பகுதி நிறைந்த ஆரோக்கியம் பெறும். கரஞ்சா மரத்திற்கு தமிழில் புங்கை மரம் எனப் பெயர்.