இரண்டாவது குழந்தைக்குத் திட்டமிடும்போது கவனத்தில் கொள்ளவேண்டிய விஷயங்கள்!

இரண்டாவது குழந்தை
இரண்டாவது குழந்தைhttps://www.toptamilnews.com
Published on

ன்றைய அவசர உலகில் பெற்றோர்கள் பலரும் வேலை பளு மற்றும் பிற தனிப்பட்ட கடமைகள் காரணமாக இரண்டாவது குழந்தை பெற்றுக்கொள்வதைத் தள்ளிப் போடுகிறார்கள். அதிலும் முதல் குழந்தை பெற்றுக் கொள்வதைத் தாமதிக்கும்பொழுது இரண்டாவது குழந்தை பெற்றுக் கொள்வதும் தாமதமாகிறது. குறிப்பாக, இந்தத் தலைமுறை அம்மாக்கள் இரண்டாவது குழந்தை பெற்றுக் கொள்வதில் அதிகம் விருப்பம் காட்டுவதில்லை. காரணம், இருவரும் வேலைக்குச் செல்வது மற்றும் குழந்தைகளை யார் பராமரிப்பது என்ற கேள்வி எழுவதால் அதைப் பற்றி யோசிப்பதில்லை.

இது அவரவர்களுடைய தனிப்பட்ட குடும்பப் பிரச்னை. இதில் அடுத்தவர்களின் கருத்து தேவையில்லை என்றாலும், ‘ஏன் இரண்டாவது குழந்தைக்குத் திட்டமிட வேண்டும் என்பதற்கும் உறுதியான சில காரணங்கள் உள்ளன. நம் காலத்திற்குப் பிறகு அவர்கள் தனி மரமாக நிற்பதை எந்த பெற்றோரும் விரும்ப மாட்டார்கள். தனித்து வளர்ந்தால் அவர்களுக்கு வாழ்நாள் முழுவதும் உறுதுணையாக யாரும் இருக்க மாட்டார்கள்.

சில சமயங்களில் ஒற்றைப் பிள்ளையை வைத்துக்கொண்டிருப்பவர்கள் அவர்களின் பிரச்னைகளை சமாளிக்க அல்லது அவர்களைப் புரிந்துகொள்ள பெற்றோர்களுக்கு தலைமுறை இடைவெளி காரணமாக அதிகம் தெரிவதில்லை. இதுவே உடன் பிறந்தவர்கள் இருந்தால் தனது உடன்பிறப்பை எவ்வாறு சிறப்பாக கையாள்வது என்பது தெரியும். அத்துடன் நமக்குத் தேவைப்படும்போது கூடுதல் கவனிப்பையும், பாதுகாப்பையும் நம் குழந்தைகள் இருவரும் மாறி மாறி வழங்குவதற்கு வாய்ப்புகள் உள்ளன. இருவரின் வாழ்க்கை முழுவதும் உடன் பிறந்தவர்கள் அவசரத்திற்கு உதவியாகவும், ஒற்றுமையாகவும் இருப்பார்கள்.

வீட்டில் ஒரு குழந்தை மட்டும் இருந்தால் பெரும்பாலும் அவர்களுக்கு விட்டுக்கொடுக்கும் குணம் இல்லாமல் வளருவார்கள். இதுவே இரண்டு குழந்தைகள் இருக்கும் வீட்டில் போட்டிகள் இருந்தாலும் அன்பும் செல்லமும் பிரித்து கொடுக்கப்படுவதால் அவர்களுக்கு மற்றவர்களுடன் ஒத்துப்போகும் குணமும், சிக்கல்களை தீர்க்கும் திறனும் உண்டாகும்.

அதேபோல், இரண்டாவது குழந்தைக்குத் திட்டமிடும்போது சில விஷயங்களை மனதில் கொள்ள வேண்டும்.

