சிவப்பு, மஞ்சள் சாயமிட்ட உணவுப் பொருட்களை உண்பதால் ஏற்படும் தீங்குகள் தெரியுமா?

பல வண்ண ஜெல்லி மிட்டாய்
பல வண்ண ஜெல்லி மிட்டாய்https://snackattack.in
Published on

டைபாதை கடைகள், ஸ்வீட் ஸ்டால்கள் மற்றும் ஹோட்டல்களில் நீக்கமற  நிறைந்திருக்கின்றன சிவப்பு சாயமிட்ட உணவு வகைகள், தின்பண்டங்கள், இனிப்பு வகைகள் மற்றும் பானங்கள். கண்களைக் கவரும் வண்ணத்தில், உண்ணத்தூண்டும் வாசனையுடன் இருக்கும் இந்த  உணவு வகைகளின் பின் ஒளிந்திருக்கும் ஆபத்துகள் பற்றி பலருக்கும் தெரியாது. இவற்றை உண்பதால் ஏற்படும் தீங்குகள் பற்றி இந்தப் பதிவில் பார்ப்போம்.

நம் நாட்டில் உணவுப் பொருட்களில் அனுமதிக்கப்படாத மற்றும் தீங்கு விளைவிக்கும் செயற்கை சாயங்களைப் பயன்படுத்துவது நடைமுறையில் இருக்கிறது. பல்வேறு உணவுப் பொருட்களில் பிரகாசமான சிவப்பு அல்லது இளம் சிவப்பு நிறத்தில் பயன்படுத்தப்படும் கலர் பொடியில் எரித்ரோசின் உள்ளது. எரித்ரோசின் என்பது நிலக்கரி தாரால் செய்யப்பட்ட ஒரு செயற்கை சிவப்பு (செர்ரி - இளஞ்சிவப்பு) உணவு வண்ணமாகும். இது அயோடின் மற்றும் சோடியம் கொண்ட ஒரு கரிம கலவை ஆகும். எரித்ரோசின் பொதுவாக சிவப்பு சாயம் #3 என்றும் குறிப்பிடப்படுகிறது.

எரித்ரோசின் உள்ள உணவுப் பொருள்கள்:

1. ஜெல்லி, ஜாம்கள், மிட்டாய்கள், லாலிபாப்புகள், குலோப் ஜாமுன், ரசகுல்லா போன்றவற்றில் இந்த சிவப்பு நிறம் அதிகமாக சேர்க்கப்படுகிறது.

2. சில பழங்களின் சுவை கொண்ட குளிர்பானங்கள் மற்றும் சோடாக்களில் எரித்ரோசின் கலக்கப்படுகிறது. சுவையூட்டப்பட்ட மில்க் ஷேக்குகள், கேக்குகளின்  ஐசிங் மற்றும் அலங்காரங்களில் இந்த சிவப்பு கலர் பயன்படுத்தப்படுகிறது. சிவப்பு மற்றும் இளம் சிவப்பு கலர்கள் ஐஸ்கிரீமில் கலக்கப்படுகிறது.

3. சில நூடுல்ஸ் வகைகளில் சுவையூட்டுவதற்காக சிவப்பு கலர்ப் பொடி கலக்கப்படுகிறது. மேலும். பலரும் விரும்பி உண்ணும் சில்லி சிக்கன், மீன் வறுவலிலும் எரித்ரோசின் அடங்கிய சிவப்புக் கலர் பொடி கலக்கப்படுகிறது.

4. மிட்டாய், சோடா, உருளைக்கிழங்கு சிப்ஸ், பாப்கார்ன் மற்றும் தானியங்களில்  எலுமிச்சை மஞ்சள் சாயம் கலக்கப்படுகிறது.

5.  மிட்டாய், சாஸ்கள், வேகவைத்த பொருட்கள் மற்றும் பதிவு செய்யப்பட்ட பழங்களில் ஆரஞ்சு - மஞ்சள் சாயம் பயன்படுத்தப்படுகிறது.

6. ஐஸ்கிரீம், பிராசஸ் செய்யப்பட்ட பட்டாணி,  சூப்கள், பாப்சிகல்ஸ் மற்றும் ஃப்ரோஸ்டிங் ஆகியவற்றில் நீல - பச்சை நிறம் பயன்படுத்தப்படுகிறது.

சிவப்பு கலர் பொடி உடலுக்குத் தரும் தீங்குகள்:

1. தைராய்டு செயல்பாட்டில் பாதிப்புகள்: அதிக அளவு எரித்ரோசின் பயன்பாடு  தைராய்டு கட்டிகள் உருவாக வழி வகுக்கும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. மனிதர்களுக்கு புற்றுநோய் போன்ற கொடிய நோய்களைக் கூட ஏற்படுத்தும். தைராய்டு சுரப்பியின் இயல்பான செயல்பாட்டில் தலையிட்டு ஹார்மோன் சமநிலையின்மைக்கு வழிவகுக்கும்.

2. ஒவ்வாமை எதிர்வினைகள்: சிலருக்கு சரும வெடிப்பு, அரிப்பு மற்றும் படை உட்பட ஒவ்வாமை எதிர்வினைகளைத் தருகிறது. மேலும், ஆஸ்துமா மற்றும் சுவாசிப்பதில் சிரமம் போன்ற சுவாசப் பிரச்னைகளையும் தருகிறது.

இதையும் படியுங்கள்:
நொதிக்கச் செய்து தயாரிக்கப்படும் உணவுகளில் உள்ள ஆரோக்கிய நன்மைகள் தெரியுமா?
பல வண்ண ஜெல்லி மிட்டாய்

3. குழந்தைகளின் நடத்தை மாற்றங்கள்: குழந்தைகளின் நடத்தைகளில் மாற்றங்கள் ஏற்படுகிறது. குழந்தைகளின் அதிவேகத் தன்மை எனப்படும் ஹைப்பர் ஆக்டிவிட்டி கோளாறு இந்த மாதிரி சிவப்பு கலர் பொடி சேர்த்த உணவுகளை உண்பதால் ஏற்படுகிறது என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. மேலும், கற்றல் குறைபாடுகள் ஏற்படலாம்.

4. குடல் பிரச்னைகள்: செரிமானப் பிரச்னைகளை ஏற்படுத்தும். வயிற்றுப் பிடிப்பு மற்றும் வயிற்றுப்போக்கு ஏற்படலாம். மேலும். இரப்பை, குடல் பிரச்னைகள் ஏற்படலாம்.

5. தலைவலி: ஒற்றைத் தலைவலி மற்றும் பிற நரம்பியல் சார்ந்த அறிகுறிகள் தென்படலாம். நரம்பியல் அறிகுறிகள் உணர்திறன் கொண்ட நபர்களை அதிகம் பாதிக்கலாம்.

வண்ண சாயமிட்ட உணவுகள் வீதிக்கு வீதி கிடைக்கின்றன. இவற்றையெல்லாம் தவிர்ப்பது நம் கையில்தான் உள்ளது. இவற்றுக்கு மாற்றாக இயற்கையான பீட்ரூட் சாறு மஞ்சள் போன்றவற்றை பயன்படுத்திக் கொள்ளலாம். இயற்கையான வண்ணங்களை கொண்ட தயாரிப்புகளைத் தேர்ந்தெடுத்து உண்ண வேண்டும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com