கடவுளால் ஆசீர்வதிக்கப்பட்ட விதை எது தெரியுமா?

கருஞ்சீரகம்
கருஞ்சீரகம்
Published on

பாரம்பரிய மருத்துவத்தில் முக்கிய இடம் பெற்றது கருஞ்சீரகம். ரோமானியர்கள் மூலம் அறிமுகமான இந்த விதையை  அரேபியர்கள்  ‘ஆசீர்வதிக்கப்பட்ட விதை (சீட் ஆப் பிளஸ்ஸிங்)’ என்று அழைத்தார்கள். மரணத்தைத் தவிர அனைத்து விதமான வியாதிகளையும் கருஞ்சீரகம் குணப்படுத்தும் என்று எகிப்தியர்கள் குறிப்பிட்டுள்ளனர். இந்தியாவில் கருஞ்சீரகத்தை ஆயிரம் வருடங்களுக்கு முன்பிருந்தே மருத்துவதிற்காகப் பயன்படுத்தி வருகிறார்கள்.

கருஞ்சீரகத்தில் நார்ச்சத்து, அமினோ ஆசிட், இரும்புச்சத்து, சோடியம், கால்சியம், பொட்டாசியம் போன்ற சத்துக்கள் அடங்கியுள்ளன. இதில் வைட்டமின் ஏ, பி, பி12, நையாசின், வைட்டமின் சி போன்றவை உள்ளன. கருஞ்சீரகத்தில் ஆன்டி ஆக்ஸிடன்ட் அதிகமாக உள்ளதால், வீக்கத்தை குறைக்க உதவும். வைட்டமின் ஈ அதிகம் உள்ளதால் சருமத்திற்கு மிகவும் நல்லதாகும். மேலும், சருமத்தில் சுருக்கங்கள் வராமல் தடுக்கும். கருஞ்சீரகத்தை அப்படியே சாப்பிடலாம். ஒரு ஸ்பூன் தேனுடன் கலந்து சாப்பிடலாம். பாலுடன் கொதிக்க வைத்து சாப்பிடலாம். பொடியாக செய்து சுடுநீரில் கலந்து அல்லது பாலுடன் கலந்து சாப்பிடலாம். பிரட், சீஸ் மீது பொடியாக தூவி சாப்பிடலாம்.

தினசரி 2 கிராம் கருஞ்சீரகம் எடுத்துக்கொண்டால் பாஸ்டிங்  சுகர் குளூக்கோஸ் குறையும் என்கிறார்கள். இன்சுலின் சுரப்பு தடையை நீக்கி கணையம் இயங்க தேவையான பீட்டா செல்களின் பணியை ஊக்குவிக்கும். இதற்கு  கருஞ்சீரகத்தை இரவில் ஊறவைத்து காலையில் சாப்பிட வேண்டும். கருஞ்சீரக பொடியை ஒரு தேக்கரண்டி எடுத்து சுடுநீரில் கலந்து சிறிதளவு தேன் கலந்து பருக சிறுநீரக கற்களும், பித்தப்பை கற்களும் கறையும். இதை காலை, மாலை இரு வேளைகள் சாப்பிட வேண்டும்.

குழந்தைகளுக்கு வரும் ஆரம்பகட்ட காக்காய் வலிப்பை கருஞ்சீரகத்தை பொடியாக தினமும் சாப்பிட்டு வர அதன் தீவிரம் குறையும் என்பதை ஆய்வில் கண்டறிந்துள்ளனர். தினமும் 100 முதல் 200 மில்லி கிராம் கருஞ்சீரக கஷாயத்தை இரு வேளைகள் தொடர்ந்து இரண்டு மாதங்களுக்கு சாப்பிட உயர் இரத்த அழுத்தம் குறையும். ஆரம்பகட்ட இரத்த கொதிப்பு சரியாகும்.

தொடர் இருமல் மற்றும் ஆஸ்துமா நோயால் அவதிப்படுகிறவர்கள் ஒரு தேக்கரண்டி கருஞ்சீரகப்பொடியை  தேன் மற்றும் அரை தேக்கரண்டி அரைத்த வெள்ளைப்பூண்டு விழுதுடன் சாப்பிட வேண்டும். இது நுரையீரலில் உருவாகும் சளியை அகற்றும். முடியாதவர்கள் கருஞ்சீரகத்தை போட்டு கொதிக்க வைத்த நீரை பருகி வர ஆஸ்துமா தீவிரம் குறையும். சுவாசப்பாதை சுத்தமாகும். கருஞ்சீரக எண்ணெய்யையும் பயன்படுத்தலாம்.

