‘கோண்ட் கதிரா’ என்பது ஒரு வகை மூலிகைத் தாவரத்தின் உண்ணக்கூடிய பிசினி (கோந்து)யிலிருந்து தயாரிக்கப்படும் படிகம் போன்ற பொருளாகும். இதில் உடலுக்கு ஆரோக்கியம் தரக்கூடிய பல நன்மைகள் அடங்கியுள்ளன. ஆயுர்வேத மருத்துவத்திலும் இது பல வகைகளில் உபயோகிக்கப்பட்டு வருகிறது. இதிலுள்ள ஆரோக்கிய நன்மைகள் என்னென்ன என்பதை இந்தப் பதிவில் பார்ப்போம்.
இந்த கோந்திலுள்ள அதிகளவு கால்சியம் சத்தானது கர்ப்பிணிப் பெண்களுக்கு மிகவும் உபயோகமானதாக உள்ளது. அது கர்ப்பிணிப் பெண்களுக்கும் அவர்களின் வயிற்றில் வளரும் கருவிற்கும் எலும்பு வளர்ச்சி மற்றும் எலும்பு ஆரோக்கியம் தரக்கூடியதாக உள்ளது.
இதிலுள்ள கரையக்கூடிய நார்ச்சத்துக்களானது ஜீரண மண்டலத்தை சிறப்பாக செயல்படச் செய்வதுடன் மலச்சிக்கலையும் தவிர்க்கச் செய்யும் தன்மை கொண்டவை. இதிலுள்ள கார்போஹைட்ரேட் மற்றும் புரோட்டீன் கலவையானது, உடற்பயிற்சி மேற்கொள்ளும்போது உடலுக்குத் தேவைப்படும் தொடர்ச்சியான அளவு சக்தியை கொடுத்து உதவுகிறது.
இதன் கரையக்கூடிய நார்ச்சத்துக்களும் புரோட்டீனும் தேவைக்கு அதிகமான கொழுப்புகளைக் கரைத்து, இதய நாளங்களில் அடைப்பேற்படும் ஆபத்தைத் தவிர்க்கின்றன. இதனால் இதய ஆரோக்கியமும் காக்கப்படுகிறது.
இந்த கோந்தில் சிறுநீரைப் பிரித்திறக்கும் குணமும் அடங்கியுள்ளது. அதனால் கிட்னி ஆரோக்கியம் மேம்படுவதோடு, நச்சுக்களும் வெளியேற்றப்படுகின்றன. சிறுநீர்ப் பாதையில் தொற்று ஏற்படும் அபாயமும் குறைகிறது. இதிலுள்ள அதிகளவு ஊட்டச்சத்துக்களானது பாலூட்டும் தாய்மார்களுக்கு பால் சுரப்பை அதிகரிக்கச் செய்து, தாய் சேய் இருவருக்கும் முழுமையான ஆரோக்கியம் கிடைக்கச் செய்கின்றன.
இரத்த அழுத்தத்தையும் குறைக்க வல்லது இது. இருமல், வயிற்றுப்போக்கு போன்ற நோய்களுக்கும் நிவாரணம் தரக்கூடிய மருத்துவ குணம் கொண்டதென்றும் கூறப்படுகிறது.
இந்த கோந்தை இரண்டு அல்லது மூன்று மணி நேரம் ஊற வைத்தால் அது மிருதுத் தன்மை அடைந்துவிடும். பின் அதை குல்ஃபி, ஃபலூடா, ஸ்மூத்தி, லஸ்ஸி போன்றவை செய்யும்போது ஒரு கூட்டுப்பொருளாகச் சேர்த்து உண்கையில் நம் உடலின் ஆரோக்கியம் அதிகரிக்கும். இந்த ‘கோண்ட் கதிரா’வை நாமும் உண்டு நலம் பெறுவோம்.