உடலில் மருக்கள் தோன்றுவதற்கான காரணங்கள் தெரியுமா?

மருக்கள்
மருக்கள்
Published on

ருக்கள் நமது சருமத்தின் திசுக்கள். எங்காவது சருமத்திலிருந்து தொங்குவது போல இருக்கும். ஒரு சிறிய மச்சம் போலவும்,  கடுகு அல்லது மிளகு அளவில் இருக்கும். இவை பொதுவாக சில மில்லி மீட்டர்கள் முதல் ஒரு சென்டி மீட்டர் வரை அளவு இருக்கும். இவை பழுப்பு நிறத்தில் இருந்து அடர் பழுப்பு வரை இருக்கலாம்.

மருக்கள் உருவாகும் இடங்கள்:

நமது உடலில் சருமத்தில்  உராய்வுகள் ஏற்படும் இடங்களில், அதிக மடிப்புகள் இருக்கும் இடங்களிலும் மருக்கள் தோன்றுகின்றன. கழுத்து, அக்குள், கண் இமைகள், இடுப்பு, உள் தொடைகள், மார்பகத்தின் கீழ், போன்ற சருமம் மடிந்த பகுதிகளில் இவை காணப்படுகின்றன.

மருக்கள் உருவாக முக்கியமான காரணங்கள்:

1. உடல் பருமன்: இயல்பான எடையை விட கூடுதல் எடை உள்ளவர்களுக்கும், அதிக உடல் பருமன் உள்ளவர்களுக்கும் மருக்கள் தோன்றும். ஏனெனில், அதிகப்படியான சரும மடிப்புகள் அதிக உராய்வுகளை உண்டாக்கி மருக்கள் தோன்ற வழிவகுக்கும்.

2. ஹார்மோன்கள் அளவில் மாற்றங்கள்: கருவுற்றிருக்கும் பெண்களுக்கு உடலில் ஹார்மோன்கள் அளவில் மாற்றங்கள் ஏற்படும். ஈஸ்ட்ரோஜன் மற்றும் புரஜெஸ்டிரான் அளவுகள் அதிகரிக்கும்போது மருக்கள் தோன்றலாம்.

3. வயது: இவை 40 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தோன்றுகின்றன. சில சமயம் சிறியவர்களுக்கும் வரலாம். ஆனால், இவை ஒருவரிடம் இருந்து மற்றவர்களுக்கு பரவக்கூடியவை அல்ல. மேலும், வயதானவர்களுக்கு மருக்கள் மிகவும் பொதுவானவை. இவை சருமத்தின் இயற்கையான, வயதான செயல்முறை காரணமாக இருக்கலாம்.

4. மாதவிடாய் நிறுத்தம்: பெண்களுக்கு மாதவிடாய் நிறுத்தம் போன்ற ஹார்மோன் மாற்றங்கள் நிகழும்போது மருக்கள் தோன்றும் வாய்ப்புகள் இருப்பதால் மருத்துவரை அணுகி சிகிச்சை எடுத்துக் கொள்ளலாம்.

5. நீரிழிவு நோய்: நீரிழிவு நோய், டைப் டு நீரிழிவு, சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு மருக்கள் தோன்றலாம். உடலில் கொழுப்பு சார்ந்த பிரச்னைகள் உள்ளவர்களுக்கும் மருக்கள் வரலாம்.

6. மரபு: குடும்பத்தில் மூத்தவர்களுக்கு முன்னோர்களுக்கு இருந்தால் மருக்கள் தோன்றும் வாய்ப்புகள் அதிகம்.

மருக்களை எப்படிக் கையாள்வது?

1. ஆரோக்கியமான சரியான எடையில் இருந்தால் மருக்கள் தோன்றுவதைக் குறைக்கலாம்.

2. இரத்தத்தில் சர்க்கரை அளவு மற்றும் இன்சுலின் அளவுகளை கண்காணித்து வந்தால் மருக்கள் மேலும் பரவாமல் தடுக்கலாம்.

3. மருக்கள் தோன்றும் இடங்களில் படும்படியாக நகைகள் மற்றும் முரட்டுத்தனமான துணியில் உடைகள் அணிவதைத் தவிர்க்கலாம்.

இதையும் படியுங்கள்:
இரண்டாவது குழந்தைக்குத் திட்டமிடும்போது கவனத்தில் கொள்ளவேண்டிய விஷயங்கள்!
மருக்கள்

4. சருமம் மற்றும் ஆடைகளுக்கு இடையே உள்ள உராய்வை குறைக்க, வியர்வையை உறிஞ்சக்கூடிய வகையிலான தளர்வான ஆடைகளை அணிய வேண்டும். கழுத்து, அக்குள் மற்றும் இடுப்பு போன்ற உராய்வு ஏற்படக்கூடிய பகுதிகளில்  குளித்து முடித்த பின் உடலை நன்றாக ஈரம் போகத் துடைக்க வேண்டும்.

5. உடலை நீரேற்றமாக வைத்துக்கொள்ளுவது உராய்வு மற்றும் எரிச்சலை குறைக்கும். ஆகவே, போதுமான அளவு நீர் பருக வேண்டும்.

6. சரும மடிப்புகள் உள்ள இடங்களை தொடர்ந்து சுத்தம் செய்து உலர்வாக வைத்துக் கொள்வது நல்லது.

7. அழகியல் சார்ந்த காரணங்களுக்காகவும், வசதியாக உணர்வதற்காகவும் இத்தகைய மருக்களை நீக்க சிலர் சிகிச்சை எடுத்துக் கொள்கிறார்கள்.  ஆனால், இவை வலியற்றவை. எவ்விதப் பிரச்னையும் தராதவை. இவற்றால் எந்தவித ஆபத்தும் இல்லை என்பது ஆறுதலான விஷயம்.

8. மருக்களில் இரத்தம் கசியும் பிரச்னை ஏற்பட்டால் உடனே மருத்துவரை பார்ப்பது நலம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com