‘ஜிஈஆர்டி’ என்பதற்கு ஆங்கிலத்தில் Gastro esophageal Reflux Disease என்று பெயர். சில, பிரச்னை தரும் வாழ்வியல் முறை, உடல் பருமன், தேவைக்கதிகமாக உணவு உண்பது, அடிக்கடி காபி, ஆல்கஹால், சாக்லேட் மற்றும் ஸ்பைசி உணவுகளை உண்பது போன்ற காரணங்களால் ஜீரணக் கோளாறு உண்டாகி, வயிற்றிலுள்ள அமிலம் பின்னோக்கி உணவுக் குழாய்க்குள் வருவதையே ஜிஈஆர்டி என்கிறோம்.
உணவியல் முறையில் சில மாற்றங்களைக் கொண்டு வந்தாலே இந்த உடற் பிரச்னையை குணப்படுத்தலாம். அதன்படி, ஜீரணத்துக்கு சாதகமாய் அமையக்கூடிய சிலவகை உணவுகளைப் பற்றி இந்தப் பதிவில் பார்க்கலாம்.
ஓட் மீலில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. இதை உண்பதால் ஜீரணம் சிறப்பாக நடைபெறும்; வயிற்று அமிலம் உணவுக் குழாய்க்குள் செல்வது தடுக்கப்படும்.
இஞ்சியில் இயற்கையாகவே ஆன்டி இன்ஃபிளமேட்டரி குணம் உள்ளது. இது வயிற்றின் உட்புற சுவர்களை ஆற்றுப்படுத்தி அமிலம் பின்னோக்கிப் பாய்வதைத் தடுத்து நிறுத்தும்.
வாழைப் பழம், மெலன் மற்றும் ஆப்பிள் போன்ற குறைந்த அளவு அமிலத் தன்மையுடைய பழங்களை உண்ணும்போது ஆசிட் ரெஃப்ளக்ஸ் குறைகிறது. அதே சமயம் சிட்ரஸ் பழங்களைத் தவிர்ப்பது நலம் தரும்.
கொழுப்புச் சத்து நிறைந்த மாமிசம் உட்கொள்வதைத் தவிர்த்து லீன் கட் மீட் (Meat) எடுத்துக்கொள்வது சிறப்பு. அது மட்டுமின்றி, பிரவுன் ரைஸ், குயினோவா உபயோகித்துத் தயாரித்த உணவு மற்றும் முழு தானியங்களால் செய்த பிரட் ஆகியவற்றில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. இவற்றை உண்பதால் செரிமானக் கோளாறு எதுவும் ஏற்பட வாய்ப்பிருக்காது; ஆசிட் ரெஃப்ளக்ஸ் தவிர்க்கப்படும்.
பாதாம் பருப்பு காரத்தன்மையை உண்டுபண்ணக்கூடிய உணவு. இது வயிற்று அமிலத்தை சமநிலைப்படுத்தி ஜிஈஆர்டி வராமல் காக்கும். அமிலத்தன்மை குறைவாக உள்ள பசலை, காலே, லெட்டூஸ் போன்ற பச்சை இலைக் காய்கறிகள் உண்பதால் ரெஃப்ளக்ஸ் அறிகுறி குறையும்.
பெருஞ்சீரகத்தில் இயற்கையாகவே செரிமானத்தை சீராக்க உதவும் குணம் உள்ளது. இதை உணவில் சேர்த்துக்கொள்வதால் ஜீரண மண்டலப் பாதை இதம் பெறும்; ஆசிட் ரெஃப்ளக்ஸ் (reflux) உண்டாகாது. கொழுப்பில்லாத அல்லது குறைந்த அளவு கொழுப்புள்ள பால் பொருட்களை உட்கொள்வதும் ஆசிட் ரெஃப்ளக்ஸ் ஆவதைத் தடுக்கும். 'உணவுக் கட்டுப்பாடே உடல் ஆரோக்கியம்' என்பதைப் புரிந்து கொண்டு விழிப்புணர்வுடன் வாழ்வோம்.