மழைக்கால நேரங்களில் ஆரோக்கியத்தில் அதிக கவனம் எடுத்துக்கொள்வது மிகவும் அவசியமாகும். நாம் வாங்கும் சில காய்கறிகளில் பாக்டீரியா மற்றும் பூஞ்சை வளர்ச்சி மழைக்காலத்தில் அதிகம் இருக்கும் என்பதால், எளிதில் நோய்த்தொற்று ஏற்படும் வாய்ப்புகள் உள்ளன. இதனால் வயிறு சம்பந்தமான பிரச்னைகள் மற்றும் உடல் நல பிரச்னைகள் ஏற்படலாம். ஆகவே, மழைக்காலத்தில் எந்தெந்த காய்கறிகளை உணவில் தவிர்க்கலாம் என்பதைப் பற்றி இந்தப் பதிவில் காண்போம்.
1. கீரை வகைகள்: மழைக்காலத்தில் கீரைகள், காலிபிளவர், முட்டைகோஸ் போன்றவற்றை எடுத்துக்கொள்வதால், பாக்டீரியா மற்றும் பூஞ்சை நோய்த்தொற்றை ஏற்படுத்தும். இதற்கு முக்கியமான காரணம் ஈரமான வானிலை மற்றும் இவற்றை சுத்தப்படுத்துவது என்பது சற்று கடுமையான வேலையாகும். எனவே, சரியாக சுத்தம் செய்யப்படாத இந்த வகை காய்கறிகளால் வயிற்றுப் பிரச்னை ஏற்படலாம்.
2. வேர் காய்கறிகள்: மழைக்காலத்தில் வேரிலிருந்து விளையக்கூடிய காய்கறிகளான கேரட், முள்ளங்கி, உருளை, பீட்ரூட் போன்ற காய்கறிகளை தவிர்ப்பது நல்லது. மண்ணில் இருந்து எடுக்கப்படும் இந்த காய்கறிகள் சுலபமாக மாசுப்பட வாய்ப்புகள் உள்ளன. எனவே, இந்தக் காய்கறிகளை நன்றாக சுத்தம் செய்ய வேண்டியது அவசியம். இல்லையேல், நோய்த்தொற்று ஏற்பட வாய்ப்புகள் உள்ளன.
3. கத்தரிக்காய்: கத்தரிக்காயில் alkaloids உள்ளது. இது ஒருவகை நச்சுத்தன்மை வாய்ந்த ரசாயனமாகும். இது பூச்சிகளிடமிருந்து பாதுகாத்துக்கொள்ள காய்கறிகள் உற்பத்தி செய்யும். மழைக்காலத்தில் அதிகமாக பூச்சிகள் காய்கறிகளை தாக்கும் என்பதால், இதை கத்தரிக்காய் உற்பத்தி செய்யும். இதனால் ஏற்படும் அழற்சி காரணமாக சரும அரிப்பு, தடிப்பு, குமட்டல் போன்ற பிரச்னைகள் வரும். எனவே, மழைக்காலத்தில் கத்தரிக்காய் சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது.
4. காளான்: காளான் ஈரப்பதத்தில் செழித்து வளரக்கூடியது. மழைக்காலத்தில் இதை உணவுடன் எடுத்துக்கொள்வது நோய்த்தொற்றை ஏற்படுத்தும் வாய்ப்புகளை அதிகரிக்கும். எனவே, மழைக்காலத்தில் கண்டிப்பாக காளானை தவிர்ப்பது ஆரோக்கியத்திற்கு நல்லது.
5. பட்டாணி: பட்டாணிகளின் மேற்பரப்பில் காற்றில் உள்ள ஈரப்பதம் காரணமாக பாக்டீரியாவின் வளர்ச்சி ஏற்படும். எனவே, இதையும் மழைக்காலத்தில் தவிர்த்து விடுவது சிறந்தது. சுரைக்காய், பாகற்காய், புடலங்காய், பூசணி போன்ற காய்கறிகளை மழைக்காலத்தில் உணவில் சேர்த்துக் கொள்வது நல்லதாகும்.
நல்ல வேகமாக வரக்கூடிய தண்ணீரில் காய்கறிகளை கழுவதால் அழுக்கை நன்றாக நீக்க முடியும். காய்கறிகளை உப்பு தண்ணீரில் 15 நிமிடம் ஊற வைப்பதனால், பாக்டீரியாக்களை அழிக்கலாம். காய்கறிகளை நன்றாக காய்ந்த, உலர்ந்த இடங்களில் வைப்பதன் மூலம் பூஞ்சை வளர்ச்சி ஏற்படாமல் தடுக்கலாம்.