சதுர் வேதங்களில் ஒன்றான அதிர் வேதத்தின் உப அங்கமே ஆயுர்வேதம். இதன் தொடக்கம் கி.மு. 400 ஆகும். இந்த சாஸ்திரத்தை பிரஜாபதிக்கு பிரம்மா கற்பித்தார். அவரிடமிருந்து அசுவினி தேவர்கள் கற்று இந்திரனுக்கு போதித்தார்கள். இந்திரனுக்கு அத்திரி, தன்வந்திரி என்று இரு சிஷ்யர்கள் இருந்தார்கள். அவர்கள் அதை இந்திரனிடமிருந்து கற்று, கற்றதை உலகறியச் செய்தார்கள். அத்திரி 46,500 மருத்துவ சுலோகங்கள் கொண்ட ‘ஜதரேய ஸம்ஹிதை’ என்ற ஒரு நூலை எழுதினார். அவரின் சீடர் அக்கினிவேசர் என்பவரும் ஒரு மருத்துவ நூலை எழுதினார். அவர் எழுதிய நூலை அவருடைய சிஷ்யர் சரசர் விரிவடையச் செய்தார். ஆயுர்வேதத்தின் அடிப்படையான ‘சரக ஸம்ஹிதை’ எழுதியது சரசர்தான்.
அக்காலத்தில் மூலிகைகளை பயிர் செய்த தோட்டங்களில் குடிசை கட்டிக்கொண்டு அதில் வசித்து ஆயுர்வேத மருத்துவம் பார்த்தார்கள் மருத்துவர்கள். இதனால் நாளடைவில் மிக வளர்ச்சியடைந்தது ஆயுர்வேத மருத்துவம். அசோக மன்னர் காலம் ஆயுர்வேத மருத்துவத்தின் பொற்காலமாக திகழ்ந்தது. அதிக புகழுடன் திகழ்ந்த காசி, தட்சசீலம், விதர்ப்பம், நாலந்தா ஆகிய பல்கலைக்கழகங்களில் ஆயுர்வேத மருத்துவப் பாடம் போதிக்கப்பட்டு, தட்சசீலம் பல்கலைக்கழகம் சிறந்த மருத்துவசாலையாக விளங்கியது.
பதஞ்சலி, நாகர்ஜுனர், வாகபடர், மாதவாசாரியர் போன்றவர்கள் ஆயுர்வேத நிபுணர்களாக திகழ்ந்தார்கள். பேரோடும் ,புகழோடும் திகழ்ந்த ஆயுர்வேத மருத்துவம் அந்நிய படையெடுப்பால் பலவீனமடைந்தது. ஆங்கிலேயர்கள் பிடியில் இந்தியா இருந்தபோது நமது பாரம்பரிய வைத்திய முறையான ஆயுர்வேத மருத்துவம் ஓரங்கட்டப்பட்டு, ஆங்கில மருத்துவமான அலோபதி நடைமுறைப்படுத்தப்பட்டது.
அந்தக் காலகட்டத்தில் கேரளாவின் மலப்புரம் மாவட்டத்தில் கோட்டக்கல் என்னுமிடத்தில் 1902ம் ஆண்டு அக்டோபர் 12ம் தேதி விஜயதசமி அன்று ஆரிய வைத்தியசாலை நிறுவி ஆயுர்வேத மருத்துவத்திற்கு புத்துயிர் கொடுத்தார் பி.எஸ்.வாரியார் (1869- 1944). ஆயுர்வேத மருத்துவ முறை மருத்துவம் மட்டுமே செய்வது இல்லை, மனிதன் ஆரோக்கியமாக எப்படி வாழ வேண்டும்? என்பதையும் சொல்லிக் கொடுக்கும் மருத்துவ முறை. மூலிகைகள், தாது உப்புக்கள் மூலம் மருந்துகள் தயாராகி மருத்துவம் பார்க்கப்படுவதால் இதனால் நோயாளிகளுக்கு எந்த பின்விளைவுகளும் ஏற்படுவதில்லை.
பி.எஸ்.வாரியர் ஒரு ஆயுர்வேத மருத்துவ நிபுணர். ஆங்கில அரசு ஆயுர்வேத மருத்துவத்தைக் கண்டுகொள்ளாமல் இருப்பது கண்டு வேதனை அடைந்தார். அதேவேளையில் ஆயுர்வேத மருத்துவத்தில் ஒரு வியாதிக்கு தற்போது இருப்பது போல ரெடிமேடாக மருந்து, மாத்திரைகள் அப்போது இல்லை. ஒரு நோயாளிக்கு ஆயுர்வேத மருத்துவர் ஒரு வேளை மருந்து கொடுப்பார். அடுத்த வேளை மருந்தை வைத்தியரின் ஆலோசனைபடி நோயாளியே மருந்து தயாரித்து சாப்பிட வேண்டும். இதனால் பல நோயாளிகள் சரியாக மருந்து தயாரிக்கத் தெரியாமல் நோய்கள் தீராமல், ஆங்கில மருத்துவமனைகளுக்கு செல்வதைக் கண்டார் வாரியர். எனவே, முறைப்படி ஆயுர்வேத மருந்துகளை ரெடிமேட் மருந்துகளாகத் தயாரித்தால், அதன் மூலம் நோய்களை தீர்க்கலாம், நமது பாரம்பரிய மருத்துவ முறையும் அழிந்து போகாது என்று எண்ணினார். இதன் விளைவுதான் அவர் ஆரிய வைத்தியசாலை நிறுவியது.
தான் மட்டும் முறைப்படி ஆயுர்வேத மருந்துகள் தயாரிப்பது போதாது, நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள ஆயுர்வேத மருத்துவர்கள் முறையான மூலிகைகளையும், தாது உப்புக்களையும் சுத்தப்படுத்தி மருந்துகள் செய்ய பயிற்சி அளிக்க வேண்டும் என்று விரும்பினார். அதற்கு ஒரு நிறுவனம் தொடங்க கோட்டக்கல்லில் ரூபாய் 125க்கு ஒரு இடத்தை வாங்கி ஆயுர்வேத மருத்துவமனை கட்டினார். ஆயுர்வேத மருந்துகள் ரெடிமேடாக தயார் செய்து ஸ்டாக் வைத்து விற்பது தென் இந்தியாவில் புதுமையாக இருந்தது.
தற்போது இந்தியாவில் 3600க்கும் மேற்பட்ட ஆயுர்வேத மருத்துவமனைகள் மற்றும் 26,000க்கும் மேற்பட்ட ஆயுர்வேத கிளினிக்குகள் மக்களுக்கு ஆயுர்வேத மருத்துவ சேவைகள் வழங்கி வருகின்றன. இதற்கு அடித்தளமிட்டது விஜயதசமி நாளில் தொடங்கப்பட்ட ஆரிய வைத்தியசாலைதான்.