நம் உடல் நூறு சதவிகித ஆரோக்கியத்துடன் இயங்க, அடிப்படைச் சத்துக்களான வைட்டமின்கள், மினரல்கள், கொழுப்புகள், புரோட்டீன், நார்ச்சத்து, கார்போஹைட்ரேட்கள் போன்றவை அவசியம். இந்த சத்துக்களின் அளவில் குறைபாடு ஏற்படும்போது நம் உடலில் வலி, சோர்வு என பல வகையான கோளாறுகள் உண்டாக வாய்ப்பாகும். அப்போது உடலில் தோன்றும் 7 அறிகுறிகள் என்னென்ன என்பதை இந்தப் பதிவில் பார்க்கலாம்.
1. வயிற்றுப்போக்கு: நாம் உண்ணும் உணவில் உள்ள ஊட்டச்சத்துக்கள், ஏதோ ஒரு காரணத்தினால் சரிவர உடலுக்குள் உறிஞ்சப்படாவிட்டால் தொடர் வயிற்றுப்போக்கு உண்டாகும்.
2. மங்கலான பார்வை: உடலுக்கு சரியான அளவு வைட்டமின் A சத்து கிடைக்காவிட்டால், நாளடைவில் பார்வையின் கூர்மை மற்றும் இரவுப் பார்வையில் (night vision) குறைபாடு உண்டாகும்.
3. அனீமியா: நம் உடலுக்குக் கிடைக்க வேண்டிய இரும்புச் சத்தின் அளவு குறையும்போது, இரத்தத்தில் சிவப்பு அணுக்களின் எண்ணிக்கை குறைந்து அனீமியா என்ற நோய் உண்டாகும். இதனால் உடல் சோர்வடையும். முடி அதிகளவு உதிரும்.
4. உடல் எடையில் வேறுபாடு: உடலில் தைராய்ட் சுரப்பியில் உற்பத்தியாகும் ஹார்மோன் அளவில் ஏற்றத்தாழ்வு இருந்தால் உடல் எடை விரைவாக கூடவோ குறையவோ செய்யும்.
5. மூட்டுக்களில் வலி: உடலில் வைட்டமின் D குறையும்போது எலும்புகளில் வலியும் அசௌகரியமும் உண்டாகும்.
6. ஒழுங்கற்ற இதயத் துடிப்பு: வெவ்வேறு வகை ஊட்டச்சத்துக்களின் குறைபாட்டால் இதயத் துடிப்பு ஒழுங்கற்றுப் போகும். நெஞ்சுப் பகுதியில் அசௌகரியம் உண்டாகும்.
7. புண்கள் ஆறுவதில் தாமதம்: உடலில் ஓடும் இரத்தத்தில் இரும்புச் சத்து குறையும்போது, அடிபட்ட காயங்கள் ஆறுவதில் அதிக தாமதம் ஏற்படும்.
மேலே கூறிய அறிகுறிகள் உங்கள் உடலில் தோன்றும்போது கவனிக்காமல் இருக்க வேண்டாம். உடனடியாக ஆய்வக சோதனைகளை மேற்கொண்டு மருத்துவரின் ஆலோசனைகளைப் பெறுவது நலம்.