நடுத்தர வயதை எட்டிய பலருக்கும் உண்டாகக் கூடிய பிரச்னை வாய்வுத் தொல்லை (Gastric problem). இந்தப் பிரச்னையால் பாதிக்கப்படுவோருக்கு மார்பு மற்றும் முதுகுப் பகுதிகளில் லேசான வலியும், வயிற்றுப் பகுதியில் பிடிப்பு ஏற்படுவதும், ஏப்பம் வருவதும் அறிகுறிகளாகும்.
நம் குடலிலுள்ள நன்மை தரும் பாக்டீரியாக்கள் ஜீரணமாவதற்காக உணவுகளை உடைக்கும்போது வாயு உற்பத்தியாவது வழக்கமான ஒன்று. மேலும், அது ஆரோக்கியத்துக்கும் நல்லது. வாய்வு உற்பத்தியை அதிகமாக்கும் உணவு எவை என்பதை இந்தப் பதிவில் பார்ப்போம்.
பீன்ஸில் ரஃபினோஸ் (Raffinose) எனப்படும் ஒரு வகை காம்ப்ளெக்ஸ் சுகர் அதிகம் உள்ளது. இது ஜீரணமாகக் கடினமானது. பீன்ஸை இரவில் ஊறவைத்து மறுநாள் சமைத்து உண்பதால் அதிலிருந்து உற்பத்தியாகும் வாய்வின் அளவு குறையும். இதேபோல், முட்டைக்கோஸ், புரோக்கோலி, காலிபிளவர் ஆகிய காய்களிலும் ரஃபினோஸ் அளவு அதிகம் உள்ளதால் இவற்றிலிருந்தும் வாய்வு அதிகம் வெளியேறும்.
கோதுமை, ஓட்ஸ் போன்ற முழு தானியங்களில் ஸ்டார்ச், நார்ச்சத்து, ரஃபினோஸ் ஆகியவை அதிகம். இவற்றையும் பாக்டீரியாக்கள் உடைக்க முயலும் செயலில் ஈடுபடும்போது அதிகமான வாய்வு வெளியேறும்.
பால் பொருட்களில் உள்ள லாக்டோஸ் என்ற சர்க்கரையையும், வெங்காயத்தில் உள்ள ஃப்ரக்டோஸ் என்ற பொருளை உடைக்கும்போதும் வாய்வு வெளியேறுகிறது.
பதப்படுத்தப்பட்டு பாக்கெட்களில் அடைத்து விற்கப்படும் பிரட் மற்றும் ஸ்நாக்ஸ்களில் லாக்டோஸ் மற்றும் ஃப்ரக்டோஸ் இரண்டும் உள்ளன. இவை இரண்டும் ஒன்று சேர்கையில் வெளியேறும் வாய்வின் அளவும் அதிகமாகிறது.
கேண்டி (Candy) எனப்படும் கடினமான இனிப்பை சுவைக்கும்போதும் வெளியிலிருந்து வாய்வு உடலுக்குள் செல்லும் வாய்ப்பு ஏற்படுகிறது.
இந்தப் பிரச்னைக்குத் தீர்வு காண சோடா, கார்பனேட்டட் ட்ரிங்க்ஸ் போன்றவற்றைத் தவிர்த்து, உணவு முறையிலும் வாழ்வியல் முறையிலும் மாற்றத்தைப் பின்பற்றுவதே ஆகும்.