பால் மற்றும் பால் பொருட்களாகிய யோகர்ட், சீஸ் போன்ற உணவுகளில் எலும்புகள் வளர்ச்சியும் வலுவும் பெறத் தேவையான கால்சியம் மற்றும் வைட்டமின் D சத்துக்கள் ஏராளமாக நிறைந்துள்ளன. முட்டைகளில் சோலின் (choline) உள்ளிட்ட முக்கியமான ஊட்டச் சத்துக்களும் புரதச் சத்துக்களும் அதிகளவில் உள்ளன. இவை மூளை வளர்ச்சிக்கும் ஆரோக்கியத்திற்கும் உதவக்கூடியவை.
பெரி வகைப் பழங்கள், வாழைப்பழம், ஆப்பிள், கேரட், பசலைக் கீரை, புரோக்கோலி போன்ற பழங்களிலும், காய்கறிகளிலும் வைட்டமின்கள், மினரல்கள், ஆன்டி ஆக்சிடன்ட்கள் அதிகளவு உள்ளன. இவை குழந்தைகளின் வளர்ச்சிக்கும், நோயெதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கவும் பெரிதும் உதவி புரிபவை.
முழு கோதுமையில் தயாரிக்கப்படும் பிரட், பிரவுன் ரைஸ், ஓட்ஸ் மற்றும் குயினோவா போன்ற உணவுகளில் அடங்கியுள்ள, காம்ப்ளெக்ஸ் கார்போஹைட்ரேட்ஸ், நார்ச் சத்துக்கள் மற்றும் பிற ஊட்டச் சத்துக்கள் அனைத்தும் நல்ல செரிமானம் நடைபெற உதவி புரிந்து உடம்புக்கு தொடர்ந்து சக்தி கிடைக்குமாறு செய்கின்றன.
சிக்கன், மட்டன், டர்க்கி (Turkey), மீன், டோஃபு (Tofu), பீன்ஸ், மற்றும் பருப்பு வகைகளில் நிறைந்துள்ள புரோட்டீன் தசைகளின் வளர்ச்சிக்கும், சேதமடைந்த தசைகளை சீர்படுத்தவும் செய்கிறது. ஆரோக்கியம் தரக்கூடிய கொழுப்பு, புரோட்டீன், பலவகை வைட்டமின்கள் மற்றும் மினரல்கள் அடங்கிய பாதாம், வால் நட், சியா விதைகள், ஃபிளாக்ஸ் விதைகள் ஆகியவற்றை உண்ணும்போது ஒட்டு மொத்த உடல் ஆரோக்கியத்திற்குத் தேவையான அனைத்து நன்மைகளும் கிடைக்கின்றன.
மேற்கூறிய உணவு வகைகளை தினசரி நம் குழந்தைகளுக்கு உண்ணக் கொடுத்து அவர்களின் வளர்ச்சிக்கும் ஆரோக்கியத்திற்கும் உதவி புரிவோம்.