எந்த ஒரு விசேஷமானாலும் கட்டாயம் ஆடவர் கையில் ரட்சையாக இருப்பது தர்பைப் புல். மிகவும் சக்தி வாய்ந்த தர்பைப் புல்லுக்கு இன்னொரு பெயர் ‘குசா’ என்பதாகும். ராமபிரானின் இரண்டாவது மகனின் பெயர் குசா. அவருடைய பெயரைக் குறிக்கும் வகையில் இந்தப் புல்லின் பெயரை வைத்துள்ளார்கள்.
தர்பைப் புல் சிறுநீரகக் கல்லை கரைக்கும் ஆற்றல் மிக்கது. மேலும், உடல் சூட்டையும் தணிக்கும். தர்பையை அணிந்தவர்களிடம் பாவங்கள் ஒட்டாது என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன. திருமணம் முதல் இறப்பு வரை இந்து மதத்தில் இது பயன்படுத்தப்படுகிறது. இதைப் பயன்படுத்தவில்லை என்றால் எந்த ஒரு வழிபாடும் பயனற்றது என்று யஜூர் வேதத்தில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
தர்பைப் புல்லில் மருத்துவ குணங்கள் பல உள்ளன. இதன் ஒருசில துண்டுகளை குடிநீர் பானையில் போட்டு வைத்து அந்த நீரை அருந்தினால் கடும் வெயிலின் தாக்கம் குறையும்.
சூரிய, சந்திர கிரகணத்தின்போது உணவுப் பொருட்களிலும் குடிநீரிலும் தர்பைப் புல்லை போட்டு வைத்தால் தோஷங்கள் நீங்கும் என்பது ஐதீகம். குடிநீரில் தர்பைப் புல்லை துண்டாக்கி போட்டு குடித்தால் சர்க்கரை நோய் கட்டுக்குள் வரும்.
உடல் சூடு காரணமாக அடர் மஞ்சள் நிறத்தோடும் எரிச்சலோடும் சிறுநீர் கழிப்பவர்கள் கையளவு தர்பைப் புல்லை எடுத்து சுடுநீரில் காய்ச்சி ஆறவைத்து வடிகட்டி குடித்தால் அந்த உபாதைகள் நீங்கும்.
சிறுநீரகம், கல்லீரல், குடல் புண், வாய்ப்புண் போன்ற பிரச்னைகளால் அவதிப்படுபவர்கள் தர்பைப் புல் கொண்டு காய்ச்சிய நீரை குடித்தால் அந்த பிரச்னைகள் நீங்கும். அதோடு, சிறுநீரக கற்களையும் அது வெளியேற்றும்.
ஆண்டு முழுவதும் வைத்துப் பயன்படுத்தும் ஊறுகாய், வற்றல், வடகம் போன்றவற்றில் சில தர்பைப் புல்லை போட்டு வைத்தால் அவை கெட்டுப் போகாமல் இருக்கும். அவற்றின் சுவையையும் மணத்தையும் அதிகரிக்கும்.
தர்பைப் புல்லால் செய்யப்படும் பாய் விரிப்பில் படுத்து உறங்கினால் உடல் சூடு தணியும், மன உளைச்சல் நீங்கும், நல்ல உறக்கம் கிடைக்கும், ஆரோக்கியம் நீடிக்கும்.
சிலருக்கு உடல் எப்போதும் அரித்துக்கொண்டே இருக்கும். உடல் அரிப்பு இருப்பவர்கள் தர்பைப் புல்லை நன்றாக சுத்தம் செய்து சிறு சிறு துண்டுகளாக நறுக்கி நீர் விட்டு காய்ச்சி அதனை குடித்து வந்தால் உடல் அரிப்பு முற்றிலும் குறைந்து விடும்.
குடலில் ஏற்படக்கூடிய புண்கள், அதிக காரம் சாப்பிடுவதால் வாய்களில் ஏற்படும் புண்களால் அவதிப்படுபவர்கள் தர்பைப் புல் கொண்டு காய்ச்சிய நீரை குடித்தால் அந்தப் பிரச்னைகள் நீங்கும்.
சிலருக்கு இளமையிலேயே தலைமுடியானது நரைத்துப் போய் கூந்தலின் அழகையே கெடுத்து விடும். இதற்குக் காரணம் பித்தம் என்று சொல்வார்கள். பித்தம் இருப்பவர்கள் தர்பைப் புல்லின் வேரை நிழலில் காயவைத்து பொடி செய்து வைத்துக்கொண்டு அந்தப் பொடியை பாலில் கலந்து தினமும் இரண்டு வேளை குடித்து வந்தால் பித்தம் குறையும்.