தீபாவளி லேகியம் செய்வது எப்படி தெரியுமா?

தீபாவளி லேகியம் செய்வது எப்படி தெரியுமா?

தீபாவளி பலகாரங்கள் சாப்பிடும் நாட்களில் காலையில் வெறும் வயிற்றில் சுண்டைக்காய் அளவு இதனை வாயில் போட்டுக்கொண்டு பிறகு எந்த எண்ணெய் பலகாரங்கள், ஸ்வீட்கள் சாப்பிட்டாலும் வயிற்றுக்கு ஒன்றும் செய்யாது. நல்ல ஜீரண சக்தியை கொடுக்கக்கூடியது. வயிற்று உப்புசம், அஜீரணம், வாயு தொல்லையை போக்கக்கூடியது. சிலர் இந்த லேகியத்தைத் தயாரிக்க நெய்க்கு பதில் நல்லெண்ணெய் பயன்படுத்தியும் செய்வார்கள்.

இந்த லேகியத்தைத் தயாரிக்க என்னென்ன பொருட்கள் தேவை என்பதை முதலில் பார்ப்போம்.

சித்தரத்தை - 50 கிராம், அரிசி திப்பிலி – 10, கண்டந்திப்பிலி – 10, மிளகு - 2 ஸ்பூன், ஓமம் - 2 ஸ்பூன், சீரகம் - 1 ஸ்பூன், சுக்கு – சிறிது, தனியா - 1 கப், இஞ்சி - 50 கிராம், வெல்லம் - 200 கிராம், நெய் - 4 ஸ்பூன், தேன் - சிறிது (அடுப்பில் இருந்து இறக்கி கடைசியாகச் சேர்க்க வேண்டியது).

முதலில் சித்தரத்தையை நன்கு தட்டி எடுத்துக் கொள்ளவும். சுக்கை நசுக்கி தோலை நீக்கி வைக்கவும். வெறும் வாணலியில் இரண்டு இரண்டு பொருட்களாகப் போட்டு நன்கு சூடு வரும் வரை வறுத்தெடுக்கவும். இஞ்சியை தோல் நீக்கி சிறு சிறு துண்டங்களாக நறுக்கவும். மிக்ஸியில் இஞ்சியை தவிர, எல்லா பொருட்களையும் போட்டு நைசாக பொடித்துக் கொள்ளவும். கடைசியாக இஞ்சி துண்டுகளையும் சேர்த்து தண்ணீர் விட்டு அரைத்து எடுக்கவும்.

இதையும் படியுங்கள்:
வாயு கோளாறு பிரச்னைகளுக்கு நிவாரணமாகும் ஓமம்!
தீபாவளி லேகியம் செய்வது எப்படி தெரியுமா?

வாணலியில் வெல்லத்தைப் பொடித்துப் போட்டு சிறிதளவு தண்ணீர் விட்டு வெல்லம் நன்கு கரைந்ததும் கல், மண் போக வடிகட்டி எடுக்கவும். வடிகட்டிய வெல்லத் தண்ணீரை திரும்பவும் வாணலியில் விட்டு பொடித்து வைத்துள்ள மருந்து பொருட்களை சேர்த்து அடுப்பை நிதானமான தீயில் வைத்து கிளறவும். அவ்வப்போது ஒவ்வொரு ஸ்பூன் நெய்யாக விட்டு கிளறிக்கொண்டே இருக்கவும். இது ஐந்தே நிமிடத்தில் நன்கு சுருண்டு வந்துவிடும். சுருளக் கிளறி இறக்கி, சிறிது ஆறியதும் அதில் தேன் 2 ஸ்பூன் கலந்து ஈரம் இல்லாத டப்பாவில் போட்டு பத்திரப்படுத்தவும். இந்த லேகியத்தை தீபாவளி பண்டிகைக்கு மட்டுமின்றி, விசேஷங்களின்போது அதிக எண்ணெய் மற்றும் இனிப்புப் பொருட்கள் சாப்பிட நேர்ந்தால் எளிதில் ஜீரணமாகவும் அவ்வப்போது செய்து பயன்படுத்திக் கொள்ளலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com