குழந்தைகளை யார் பராமரிப்பது: தாத்தா, பாட்டி பார்த்துக் கொள்வார்களா? அல்லது டே கேரில் விடப்போகிறீர்களா? என்பதை யோசியுங்கள். தாத்தா, பாட்டி என்றால் அவர்களின் ஆரோக்கியத்தை கருத்தில் கொண்டு அவர்களால்  பார்த்துக்கொள்ள முடியுமா என்பதை தெரிந்து கொள்ளுங்கள். டே கேரில் என்றால் எத்தனை வயதில் விடப்போகிறோம்? அதுவரை குழந்தையை எப்படி வளர்ப்பது என்பதைத் தீர்மானித்துக் கொள்ளுங்கள்.

பொருளாதார சூழ்நிலை: பெரும்பாலான குடும்பங்களில் இரண்டாவது பிள்ளை பெற்றுக்கொள்வதற்கு தடையாக இருப்பது பொருளாதார சூழ்நிலைதான். எனவே, அதைப் பற்றி சிந்தியுங்கள். இரண்டாவது குழந்தை பெற்றுக்கொள்வதற்கு முன்பு பணத்தை சேமிக்கத் தொடங்குங்கள். குடும்பம் பெரிதாவதால் அன்றாட தேவைக்கும், மருத்துவ செலவிற்கும், பள்ளியில் சேர்ப்பதற்குமான பணத்தை சேமிக்க ஆரம்பிக்க வேண்டியது அவசியம்.

இதையும் படியுங்கள்:
அமெரிக்க பாலைவனத்தில் நடைபெறும் எரியும் மனிதன் திருவிழா தெரியுமா?
இரண்டாவது குழந்தை

உடல் ஆரோக்கியம்: சில பெண்களுக்கு பொருளாதார வசதி மற்றும் குழந்தைகளை பெற்றெடுத்தால் பார்த்துக்கொள்ள வீட்டில் பெரியவர்களும் இருப்பார்கள். ஆனால், முதல் குழந்தை பெற்றெடுக்கும்பொழுது ஏற்பட்ட தைராய்டு பிரச்னை, உடல் பருமன், சர்க்கரை நோய் போன்ற காரணங்களால் உடல் ஆரோக்கியம் சரியாக இருக்காது. அப்படிப்பட்டவர்கள் தேவையான மருத்துவப் பரிசோதனைகளை செய்து கொண்டு டாக்டரின் ஆலோசனைப்படி இரண்டாவது குழந்தை பெற்றுக்கொள்ள திட்டமிடலாம்.

மனம் விட்டுப் பேசி முடிவெடுப்பது: சிலருக்கு வீடும், வேலை செய்யும் இடமும், வேலையின் தன்மையும் மன அழுத்தம் தருவது போல் இருக்கும். இவர்கள் வீட்டில் உள்ளவர்களுடன், குறிப்பாக கணவருடன் மனம் விட்டுப் பேசி ஆதரவாகவும், வீட்டு வேலைகளைப் பகிர்ந்து கொள்ளவும் சொல்லலாம். வேலை செய்யும் இடமும் வேலையின் தன்மையும் மனம் அழுத்தம் தருவதாக இருந்தால் இரண்டு மூன்று வருடங்களுக்கு வேலையை விட்டுவிட்டு இரண்டாவது குழந்தையை பெற்றுக் கொள்வதும், முதல் குழந்தையுடன் நிறைய நேரம் செலவிடுவதும் என்று ஏற்படுத்திக் கொள்ளலாம். இதன் மூலம் மன அழுத்தம் குறைந்து சிறப்பாக செயல்பட முடியும்.

இடைவெளி இருக்குமாறு பார்த்துக்கொள்வது: இரண்டாவது குழந்தைக்கு திட்டமிடும்பொழுது முதல் குழந்தைக்கும் இரண்டாவது குழந்தைக்கும் 3 அல்லது 4 வயது இடைவெளி இருக்குமாறு பார்த்துக்கொள்வது நல்லது. நிறைய இடைவெளி விழுந்தால் பார்த்துக் கொள்வதில் சிரமம் ஏற்படும். அதேபோல் 2 வருடங்களுக்குள் அடுத்த குழந்தையை பெற்றுக்கொண்டால் நம் ஆரோக்கியம் கெடுவதுடன், குழந்தை வளர்ப்பும் எளிதாக இராது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com