செயல்பாட்டு உணவு (Functional Food) என்பது ஆரோக்கியத்திற்குத் தேவையான அடிப்படை ஊட்டச்சத்துக்களுடன் மேலும் பல நேர்மறை ஆரோக்கிய நன்மைகளைத் தரக்கூடிய கூட்டுப் பொருட்களை தன்னுள் கொண்டுள்ள உணவு என்று கூறப்பட்டுள்ளது. செயல்பாட்டு உணவுகள் இயற்கையானதாகவும் இருக்கலாம் அல்லது பதப்படுத்தப்பட்டதாகவும் இருக்கலாம். அவற்றில் உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்களும், நாள்பட்ட வியாதிகள் வரும் அபாயத்தைத் தடுக்கக்கூடிய பயோலாஜிக்கலி ஆக்ட்டிவ் காம்பௌண்ட்களும் இருப்பது அவசியம். இந்தியாவில் பல ஆராய்ச்சிகளுக்குப் பின்னர் புரோபயோட்டிக்ஸ் அடங்கிய உணவுகள், நெல்லிக்காய், தக்காளி, கிவி, கொய்யா, க்ரீன் டீ, ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள், நட்ஸ் மற்றும் விதைகள் அடங்கிய ஃபங்ஷனல் ஃபுட் என அறிவிக்கப்பட்டுள்ளது. தினசரி வாழ்க்கையில் நாம் உட்கொள்ளும் உணவுகளில் எவையெல்லாம் செயல்பாட்டு உணவுகள் என்பதை இந்தப் பதிவில் பார்க்கலாம்.
1. முழு மற்றும் சிறுதானிய வகைகள்: ஓட்ஸ், பிரவுன் ரைஸ், குயினோவா போன்ற முழு தானியங்கள் மற்றும் கம்பு, சோளம், கேழ்வரகு போன்ற சிறு தானியங்களில் கரையாத மற்றும் கரையக்கூடிய நார்ச்சத்துக்கள் அதிகம் உள்ளன. இவை எடை பராமரிப்பு முதல் இதய ஆரோக்கியம் காப்பது வரை பல ஆரோக்கிய நன்மைகளுக்கு உதவி புரியும். மேலும், நாள்பட்ட வியாதியான நீரிழிவு நோய் வரும் அபாயத்தைத் தடுக்க உதவும். சிறுதானிய உணவுகள் க்ளூட்டன் ஃபிரீயானவை. சீரான குடல் இயக்கத்திற்கு உதவுபவை. இவற்றிலுள்ள அதிகளவு நார்ச்சத்து, புரோட்டீன் மற்றும் இரும்புச் சத்து, கால்சியம் போன்ற நுண்ணுயிர்ச் சத்துக்கள் (Micronutrients) நீரிழிவு நோயைக் குணப்படுத்தவும் இதய ஆரோக்கியம் காக்கவும் உதவுகின்றன.
2. விதைகள்: பூசணி விதை, சூரியகாந்தி விதை, மெலன் விதைகள், ஃபிளாக்ஸ் விதைகள், சியா விதைகள் மற்றும் எள் விதைகள் ஆகியவற்றில் தரமான புரோட்டீன், இதயத்துக்கு ஆரோக்கியம் தரும் கொழுப்புகள், வைட்டமின்கள் மற்றும் மினரல்கள் அதிகளவில் நிறைந்துள்ளன.
3. நட்ஸ்: பாதாம் மற்றும் வால்நட் கொட்டைகள் மிக அதிகளவு ஊட்டச்சத்துக்கள் நிறைந்த செயல்பாட்டு உணவுகளாகத் திகழ்கின்றன. இவற்றில் புரோட்டீன், நார்ச்சத்துக்கள், வைட்டமின்கள் மற்றும் மினரல்கள் அதிகளவில் நிறைந்துள்ளன. இவை, இதய ஆரோக்கியம் காப்பது, எடையை சம நிலையில் பராமரிப்பது, செரிமான இயக்கத்தை மேம்படுத்துவது நீரிழிவு நோயை குணப்படுத்துவது என பல வழிகளில் உடலுக்கு நன்மைகள் புரிய உதவுபவை.
4. மசாலா பொருட்கள்: நம் சமையல் அறையில் உள்ள இந்திய மசாலா பொருட்கள் (Spices) ஊட்டச்சத்துக்கள் நிறைந்த செயல்பாட்டு உணவுகளாக விளங்குகின்றன. மஞ்சளில் உள்ள குர்குமின் என்ற பொருள் ஆன்டி இன்ஃபிளமேட்டரி குணம் கொண்டது. இஞ்சி என்னும் ஸ்பைசி ரூட் பாரம்பரியமாக அஜீரணம் போன்ற வயிற்றுப் பிரச்னைகளை நீக்க உதவும். மேலும் இதற்கு ஆன்டி இன்ஃபிளமேட்டரி குணமும் உண்டு. பட்டை மற்றும் லவங்கம் சாதாரணமாக உணவுகளில் சேர்க்கப்படுபவை. இவை இன்சுலின் செயல்பாட்டை மேம்படுத்தும்; கொலஸ்ட்ரால் அளவை குறைக்க உதவும்.
5. யோகர்ட்: இதிலுள்ள புரோபயோட்டிக்ஸ் குடலிலுள்ள நல்ல பாக்டீரியாக்கள் ஆரோக்கியமாக வளர உதவும். இதனால் குடல் இயக்கம் சிறப்பாக நடைபெறும். மேலும். யோகர்ட் அதிகளவு புரோட்டீன் மற்றும் கால்சியம் சத்தை உடலுக்கு வழங்க வல்லது.