நம்முடைய உடலுக்கு செரிமானம் என்பது மிகவும் முக்கியமாகும். உடலுக்கு சக்தியை கொடுக்கவும், உடலை ஆரோக்கியமாக வைத்து கொள்ளவும், செரிமானம் சரியாக நடக்க வேண்டும். சில நேரங்களில் அதிகம் சாப்பிட்டு விடுவதால் வயிறு வீக்கம், அஜீரணம், குமட்டல் போன்ற செரிமான பிரச்னைகள் வர வாய்ப்புள்ளது. அதை சரி செய்ய இயற்கையாகவே பழங்கள் இருக்கின்றது. செரிமான பிரச்னையை சரி செய்யவும், குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் என்னென்ன பழங்கள் சாப்பிட வேண்டும் என்று இந்தப் பதிவில் காணலாம்.
ஆப்பிள் (Apple): உலகம் முழுவதும் இருக்கும் மக்களால் அதிகம் விரும்பப்படும், மற்றும் அதிகம் உண்ணப்படும் பழமாக ஆப்பிள் இருக்கிறது. ஆப்பிளில் உள்ள பெக்டின் (Pectin) என்ற பொருள் மலச்சிக்கல், வயிற்றுப்போக்கு ஆகியவற்றிலிருந்து நிவாரணம் தரும். அதுமட்டுமில்லாமல், உடலில் உள்ள நச்சை வெளியேற்றும், செரிமானத்தை மேம்படுத்தும். எனவே, செரிமான பிரச்னைக்கு ஆப்பிளை எடுத்துக்கொள்வது நல்லது.
கிவி (Kiwi): கிவி பழத்தில் நார்ச்சத்து அதிகமாக இருப்பதால் நல்ல மலமிளக்கியாக செயல்படக்கூடியதாகும். இதில் உள்ள ஆக்டினிதின்(Actinidain) என்னும் நொதி ஜீரணமாகாத புரதத்தை நொதிக்கச் செய்து எளிதில் செரிமானத்தை அதிகரிக்கும்.
மாம்பழம் (Mango): மாம்பழத்தில் உள்ள என்சைம்கள் செரிமான பாதையில் உள்ள கழிவுகளை வெளியேற்ற உதவுகிறது. மாம்பழத்தில் அதிகமாக இருக்கும் நார்ச்சத்து பெருங்குடல் புற்றுநோயை வரும் அபாயத்தை குறைக்கக் கூடியதாகும். மாம்பழத்தை சாலட், ஜூஸ் போன்றவையாக செய்து சாப்பிடலாம்.
வாழைப்பழம் (Banana): வயிற்றில் புண்களை ஏற்படுத்தக்கூடிய பாக்டீரியாக்களை அழிக்கும் ஆற்றல் வாழைப்பழத்திற்கு உண்டு. வயிற்றுப்போக்கு ஏற்படும்போது வாழைப்பழத்தை சாப்பிட்டால், நிவாரணம் கிடைக்கும். செரிமான பிரச்னைகளை போக்கி இயல்பு நிலைக்குக் கொண்டுவரும். வாழைப்பழம் செரிமான அமைப்பின் செயல்பாட்டை ஒழுங்கமைக்கும் தன்மையையும் கொண்டது.
ஆப்ரிகாட் (Apricot): ஆப்ரிகாட்டில் வைட்டமின் சி அதிகம் உள்ளதால், நோய் எதிப்பு சக்தியை மேம்படுத்தும். இதில் நார்ச்சத்தும் அதிகம் உள்ளதால்,செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. குடல் இயக்கம் சீராக நடைபெறுவதற்கு உதவுவதால், மலச்சிக்கல் போன்ற பிரச்னைகள் வராது.
வயிற்றை ஆரோக்கியமாக பராமரிப்பதே உடல் ஆரோக்கியத்திற்கு முதல்படியாக அமையும். செரிமான பிரச்னைகள் வந்தால் இதுபோன்று இயற்கையாக உள்ள பழங்களை உண்டு சரிசெய்து கொள்ளுங்கள். அடிக்கடி செரிமான பிரச்னைகள் வந்தால், கண்டிப்பாக மருத்துவரை அணுகுவது அவசியம்.