நம்மில் பலரும் நாளின் துவக்கத்தில் சூடாக ஒரு கப் காபி அருந்துவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறோம். அதிலுள்ள காஃபின் உடலுக்கு சுறுசுறுப்பைத் தந்து அன்றைய வேலைகளை அதிக கவனத்துடன் செய்ய உதவுகிறது. தற்காலத்தில் பல வகையான காபி மற்றும் டீ போன்ற பானங்கள் தோன்றி அவை பல காரணங்களுக்காக உலகமெங்கும் பலராலும் அருந்தப்பட்டு வருகிறது. சமீபத்தில் டர்மெரிக் காபி பிரபலமடைந்து உள்ளது. ஆன்டி ஆக்ஸிடன்ட் மற்றும் ஆன்டி இன்ஃபிளமேட்டரி குணங்கள் நிறைந்த மஞ்சள் தூள் (Turmeric), காபியுடன் சேரும்போது ஒரு சக்தி வாய்ந்த பானம் உருவாகிறது. இவை இரண்டிலுமுள்ள ஆரோக்கிய நன்மைகளை மனதில் கொண்டு மக்கள் அனைவரும் இந்த இயற்கையான கோல்டன் காபியை விரும்பி அருந்த ஆரம்பித்துள்ளனர். இதிலுள்ள ஆரோக்கிய நன்மைகள் என்னென்ன என்பதை இப்பதிவில் பார்க்கலாம்.
1. ஆன்டி இன்ஃபிளமேட்டரி சப்போர்ட்: மஞ்சளில் உள்ள குர்குமின் மற்றும் காபி ஆகிய இவை இரண்டிலும் உள்ள ஆன்டி இன்ஃபிளமேட்டரி குணம் மொத்த உடலிலும் உள்ள வீக்கங்களைக் குறைக்க உதவும். இதனால் ஆர்த்ரைடிஸ் மற்றும் தசை அழற்சி போன்ற நோய்கள் குணமடைய வாய்ப்புண்டு.
2. ஆன்டி ஆக்ஸிடன்ட்: குர்குமின் மற்றும் காபியில் அதிகளவு ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் உள்ளன. காபியில் உள்ள குளோரோஜெனிக் ஆசிட் உடலில் உள்ள ஃபிரீரேடிகல்களின் அளவை சமநிலைப்படுத்தும். குர்குமின் உடலில் ஆக்ஸிடேட்டிவ் ஸ்ட்ரெஸைக் குறைக்க உதவும். சக்தி வாய்ந்த இந்த இரண்டு பொருட்களும் சேர்ந்து செல்களில் உண்டாகும் சிதைவை சீராக்கவும் அதிக வயதாகும் முன்பே வயதான தோற்றம் வருவதைத் தடுக்கவும் செய்யும்.
3. நோயெதிர்ப்பு சக்தி: பல நூற்றாண்டுகளாக ஆயுர்வேத மருத்துவத்தில் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும் மருந்தின் தயாரிப்பில் மஞ்சள் உபயோகப்படுத்தப்பட்டு வருகிறது. மேலும், இதன் ஆன்டி பாக்டீரியல், ஆன்டி வைரல் மற்றும் ஆன்டி ஃபங்கல் குணங்களின் காரணமாக, மஞ்சள் தொற்று நோய்க் கிருமிகளை எதிர்த்துப் போராடவும், சளி, ஃபுளூ போன்ற நோய்களைக் குணமாக்கவும் வீட்டு வைத்தியத்தில் உபயோகப்படுத்தப்பட்டு வருகிறது.
4. செரிமானம் சிறக்க: கொழுப்புகளை உடைத்து கொழுப்பு அமிலங்களாக மாற்றி உடலுக்குள் உறிஞ்சப்பட உதவும் பித்த நீரின் சுரப்பை அதிகரிக்க மஞ்சள் உதவி புரியும். காபியுடன் இணைந்து வயிறு வீக்கம், அஜீரணம் போன்ற கோளாறுகளை குணப்படுத்தவும், ஜீரண மண்டல உறுப்புகளின் ஆரோக்கியத்தை சிறந்த முறையில் பராமரிக்கவும் மஞ்சள் உதவி புரியும்.
5. மூளை ஆரோக்கியம்: காபியிலுள்ள காஃபின், செய்யும் செயலை கவனத்துடனும் ஈடுபாட்டுடனும் செய்ய உதவும். குர்குமின், மூளையிலுள்ள வீக்கம் மற்றும் ஆக்ஸிடேட்டிவ் ஸ்ட்ரெஸைக் குறைத்து அல்ஸிமெர் மற்றும் பார்கின்சன் போன்ற நியூரோ டீஜெனரேட்டிவ் நோய்கள் வரும் அபாயத்தைத் தடுக்க உதவும். இரண்டும் சேர்ந்து ஞாபக சக்தி, மூட் மற்றும் ஒட்டுமொத்த அறிவாற்றல் திறனை மேம்படுத்த உதவிபுரிகின்றன.
6. சரும ஆரோக்கியம்: மஞ்சளின் ஆன்டி ஃபங்கல் மற்றும் ஆன்டி இன்ஃபிளமேட்டரி குணங்கள் சருமத்தில் உள்ள மருக்களை நீக்கும். சிவந்த சருமத்திற்கு இதமளித்து சருமத்தை இயல்பானதாக்கும். சீரற்ற சரும நிறத்தை சமனப்படுத்தவும் உதவும். காபி இரத்த ஓட்டத்தை சிறப்பாக்கி சரும செல்களுக்கு ஊட்டச் சத்துக்களை குறைவின்றி வழங்க உதவி புரியும். இதனால் சருமம் பளபளப்பு பெறும்.
7. எடைக் குறைப்பு: உடலின் எடையையும், உடலில் உள்ள கொழுப்பின் அளவையும் குறைப்பதற்கு காஃபின் மற்றும் குர்குமின் உதவுவதாக ஆராய்ச்சிகள் கூறுகின்றன.
அவரவர்க்குப் பிடித்த முறையில் எஸ்பிரஸ்ஸோ, பிரஞ்ச் பிரஸ் அல்லது ட்ரிப் காபியை சூடாகத் தயாரித்து, அரை டீஸ்பூன் மஞ்சள் தூள், சிறிது மிளகுத் தூள், பட்டைத் தூள் சேர்த்து நன்கு கலந்து சூடான பால் தேவையான அளவு சேர்க்க ‘கோல்டன் காபி’ தயார்.