வாய் துர்நாற்றம் என்பது வாயுடன் மட்டும் தொடர்புடைய பிரச்னை கிடையாது. வயிற்றுக்கோளாறு, அல்சர், நீரிழிவு, கல்லீரல் மற்றும் சிறுநீரகப் பிரச்னையாலும் வரலாம். இந்தப் பதிவில் வாய் துர்நாற்றம் போக என்னென்ன உணவுகள் எடுத்துக் கொள்ளலாம் என்பதைப் பார்ப்போம்.
வாய் துர்நாற்றம் உள்ளவர்கள் வெற்றிலையை மென்று வாயில் அடக்குவது போல 3 கிராம்புகளை மென்று வாயில் அடக்கிக் கொள்ளலாம்.
புதினா இலைகளை மென்று சாப்பிட்டால் புத்துணர்ச்சியாக இருப்பது மட்டுமில்லாமல் வாய் துர்நாற்றம் தீரும்.
காலை எழுந்ததும் காபி மற்றும் டீயை தவிர்த்துவிட்டு இரண்டு கிளால் தண்ணீரை வெறும் வயிற்றில் குடித்துக்கொண்டு வரலாம். வாயில் சுரக்கும் உமிழ்நீருக்கு பாக்டீரியாக்களை அழிப்பதில் பெரும் பங்கு இருக்கிறது. எனவே, அதிகமாக தண்ணீர் குடிப்பதால் உமிழ்நீர் அதிகமாக சுரக்க உதவுகிறது. ஒரு நாளைக்கு 8 கிளாஸ் தண்ணீர் குடிப்பது நல்லதாகும்.
கிராம்பு பொடியை ஒரு சிட்டிகை எடுத்து தேனுடன் குழைத்து காலை சாப்பிட்ட பிறகு எடுத்துக்கொண்டு வருவது நல்ல பலனைத் தரும்.
அதிக காரம், புளிப்பு, மசாலாப் பொருட்கள் மற்றும் எண்ணெய் பதார்த்தங்கள், பூண்டு, வெங்காயம் போன்றவற்றை அதிகமாக எடுத்துக்கொள்வதை தவிர்த்து விடவும்.
தயிரில் lacto bacillus என்னும் நல்ல பாக்டீரியா இருப்பதால், இது நம் வயிற்றில் உள்ள கெட்ட பாக்டீரியாவை அழிக்க உதவுகிறது. எனவே, வாய் துர்நாற்றத்தை போக்க தயிர் ஒரு நல்ல சாய்ஸ் ஆகும்.
சாப்பிட்ட பிறகு சோம்பு எடுத்துக்கொள்வது அஜீரண பிரச்னைகளை போக்குவதற்கு மட்டுமில்லாமல் வாயை புத்துணர்ச்சியாக வைக்கவும் பயன்படுத்தப்படுகிறது. இதில் இருக்கும் இனிப்பு, வாசனை எண்ணெய் வாய் துர்நாற்றத்தைப் போக்க உதவுகிறது.
ஆரஞ்சு பழம் சாப்பிடுவது பல் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது. ஆரஞ்சு பழத்தில் அதிகமாக வைட்டமின் உள்ளது. வாயில் உமிழ்நீர் அதிகமாக சுரக்காததே கெட்ட பாக்டீரியாக்கள் உருவாகக் காரணமாகும். ஆரஞ்சு பழத்தை சாப்பிடுவதால், வாயில் அதிகமாக உமிழ்நீர் சுரக்க உதவுகிறது. இது கெட்ட பாக்டீரியாக்களை அழித்து வாயை துர்நாற்றம் ஏற்படாமல் பாதுகாக்கிறது.
நிறைய சூயிங் கம் மற்றும் Mouth washல் Zinc அதிகமாக உள்ளதால் வாய் துர்நாற்றத்தைப் போக்க பயன்படுத்தப்படுகிறது. எனவே, Zinc கலந்த மவுத் வாஷ்ஷை வைத்து தினமும் வாயை கொப்பளித்து வருவதால், வாயில் உள்ள துர்நாற்றம் விரைவில் குறையும்.