

மாதத்துக்கு ஒரு முறையாவது விரதம் இருப்பது உடலுக்கு நல்லதாகும். விரதம் இருப்பதால் குடல் இயக்கங்கள் சீராகி அவை ஆரோக்கியமாக இருக்க வழி வகுக்கிறது. இத்தகைய சிறப்புமிக்க விரதத்தில் பல வகைகள் உண்டு. ஒவ்வொருவருடைய உடல் நிலைக்கு ஏற்ற வகையில் விரதம் இருப்பது நல்லது.
சிலர் குறிப்பிட்ட இடைவெளி விட்டு உணவு உண்ணும் விரதத்தை கடைப்பிடிப்பார்கள். சிலர் ஒருவேளை மட்டுமே சாப்பிட்டு விரதம் இருப்பார்கள். ஒரு சிலர் ஒரு நாள் முழுவதும் எதுவுமே சாப்பிடாமல் விரதம் இருப்பார்கள். இதன் வரிசையில் வெறும் ஜூஸ் மட்டுமே குடித்து விரதம் இருப்பதால் நம் உடலில் ஏற்படும் நன்மைகள் பற்றி தெரிந்து கொள்ளலாம்.
பழச்சாறுகள் உடலுக்குத் தேவையான அனைத்து வகையான ஊட்டச்சத்துக்களையும் கொடுக்கக் கூடியதாகும். இது நம்முடைய உடலுக்குத் தேவையான திரவ சத்துக்களை வழங்குகிறது. இதனால் உடலில் உள்ள நச்சுக்கள் நீங்கி புத்துணர்ச்சி ஏற்படும். ஜூஸ் விரதம் இருப்பதால் நம்முடைய செரிமான அமைப்பு நன்கு வேலை செய்யும். இதனால் உடலுக்குத் தேவையான ஆற்றல் கிடைத்து, உடலின் பிரச்னைகளை சரி செய்ய வழிவகுக்கிறது.
பழச்சாறுகளில் நிறைந்துள்ள ஊட்டச்சத்துக்கள் நமது இரத்த ஓட்டத்தில் பாய்ந்து, ஒவ்வொரு செல் மற்றும் திசுக்களை துடிப்புடன் வைத்திருக்க உதவுகிறது. தொடக்கத்தில் ஜூஸ் விரதம் முயற்சி செய்யும்போது நன்கு பசி எடுக்கும். பின்னர் படிப்படியாக பசி உணர்வு குறைய ஆரம்பிக்கும். உடல்நிலை பாதிப்பு உள்ளவர்களும், கர்ப்பிணிப் பெண்களும் ஜூஸ் விரதம் இருக்கும் முன்பு மருத்துவர்களை ஆலோசிப்பது நல்லது.
ஜூஸ் விரதம் இருப்பதால் உடலுக்குத் தேவையான ஆன்ட்டி ஆக்சிடென்ட், வைட்டமின்கள் போன்றவை கிடைக்கிறது. இது ஒருவரின் சரும ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும். ஜூஸ் விரதம் இருக்கும்போது தசைகள் இழப்புக்கு வாய்ப்புள்ளதா என்ற சந்தேகம் சிலருக்கு இருக்கும். அத்தகையவர்கள் புரதம் நிறைந்த பழச்சாறுகளை எடுத்துக் கொண்டால் உடலில் ஏற்படும் தசை இழப்பைக் குறைக்கலாம்.
நீங்கள் கடைகளில் ஜூஸ் வாங்கி, அதைப் பருகி விரதம் இருக்க முயற்சிப்பவராக இருந்தால் சற்று கவனமாக இருங்கள். ஏனெனில், கடைகளில் விற்கப்படும் பழச்சாறுகளில் சர்க்கரை அதிகமாக சேர்ப்பார்கள். அது உடல் நலத்துக்குக் கேடு விளைவிப்பதாகும். ஜூஸ் விரதம் இருக்கும்போது சிலருக்கு தலைவலி ஏற்படலாம். அது நமது உடலின் நீர் பற்றாக்குறையின் அறிகுறி. அந்த சமயத்தில் உடலுக்குத் தேவையான நீர் பருகுவது நல்லது.
ஜூஸ் விரதம் இருக்கும்போது ஆப்பிள், ஆரஞ்சு, அன்னாசி, திராட்சை, தர்பூசணி, மாதுளை போன்ற பழங்களையும், கீரை கேரட், பீட்ரூட் போன்ற காய்கறிகளையும் எடுத்துக் கொள்ளலாம். ஆனால், இனிப்பு சுவை அதிகம் நிறைந்த பலாப்பழம், மாம்பழம், வாழைப்பழம் போன்ற பழங்களை எடுத்துக் கொள்ளாதீர்கள்.