ஒரு கப் தண்ணீரில் ஒரு கொத்து ரோஸ்மேரி மூலிகை இலைகளைப் போட்டு அடுப்பில் வைத்து நன்கு கொதித்ததும் தீயை சிறிதாக்கி ஐந்து நிமிடம் வைத்து இறக்கி இலைகளை நீக்க ரோஸ்மேரி டீ ரெடி. விரும்பினால் சிறிது லெமன் ஜூஸ் மற்றும் தேன் சேர்த்து அருந்தலாம். இந்த டீயிலிருந்து கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள் என்னென்ன என்பதைப் பார்க்கலாம்.
இந்த டீயிலிருக்கும் ஆன்டி ஆக்ஸிடன்ட்களான ரோஸ்மேரினிக் மற்றும் கார்னோசிக் அமிலங்கள் ஆக்ஸிடேட்டிவ் ஸ்ட்ரெஸ்ஸை உண்டாக்கும் ஃபிரீரேடிகல்களை எதிர்த்துப் போராடி நோய்கள் வரும் அபாயத்தைத் தடுக்கின்றன.
நல்ல செரிமானத்துக்கு உதவக்கூடிய என்சைம்களின் உற்பத்தியை அதிகரிக்க உதவுகிறது இந்த டீ. இதனால் அஜீரணம், வயிற்றில் வீக்கம், வாய்வு உற்பத்தி போன்ற கோளாறுகள் வருவது தடுக்கப்படுகிறது; ஜீரணம் சிறப்புற நடைபெறுகிறது.
கவனம் சிதறாத கூர்நோக்கும் திறன், மனத்தெளிவு ஆகியவற்றை அதிகரிக்கச் செய்து மூளையின் அறிவாற்றலை உயர்த்த உதவுகிறது ரோஸ்மேரி டீ. இது மூளையின் திறனை உபயோகித்து வேலை செய்பவர்களுக்கும், படிப்பில் ஈடுபட்டுள்ளவர்களுக்கும் நன்கு உபயோகப்படக்கூடியது.
ரோஸ்மேரியிலுள்ள ஆன்டி இன்ஃபிளமேட்டரி குணமானது உடலிலுள்ள வீக்கங்களைக் குறைக்க உதவுகிறது. இதனால் ஆர்த்தெரிட்டிஸ் மற்றும் தளர்வுற்ற தசைகள் போன்ற கோளாறுகளிலிருந்து நிவாரணம் பெற முடிகிறது.
ரோஸ்மேரி டீயிலுள்ள வைட்டமின் C நோயெதிர்ப்பு மண்டலத்தின் சக்தியை வலுவடையச் செய்கிறது. இதனால் தொற்றுநோய்த் தாக்குதலிலிருந்து உடலைக் காக்க முடியும். ரோஸ்மேரியின் நறுமணம் மனக்கவலை மற்றும் அழுத்தங்களை நீக்கி மனம் அமைதி பெற உதவும்.
ரோஸ்மேரி இரத்த ஓட்டம் நல்ல முறையில் நடைபெற உதவுகிறது. இதனால் இதய இரத்த நாளங்களின் ஆரோக்கியம் காக்கப்படுகிறது. சருமத்தின் சில இடங்களில் இரத்த ஓட்டம் சரியில்லாத காரணத்தினால் உணர்வற்ற நிலையை உண்டுபண்ணும் ரெய்னாட் (Raynaud's) என்ற நோய் வரக்கூடிய அறிகுறிகள் களையப்படுகின்றன.
மூச்சுக் குழல் மற்றும் நுரையீரல் சம்பந்தப்பட்ட நோய்களை குணப்படுத்தும் ஆற்றலுடையது ரோஸ்மேரி. இருமல், சளி, மூக்கைடைப்பு போன்றவற்றின் பாதிப்பில் இருக்கும்போது ரோஸ்மேரி டீ அருந்தினால் அது தொண்டையை ஆசுவாசப்படுத்தவும், சளி கரைந்து வெளியேறவும் உதவும்.
இந்த டீயில் ஒரு ஏலக்காய், பட்டை அல்லது லவங்கம் சேர்த்து அருந்த சுவையும் மணமும் கூடும்.