நொச்சி இலை சித்த மருத்துவத்தில் அதிகமாகப் பயன்படுத்தப்படுகிறது. இது மலைப்பகுதியில் வளரக்கூடிய ஒரு மூலிகையாகும். மேலும், வேலி, தரிசு நிலங்களிலும் இயற்கையாகவே வளரக்கூடியது. நொச்சி இலை துவர்ப்பு மற்றும் காரச் சுவையைக் கொண்டது. இதனுடைய இலை, பூ, வேர், பட்டை என்று அனைத்துமே மருத்துவத்திற்குப் பயன்படுகிறது. அத்தகைய சிறப்பு வாய்ந்த நொச்சி இலையின் மருத்துவ பயன்களைப் பற்றி இந்தப் பதிவில் காண்போம்.
1. சளி, இருமல், தலைவலி, சைனஸ் போன்ற பிரச்னைகள் இருக்கும்போது நொச்சி இலையை ஒரு கைப்பிடி அளவு தண்ணீரில் கொதிக்க வைத்து ஆவி பிடித்தால், அனைத்து பிரச்னைகளும் குணமாகும்.
2. ஆஸ்துமா பிரச்னை உள்ளவர்கள் நொச்சி இலையுடன் பூண்டு, மிளகு சேர்த்து இடித்து அதனுடைய சாறை குடிக்க, ஆஸ்துமா பிரச்னை நாளடைவில் குணமாகும்.
3. உடலில் தேமல், அலர்ஜி போன்ற சருமப் பிரச்னைகள் ஏற்பட்டால், நொச்சி இலையை இடித்து அதனுடைய சாறை எடுத்து தேய்ப்பதின் மூலம் சரும நோய்கள் குணமாகும்.
4. வீட்டில் கொசுக்கள் அதிகமாக வந்தால், காய்ந்த நொச்சி இலையை எடுத்து தீ மூட்டினால் அதன் புகைக்கு கொசுக்கள் அழிந்துவிடும்.
5. எலும்பு வலி, மூட்டு வலி, இடுப்பு வலி, வீக்கம் போன்ற பிரச்னைகள் இருப்பவர்கள் நொச்சி இலையை இடித்து அதன் சாறுடன் நெய் மற்றும் மிளகுத்தூள் சேர்த்து கலந்து குடித்து வர வலி பிரச்னை குணமாகும்.
6. உடலில் அசதி, வலி போன்ற பிரச்னை இருப்பவர்கள் சுடு தண்ணீரில் நொச்சி இலையை சேர்த்து குளித்து வர புத்துணர்ச்சியாக உணர்வார்கள். பிரசவித்தவர்களுக்கு உடல் அசதி குறையும்.
7. நொச்சி இலை சாறை அரிசி கஞ்சியுடன் கலந்து உடலில் உள்ள புண்கள் மீது தடவுவதால், புண்கள் குணமாகும்.
8. கருநொச்சியை கீழ்வாதம், முகவாதம், கால் வீக்கம் போன்ற பிரச்னைகளுக்குப் பயன்படுத்துகின்றனர்.
9. நம் வீட்டில் சாம்பிராணி போடும்போது நொச்சி இலையையும் அதனுடன் சேர்த்து போடும்போது அது சிறந்த கிருமி நாசினியாகவும், பூச்சி விரட்டியாகவும் செயல்படும். நம் வீட்டில் உள்ள சின்னச் சின்ன பூச்சிகளான சிலந்தி, கரப்பான் போன்றவற்றை விரட்டும் தன்மையைக் கொண்டது.
10. தானியங்கள், பருப்பு, அரிசி போன்றவற்றை சேமித்து வைத்திருக்கும் பாத்திரத்தில் நொச்சி இலையை போட்டு வைத்தால் புழு, வண்டுகள் போன்றவை வராது.
11. நன்றாகத் தூக்கம் வருவதற்கு நொச்சி இலையை அடைத்து தலையணையாகப் பயன்படுத்த வேண்டும். இதனால் கழுத்து வலி, நரம்புப் பிரச்னைகள் கூட குணமாகும்.