கேஸ்லைட்டிங் என்பது உணர்ச்சி ரீதியான துஷ்பிரயோகத்தின் ஒரு நவீன வடிவம் ஆகும். இந்த நயவஞ்சகமான கையாளுதல் நுட்பம் நம் உணர்வுகள் மற்றும் நினைவுகளை நாமே யூகிக்க வைக்கிறது. கேஸ் லைட்டிங் நம் யதார்த்தத்தை பற்றிய முழு உணர்வையும் குறை மதிப்பிற்கு உட்படுத்துகிறது. காலப்போக்கில் அதிக பாதுகாப்பற்றவர்களாகவும், உணர்ச்சி ரீதியாக நிலையற்றவர்களாகவும், மனச்சோர்வடைந்தவர்களாகவும் ஆக்கிவிடுகிறது. துஷ்பிரயோகம் செய்பவர் பாதிக்கப்பட்டவரின் மனதில் சுய சந்தேகத்தையும், குழப்பத்தையும் விதைக்க முயற்சிக்கிறார். பொதுவாக, காதல் உறவுகளில் கேஸ்லைட்டிங் மிகவும் பொதுவானது என்றாலும், இது குடும்பம் மற்றும் பணியிட உறவுகளிலும் ஏற்படுகிறது.
கேஸ்லைட்டிங்கிற்கான அறிகுறிகள்:
முன்பு இருந்ததை விட அதிகக் கவலை மற்றும் நம்பிக்கை குறைவாக இருப்பது போன்ற மன ஆரோக்கியத்தை பாதிப்பது.
உணர்திறன் உடையவராக இருக்கிறோமா என்று அடிக்கடி யோசிப்பது.
நாம் செய்வது எல்லாம் தவறு, நாம் செய்வது எல்லாம் தவறாகத்தான் போகும் என்ற உணர்வு ஏற்படுவது.
விஷயங்கள் ஏதேனும் தவறாக நடக்கும்பொழுது அது நம் தவறு என்று எப்பொழுதும் நினைப்பது.
குழப்பம் ஏற்படுவது மற்றும் அடிக்கடி மன்னிப்பு கேட்பது.
நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரிடமிருந்து தனிமைப்படுத்தப்பட்ட உணர்வு.
நம்பிக்கையற்ற உணர்வு, தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டதாக உணர்வது.
சொந்தமாக முடிவெடுப்பது கடினமாவதுடன், எதிர்காலத்தைப் பற்றிய உற்சாகமற்ற உணர்வு உண்டாவது.
கேஸ்லைட்டிங் துஷ்பிரயோகம் செய்பவர்கள் நம்மை கையாளுதலில் நிபுணத்துவம் பெற்றவர்களாக இருப்பார்கள். அவர்கள் நம் பாதிப்புகள் மற்றும் உணர்திறன்களை அறிந்திருப்பதால் அந்த அறிவை நமக்கு எதிராகப் பயன்படுத்துகிறார்கள். அவை நம்மை, நம் முடிவுகளை, நம் நினைவுகளை சந்தேகிக்க வைப்பதுடன் கவலை மற்றும் மனச்சோர்வை ஊக்குவிக்கிறது.
இது காலம் காலமாகவே நடைபெற்று வருகிறது. ஆனால், அவ்வளவாக இதை யாருமே.‘எமோஷனல் அபியூஸ்’ என்று கவனம் காட்டுவதில்லை. எங்கு அதிகமான நம்பிக்கை உள்ளதோ அங்கு இந்த ‘கேஸ் லைட்டிங்’ நடக்கலாம். மிகவும் அன்யோன்யமாக இருக்கும் உறவுகளிடமும், சிலசமயம் பெற்றோர் குழந்தைகள் உறவிலும் கூட இது நடக்கும். எல்லோர் முன்பும் தன்னுடைய பார்ட்னரை அசிங்கப்படுத்துவது, மட்டம் தட்டுவது, கண்ட்ரோல் செய்வது போன்றவை நடக்கும். அதைப் பற்றிக் கேட்டால், ‘உனக்குதான் ஏதோ பிரச்னை. நான் விளையாட்டாக சொன்னதை நீதான் அப்படி எடுத்துக் கொள்கிறாய் என்று அவரை குற்றவாளி ஆக்கி விடுவார்கள்.. கடந்த காலத்தில் நடந்த ஏதேனும் ஒரு சம்பவத்தைச் சொல்லி கேட்கும் பொழுது, ‘அப்படி நான் சொல்லவே இல்லை’ என்றும், தன்னுடைய பார்ட்னர்தான் பொய் சொல்கிறார் என்றும் நிஜத்தை மறுப்பது ஆகியவை கேஸ்லைட்டிங்கில் அடங்கும்.
கேஸ்லைட்டிங்கிலிருந்து மீள்வது எப்படி?
கேஸ்லைட்டருடன் தொடர்பை முறித்துக் கொள்ளுதல் சிறப்பு. அதுவே அந்த நபர் குடும்ப உறுப்பினராகவோ அல்லது தவிர்க்க முடியாதவராகவோ இருந்தால் தொடர்பை முறித்துக்கொள்வது கடினமாக இருக்கும். அம்மாதிரி சந்தர்ப்பங்களில் அவர்களுடனான தொடர்பை முற்றிலுமாக தவிர்ப்பதற்கு பதில் குறைத்துக்கொள்ள வேண்டும்.
கேஸ்லைட்டிங் ஆட்களை விட்டு வெளியேறுவது சில சமயம் பாதுகாப்பற்றதாகவும், ஆபத்தானதாகவும் இருக்கலாம். அம்மாதிரி சமயங்களில் நம்பகமான அன்பானவர்களுடன் பேசுவதும், தேவைப்பட்டால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சட்ட அமலாக்க நிறுவனத்தை அணுகவும் தயங்க வேண்டாம்.
உங்கள் மீது அக்கறையுள்ள நண்பர்கள், குடும்ப உறுப்பினர்களிடமிருந்து உங்களை பிரிக்க கேஸ்லைட்டரை அனுமதிக்காதீர்கள். முடிந்தவரை பலருடன் என்ன நடக்கிறது என்பதை பகிர்ந்துகொள்வது நல்லது.
அன்பான உறவுகள், அன்புக்குரியவர்கள், நம்மை நேசிக்கும் நபர்கள் மற்றும் நம்மை பாராட்டும் நபர்களுடனும் முடிந்த அளவு நேரத்தை செலவிடலாம். கேஸ்லைட்டிங்கின் மூலம் நம் வாழ்வின் ஒரு பகுதியாக மாறிய நம் சந்தேகங்கள், பயங்களைப் பற்றி நம் மீது அக்கறை கொண்டவர்களிடம் பேசலாம்.
இப்பிரச்னைக்கு சிகிச்சைக்கு செல்வது, சிகிச்சையாளரின் வழிகாட்டுலுடன் செயல்படும்போது துரிதமாக நம் பழைய நிலையை மீட்டு விடலாம்.