வேண்டாத கெமிக்கல்களை உடல் எடுத்துக்கொள்ளும் பட்சத்தில் எழும் மூச்சு திணறல், மார்பு வலி மற்றும் சுவாசக் கோளாறுகளை கருஞ்சீரக கொதிநீர் சரி செய்யும். இதற்கு காரணம் கருஞ்சீரகத்தில்  உள்ள, ‘தைமோசியோனிக்’ என்ற வேதிப்பொருள். இது கெட்ட கொழுப்பு மற்றும் ஒவ்வாமையை நீக்கும். கருஞ்சீரகம் சக்தி வாய்ந்த ஆன்டி ஆக்ஸிடன்ட் மற்றும் ஆன்டி இம்பிளமென்ரி பண்புகளை கொண்டது. நாள்பட்ட அலர்ஜியை போக்க, மூட்டு வலி, வீக்கம் போன்றவற்றுக்கு  கருஞ்சீரக எண்ணெய் தினமும் பயன்படுத்தினால் விரைவில் சரியாகும்.

தினமும் கருஞ்சீரகம் சாப்பிடுவதால் ஞாபக சக்தி அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது. தேனுடன் கருஞ்சீரகம் சேர்த்து வெறும் வயிற்றில் சாப்பிடுவதால், அறிவுத்திறன் அதிகரிக்கும். வயதானவர்களுக்கு ஞாபக சக்தியை அதிகரிக்க உதவும். கருஞ்சீரகத்தை புதினாவுடன் சேர்த்து சாப்பிட்டால், அல்சைமர் வியாதியை குணப்படுத்தும் என்பது குறிப்பிடத்தக்கது. கருஞ்சீரகத்தை வெறும் வயிற்றில் சாப்பிடுவதே அதிகப் பலனைத் தரும்.

இதையும் படியுங்கள்:
‘பன்னாடை’ என்பது அவமரியாதையான சொல்லா?
கருஞ்சீரகம்

சரும நோய்களுக்கு கருஞ்சீரகம் சிறந்த மருந்து. கருஞ்சீரக பொடியை கரப்பான் மற்றும் சொரியாசிஸ் நோய் இருப்பவர்கள் தேய்த்து குளித்து வர சரியாகும். தலையில் பொடுகு, புண் இருப்பவர்களும் பயன்படுத்தலாம். புண்களில் ஏற்படும் தழும்புகளும் மறையும். குளியலுக்கு பயன்படுத்தும் பொடிகளில் கருஞ்சீரகத்தை அரைத்து சேர்த்து பயன்படுத்துவது நல்லது. கருஞ்சீரக எண்ணையுடன் எலுமிச்சை சாறு சேர்த்து முகத்தில் தடவுவதால் முகம் பளபளப்பாகக் காட்சி தரும். கருஞ்சீரகத்தில் இருக்கும் ஊட்டச்சத்துக்கள் முடி வளர்ச்சியை அதிகரிக்கிறது.

காலை, மாலை இரு வேளைகள் கருஞ்சீரகத்தை பொடியாக சுடுநீரில் அல்லது தேன் கலந்து சாப்பிட்டால் அது கருப்பையை சுத்தமாக்கும். கருஞ்சீரகத்தூளை தினமும் காலையில் வெந்நீரில் கலந்து சாப்பிட்டு வர மாதவிலக்கு சுழற்சி சரியாகும். கருஞ்சீரக எண்ணையை தலையில் தடவுவதால் தலைவலி குணமாகும். கருஞ்சீரக எண்ணெயில் கொலாஜன் உள்ளதால் இது சருமத்திற்கு நெகிழ்வுத்தன்மையை கொடுக்கும். உடலில் உள்ள நாள்பட்ட கட்டி உடைய கருஞ்சீரகத்தை வினிகரை விட்டு நன்றாக அரைத்து கட்டி மீது பூச அடுத்த நாள் கட்டி உடைந்து சீழ் வரும். வேதனை குறையும். ஒரு தேக்கரண்டி கருஞ்சீரக எண்ணெய்யை வெதுவெதுப்பான தண்ணீரில் சேர்த்து குடிக்க பற்களை பாதுகாப்பது மட்டுமில்லாமல், ஈறுகளில் உண்டாகும் இரத்தப்போக்கு, பலவீனமான பற்கள் போன்றவற்றை சரிசெய்யும்.

கருஞ்சீரகத்தில் 4 ஆற்றல்மிக்க ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் உள்ளது. இது நாள்பட்ட நோய்களுக்கு தீர்வு கொடுக்கிறது. குறிப்பாக, மார்பக புற்றுநோய், கர்ப்பப்பை புற்றுநோய், நுரையீரல் புற்றுநோய், கணைய புற்றுநோய் ஆகியவற்றையும்   சர்க்கரை, இதய நோய், உடல் பருமன் ஆகியவற்றையும்  குணப்படுத்தும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com