குங்குமப்பூ என்பது ஒரு விலை அதிகமுள்ள, உண்ணக்கூடிய தாவரப் பொருளாகும். பொதுவாக, கர்ப்பிணிப் பெண்கள் தினமும் இப்பூவை பாலில் கலந்து அருந்தி வர, பிறக்கும் குழந்தை சிவப்பாகப் பிறக்கும் என்பது நெடுங்காலமாக நிலவிவரும் நம்பிக்கை. மற்றபடி கேசரி போன்ற பலவகை இனிப்பு வகைகள் குங்குமப் பூ சேர்த்து தயாரிக்கப்படுகின்றன என்பது அனைவரும் அறிந்தது. இப்பூவில் அடங்கியுள்ள ஆரோக்கிய நன்மைகள் பற்றி இந்தப் பதிவில் பார்ப்போம்.
இரவில் ஒரு டம்ளர் சூடான பாலில் குங்குமப்பூ சேர்த்து அருந்திவிட்டு படுக்கச் சென்றால், இப்பூவிலுள்ள ஆன்டி ஆக்சிடன்ட்களானது ஆழ்ந்த தூக்கத்தை வரவழைக்க உதவும். இதிலுள்ள டிரிப்ட்டோஃபேன் (Tryptophan) மற்றும் கால்சியமானது இயற்கையான தூக்கத்தை வரவழைக்கும் குணம் கொண்டுள்ளது.
இதிலுள்ள ஆன்டி இன்ஃபிளமேட்டரி குணமானது மூட்டுக்களின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கக் கூடியது. இதில் அதிகளவில் அடங்கியுள்ள ரிபோஃபிளேவின் மற்றும் தயாமின் போன்ற சத்துக்கள் இதய நாளங்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகின்றன; மன அழுத்தத்தைக் குறைக்கின்றன; மூளையின் டோபமைன் என்னும் ஹார்மோன் அளவை அதிகரிக்கச் செய்து மூளையின் இயக்கத்தை மேம்படுத்துகிறது; ஞாபக மறதியைக் குறைத்து நினைவாற்றலை அதிகரிக்கச் செய்கிறது.
இதிலுள்ள க்ரோசின் மற்றும் க்ரோசெடின் போன்றவை ஆன்டி ட்யூமர் குணம் கொண்டவை. இவை கேன்சர் நோய் பரவ உதவும் செல்களை அழித்து உடலைப் பாதுகாக்கின்றன. இதிலுள்ள கரோட்டினாய்ட்கள் நோயெதிர்ப்புச் சக்தி அதிகரிக்க உதவி புரியும்.
குங்குமப் பூவில் ஆன்டி ஆக்சிடன்ட், ஆன்டி இன்ஃபிளமேட்டரி, ஆன்டி கேன்சர், ஆன்டி ஹைப்பர் லிபிடெமிக் போன்ற குணங்கள் அதிகம் உள்ளன. இவை வயிறு மற்றும் ஜீரண உறுப்புகளில் உண்டாகும் கோளாறுகளை நீக்க உதவுகின்றன. பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் ஏற்படும் தசைப் பிடிப்பு மற்றும் வலிகளைக் குறைக்கவும் உதவி புரிகின்றன.
குங்குமப்பூவில் உள்ள சோடியம், பொட்டாசியம், கால்சியம், கார்போஹைட்ரேட், மக்னீசியம், நார்ச்சத்து போன்றவை உயர் இரத்த அழுத்தத்தைக் குறைக்கவும், ஸ்ட்ரோக் மற்றும் இதய நோய்கள் வராமல் தடுக்கவும் உதவுகின்றன. குங்குமப்பூ சாறு பிழிந்து அருந்தினால் தமனி நோய் உள்ளவர்களின் பி.யெம்.ஐ அளவு குறையும்; உடல் எடை குறையும் வாய்ப்பும் உண்டு.
இத்தனை ஆரோக்கிய நன்மைகள் கொண்ட குங்குமப்பூவை சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் உட்கொண்டு நலம் பெறுவோம்.