சவாந்த் நோய்க்குறி (Savant syndrome) என்பது ஒரு அரிய மற்றும் அசாதாரண நிலையைக் குறிக்கிறது. குறிப்பிடத்தக்க மனநலக் குறைபாடுகள் உள்ள ஒருவர் கணிதம், கலை, இசை, நினைவகம் போன்ற குறிப்பிட்ட பகுதிகளில் ஆழ்ந்த திறமைகளை வெளிப்படுத்துவார்.
சவாந்த் நோய்க்குறியின் பண்புகள்: சவாந்த் நோய்க்குறி கொண்ட நபர்கள் அவர்களின் பொதுவான அறிவாற்றல் வரம்புகளுக்கு மாறாக ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட குறிப்பிடத்தக்க திறன்களை கொண்டுள்ளனர். இவர்களால் சிக்கலான கணக்குகளைப் போட முடியும். ஒரே ஒரு முறை இசையைக் கேட்டால் அதை வாசிக்க முடியும். நல்ல ஆழ்ந்த நினைவாற்றல் இருக்கும். அழகான கலைப் படைப்புகளை உருவாக்குவார்கள். இந்த நோய்க்குறி கொண்டவர்கள் அசாதாரணமான நினைவாற்றல் திறனை கொண்டிருப்பார்கள். பழைய வருடங்கள், தேதிகள், எண்கள் போன்றவற்றை நினைவில் வைத்திருந்து சொல்வார்கள்.
சவாந்த் திறன்களின் வகைகள்:
இசை திறமை: முறையாக இசை கற்றுக்கொள்ளாமலேயே, காதால் கேட்டே இவர்களால் இசைக்கருவிகளை வாசிக்க முடியும். இசை அமைக்க முடியும். மிகவும் சிக்கலான இசைக் குறிப்புகளை ஒரு முறை கேட்டதுமே நினைவில் வைத்து அவற்றை பிரதிபலிக்க முடியும்.
கலைத்திறன்: வரைதல், வண்ணம் தீட்டுதல் போன்றவற்றில் மிகச் சிறப்பாக செயல்படுவார்கள். மிகத்துல்லியமான, அழகான ஓவியங்களை வரைவார்கள். நுட்பமான வண்ணங்களை தீட்டுவார்கள்.
கணிதத் திறன்: பெரிய எண்களை பெருக்குவது அல்லது சிக்கலான கணித கருத்துக்களை பற்றிய வழக்கத்திற்கு மாறான புரிதலை கொண்டிருப்பது, விரைவான மனக்கணக்கீடுகள் செய்வது போன்றவைற்றை இந்த நோய்க்குறி உள்ளவர்களால் செய்ய முடியும்.
நாட்காட்டி கணக்கீடுகள்: சில நபர்களால் சில வருடங்கள் அல்லது பல நூற்றாண்டுகளுக்கு முன்பு கொடுக்கப்பட்ட எந்த தேதியிலும் வாரத்தின் நாளை துல்லியமாக தீர்மானிக்க முடியும்.
மொழித்திறன்: சிலர் பல மொழிகளை விரைவாக கற்றுக்கொள்வது மற்றும் புரிந்து கொள்வது உட்பட விதிவிலக்கான மொழியியல் திறன்களையும் கொண்டுள்ளார்கள்.
சவாந்த் நோய்க்குறியின் விளைவுகள் மற்றும் தாக்கங்கள்:
நேர்மறை விளைவுகள்: இவர்களுடைய திறமைகள் மற்றும் திறன்கள் மிகவும் அசாதாரணமானவை. கலை, இசை, அறிவியல் போன்ற துறைகளில் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்குவார்கள். அவர்கள் தங்களுக்கு உகந்த துறைகளில் ஈடுபட்டு அறிவார்ந்த திறன்களில் வெளிப்படுத்தும்போது அது அவர்களது ஒட்டுமொத்த வாழ்க்கை தரத்தையும் உணர்ச்சி நல்வாழ்வையும் மேம்படுத்தும்.
சவால்கள்:
சமூகத் தொடர்பு சிரமங்கள்: பல அறிவாளிகள் மன இறுக்கம் கொண்டவர்களாக இருக்கிறார்கள். சமூகத் தொடர்பு மற்றும் தகவல் தொடர்புடன் போராடுகிறார்கள். இதனால் அதிகம் தனிமையிலும் உறவுகளை உருவாக்குவதில் சிரமத்திற்கும் ஆளாகிறார்கள். சில அறிவாளிகளுக்கு தங்களுடைய அறிவாற்றல் குறைபாடுகள் காரணமாக வாழ்நாள் முழுவதும் அவர்களின் அன்றாடத் தேவைகளுக்கு ஆதரவு தேவைப்படுகிறது.
மனநல சிக்கல்கள்: அவர்களின் அசாதாரண திறன்கள் மற்றும் பொதுவான அறிவாற்றல் செயல்பாடு ஆகியவற்றிற்கு இடையே உள்ள வேறுபாடு சில நேரங்களில் விரக்தி, பதற்றம் அல்லது மனச்சோர்வுக்கு வழிவகுக்கும்.
வரையறுக்கப்பட்ட திறன்கள்: அறிவாளிகள் ஒரு துறையில் சிறந்து விளங்கினாலும் அவர்களின் திறன்கள் மற்றவற்றில் கணிசமாகக் குறைவாக இருக்கலாம். இது அன்றாட வாழ்க்கையை நிர்வகிப்பதில் சவாலாக இருக்கிறது.
காரணங்கள்: இந்த நோய்க்குறிக்கான சரியான காரணங்கள் முழுமையாக அறியப்படவில்லை. மூளையின் ஒரு பகுதியில் ஏற்படும் சேதத்தை மற்றொரு பகுதியில் மேம்படுத்தவதன் மூலம் ஈடு செய்ய முடியும் என்று கூறுகின்றன சில கோட்பாடுகள்.
சவாந்த் நோய்க்குறி உள்ள சில இந்திய பிரபலங்கள்: மனித கணினி என அடிக்கடி குறிப்பிடப்படும் சகுந்தலா தேவி சிக்கலான கணித கணக்கீடுகளை மனதளவில் வியக்க வைக்கும் வேகத்தில் நிகழ்த்தும் அபார திறனுக்காக அறியப்பட்டவர். அவருக்கும், கணித மேதை சீனிவாச ராமானுஜருக்கும் இந்த குறைபாடு இருந்ததாகத் தெரிகிறது.