கிரீஸ் (Grease) உணவு என்று சொல்லப்படும் வறுத்துப் பொறித்த உணவு வகைகள், பீட்சா, பர்கர், உருளைக்கிழங்கு சிப்ஸ் போன்றவற்றை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை மிகவும் விரும்பி உண்கிறார்கள். அவற்றால் ஏற்படும் ஆரோக்கியக் கேடுகளைப் பற்றி அவர்களுக்கு இருக்கும் அறியாமையே இந்த உணவுகளை நாடச் செய்கிறது. கிரீஸ் உணவு வகைகளை உண்பதால் ஏற்படும் தீங்குகளை பற்றி இந்தப் பதிவில் பார்ப்போம்.
கிரீஸ் உணவு வகைகள்: பிரெஞ்சு ஃப்ரை, வறுத்த கோழி, மீன் வறுவல், உருளைக்கிழங்கு சிப்ஸ், பர்கர், பீட்சா, பதப்படுத்தப்பட்ட இறைச்சி, ஹாட் டாக் பேஸ்ட்ரிகள் மற்றும் டோனட்ஸ், கிரீம், சாஸ்கள் மற்றும் அலங்கரிக்கப் பயன்படுத்தப்படும் டிரெஸ்ஸிங்குகள், ஐஸ்கிரீம் மற்றும் அதிக கொழுப்புள்ள பால் பொருட்கள், வெண்ணெய் மற்றும் மார்கரின் கொண்ட உணவுகள், சீஸ் பர்கர்கள் மற்றும் சீஸ் உணவு வகைகள், சாக்லேட் மற்றும் அதிக சர்க்கரை சேர்த்த இனிப்புகள் கிரீஸ் உணவு வகைகளில் அடங்கும்.
கிரீஸ் உணவுகளை மக்கள் நாடுவதற்கான காரணங்கள் யாவை?
பலதரப்பட்ட மக்களை இவை ஈர்ப்பதற்கான காரணம், அதில் உள்ள சுவை, கவர்ச்சியான, மிருதுவான, மொறுமொறுப்பான அமைப்பு மற்றும் பசியுடன் இருக்கும்போது எளிதில் கிடைக்கக்கூடியதாகவும் மலிவானதாகவும், விரைவாக உண்டு முடிப்பதாகவும், உண்பதற்கு திருப்தியாகவும் இருப்பதாக உணர்வதால் பலரும் கிரீஸ் உணவு வகைகளை நாடுகிறார்கள்.
கிரீஸ் உணவு வகைகள் உடலுக்குத் தரும் தீங்குகள்:
அதிக எடை அதிகரிப்பு: இந்த உணவு வகைகளில் ஆரோக்கியமற்ற கொழுப்புகளும் அதிக கலோரிகளும் இருப்பதால் இவற்றை அடிக்கடி உட்கொள்ளும்போது உடல் எடை வேகமாக அதிகரிக்கக் கூடும்.
செரிமான பிரச்னைகள்: இந்த உணவுகள் செரிமானப் பிரச்னைகளுக்கு வழிவகுக்கும். அஜீரணம், வீக்கம் மற்றும் வயிற்றுப்போக்கு போன்றவை ஏற்படும். அதிலும் சென்சிடிவ் ஆன நபர்களுக்கு அதிக பாதிப்பைத் தரும்.
கொலஸ்ட்ரால் அதிகரித்தல்: கொழுப்பு நிறைந்த உணவுகளில் காணப்படும் நிறைவுற்ற மற்றும் டிரான்ஸ் கொழுப்புகள் கெட்ட கொழுப்பின் அளவை உயர்த்தி இதய நோய் அபாயத்தை அதிகரிக்கும்.
உயர் இரத்த அழுத்தம்: உப்பு, கொழுப்பு நிறைந்த உணவுகளை அதிகமாக உட்கொள்வதால் உயர் இரத்த அழுத்தத்திற்கு வழிவகுக்கும்.
இதய நோய் அபாயம்: ஆரோக்கியமற்ற கொழுப்புகள் உள்ள உணவுகளை எடுத்துக் கொள்வதால் தமனிகளில் அடைப்பு உருவாகி மாரடைப்பு மற்றும் பக்கவாதம் போன்றவை ஏற்படும் அபாயம் அதிகரிக்கும்.
நீரிழிவு நோய்: இந்த உணவுகளை தொடர்ந்து எடுத்துக்கொள்வது இன்சுலின் எதிர்ப்புக்கு பங்களிக்கும். இது டைப் 2 நீரிழிவுக்கு வழிவகுக்கும்.
முகப்பரு மற்றும் சருமப் பிரச்னைகள்: அதிக எண்ணெய் உள்ள உணவுகள் முகத்தில் அதிக எண்ணெய் உற்பத்தி மற்றும் வீக்கத்தை அதிகரித்து முகப்பருக்களை ஏற்படுத்தும். முகமும் பொலிவிழந்து காணப்படும். தொப்பை அதிகரித்தல், இடுப்புச் சுற்றளவு பெருகுதல் போன்றவையும் ஏற்பட்டு ஒருவரின் இயல்பான தோற்றம் மாறிவிடும்.
மனநிலை மாறுபாடுகள்: ஆரோக்கியமற்ற கொழுப்புகள் அதிகம் உள்ள உணவுகள் மனநிலை மற்றும் அறிவாற்றல் செயல்பாட்டை எதிர்மறையாக பாதிக்கும். இதனால் மனச்சோர்வு மனப்பதற்றம் உருவாகும்.
நாள்பட்ட அழற்சி: கீல்வாதம் மற்றும் புற்றுநோய்கள் உட்பட பல்வேறு உடல்நல பிரச்னைகளுடன் தொடர்புடைய நாள்பட்ட அழற்சியை ஏற்படுத்தும்.
குறைக்கப்பட்ட ஊட்டச்சத்து: கிரீஸ் உணவுகளை அதிகமாக எடுத்துக்கொள்ளும் குழந்தைகளுக்கு ஆரோக்கியமான உணவில் விருப்பங்கள் குறையும். அதனால் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் உட்கொள்ளல் குறையும். அதன் காரணமாக ஆரோக்கியமற்ற குழந்தைகளாக அவர்கள் வளர்வார்கள்.
எனவே, கிரீஸ் உணவுகளை மிகவும் அரிதாகவே குழந்தைகளுக்குக் கொடுக்க வேண்டும். அதற்கு பதிலாக மெலிந்த புரதங்கள், பழங்கள், காய்கறிகள், ஆரோக்கியமான கொழுப்புகள் நிறைந்த சீரான உணவு வகைகளைத் தர வேண்டும்.