நம் உடலுக்குத் தேவையான சக்தியை அளிக்க மூன்று வேளையும் நாம் ரைஸ், டிபன் வகைகள் போன்ற திட உணவுகளையே உட்கொண்டு வருகிறோம். மதிய உணவு அல்லது இரவு உணவுக்கு முன் பசியைத் தூண்டுவதற்காக சூப் அருந்துவதை சிலர் வழக்கமாகக் கொண்டிருக்கலாம். சூப் அருந்துவதால் நம் உடலுக்கு அதிகளவு நீர்ச் சத்து, வைட்டமின்கள், மினரல்கள் போன்ற நுண்ணுயிர்ச் சத்துக்கள் கிடைக்கும். மேலும் சூப்கள் மெட்டபாலிசம் சிறந்த முறையில் நடைபெறவும் உதவும். அவ்வாறு மெட்டபாலிசத்திற்கு உதவக் கூடிய 9 வகை சூப்கள் என்னென்ன என்பதை இப்பதிவில் பார்க்கலாம்.
1. ஸ்பைசி டொமாட்டோ சூப்: தக்காளி சூப்பில் உள்ள கேப்ஸைசின் என்ற பொருள் மெட்டபாலிச ரேட்டை அதிகரிக்க உதவும். இதன் மூலம் கொழுப்பும் அதிகளவு எரிக்கப்படும். இந்த சூப்புடன் சில்லி ஃபிளேக்ஸ் அல்லது ஹாட் சாஸ் சேர்த்து குடிக்கும்போது பலன் இன்னும் கூடும்.
2. இஞ்சி கேரட் சூப்: இஞ்சியில் உள்ள தெர்மோஜெனிக் குணமானது நம் உடல் உஷ்ணத்தையும், மெட்டபாலிச ரேட்டையும் அதிகரிக்க உதவி புரியும். கேரட்டில் உள்ள அதிகளவு நார்ச்சத்து எடைக் குறைப்பிற்கு சிறந்த முறையில் உதவும்.
3. பருப்பு நீர் சூப்: ஏதாவது ஒரு வகைப் பருப்பை வேக வைத்து அதிலுள்ள நீரைப் பிரித்தெடுத்து அதில் சூப் செய்து குடிக்கலாம். இதிலிருந்து ப்ரோட்டீன் மற்றும் நார்ச்சத்து அதிகம் கிடைக்கும். இவை இரண்டும் அதிக நேரம் வயிற்றில் தங்கி பசியுணர்வை தள்ளிப் போகச் செய்யும். இரத்த சர்க்கரை அளவை சமநிலைப்படுத்த உதவும். மெட்டபாலிச ரேட்டையும் உயர்த்தும்.
4. சிக்கன் - வெஜிட்டபிள் சூப்: லீன் சிக்கன், ப்ரோட்டீன் சத்தும், இந்த சூப்பில் சேர்க்கப்படும் வெவ்வேறு வகை காய்கறிகள் நார்சத்தும் தரக்கூடியவை. இவை இரண்டும் மெட்டபாலிச ரேட்டை அதிகரிக்க உதவுபவையாகும்.
5. மிஸோ சூப்: நொதிக்கச் செய்து தயாரிக்கப்படும் ஒரு வகை உணவு மிஸோ. இதில் தயாரிக்கப்படும் சூப் செரிமான உறுப்புகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்தக் கூடியது. இதனால் ஜீரணம் மற்றும் மெட்டபாலிஸம் இரண்டும் சிறந்த முறையில் நடைபெறும். இதன் மூலம் உடலின் எடையை சமநிலையில் வைத்துப் பராமரிக்கவும் முடியும்.
6. முட்டைக் கோஸ் சூப்: குறைந்த அளவு கலோரி கொண்ட காய் முட்டைக் கோஸ். நார்ச்சத்து இதில் அதிகம் உள்ளது. இதில் சூப் செய்து குடிக்கையில் அதிக நேரம் வயிறு நிறைந்த உணர்வு ஏற்படுவதுடன் மெட்டபாலிஸமும் உயர்ந்த அளவில் நடைபெறும்.
7. பசலைக்கீரை - பச்சைப் பட்டாணி சூப்: இவை இரண்டிலுமே இரும்புச் சத்து மற்றும் வைட்டமின் சத்துக்கள் அதிகம் உள்ளன. இரும்புச் சத்து உடலுக்குள் சக்தியை சீரான அளவில் வெளிக்கொண்டு வர உதவும். மெட்டபாலிசம் சரியான அளவில் நடைபெறவும் உதவும்.
8. பீட்ரூட் சூப்: பீட்ரூட்டில் உள்ள நைட்ரேட்ஸ் இரத்த ஓட்டம் சிறந்த முறையில் பாய உதவும். பீட்ரூட் சூப் கல்லீரல் ஆரோக்கியமாக செயல்பட உதவும். இந்த இரண்டு செயல்களுமே சிறந்த முறையில் மெட்டபாலிசம் நடைபெற உதவி புரியும்.
9. ப்ரோகோலி - காலிபிளவர் சூப்: ப்ரோகோலி-காலிபிளவர் இரண்டுமே க்ரூஸிஃபெரஸ் வெஜிட்டபிள்ஸ். இவை இரண்டிலும் கொழுப்பை எரிக்கக் கூடிய ஒரு வகைக் கூட்டுப் பொருள் உள்ளது. இது மெட்டபாலிசம் சிறப்பாக நடைபெற உதவும். மேலும் இக் காய்களில் உள்ள நார்ச் சத்து செரிமானம் எந்தவித தடங்கலுமின்றி ஸ்மூத்தாக நடைபெற உதவும்.
மெட்டபாலிச அளவை உயர்த்த உதவும் இத்தனை வகை சூப்களை தினம் ஒன்றாக நாமும் செய்து குடித்து நன்மை பெறுவோம்.