சிலருக்கு உடலில் அடிக்கடி அரிப்பு ஏற்படும். அக்கம் பக்கத்தில் இருப்பவர்களைக் கூட கவனிக்காமல் சொரிந்துகொண்டே இருப்பார்கள். சொரிந்ததும் அந்த இடத்தில் தடிப்பு, சருமம் சிவந்து போகுதல் ஆகியவை ஏற்படும். இந்த அலர்ஜி எதனால் வருகிறது என்பதை முதலில் கவனிக்க வேண்டும். நாம் குளிக்க உபயோகிக்கும் சோப்பு, துணிகள் துவைக்கப் பயன்படுத்தும் டிடர்ஜென்ட் பவுடரால் கூட இது ஏற்படலாம். ஜீரணம் சரியாக ஆகாமல் இருந்தாலும், மலச்சிக்கல் பிரச்னை இருந்தாலும் சருமத்தில் அரிப்பு ஏற்படும். பூச்சிக்கடி, கொசுக்கடியால் கூட அரிப்பு ஏற்பட்டு சொறிந்து கொண்டிருப்போம். சிலருக்கு இறுக்கமான உடை அணிந்தால் கூட சருமத்தில் அழுத்தம் ஏற்பட்டு அரிப்பு ஏற்படும். அப்படிப்பட்டவர்கள் உடைகளை தளர்வாக அணிவது நல்லது.
முதலில் சருமத்தில் அரிப்பு எதனால் ஏற்படுகிறது என்பதைக் கண்டறிந்து, அதைத் தவிர்ப்பது நல்லது.
எளிதில் கிடைக்கக்கூடிய அருகம்புல், கீழாநெல்லி, வெற்றிலை, அம்மான் பச்சரிசி ஆகியவற்றால் நம் உடல் அரிப்பை போக்கிக்கொள்ள முடியும்.
1. அருகம்புல் சிறிது, நான்கு மிளகு, வெற்றிலை இரண்டு ஆகியவற்றை மிக்ஸியில் ஒன்றிரண்டாக அரைத்து தண்ணீர் விட்டு கொதிக்க விடவும். அந்த நீரை வடிகட்டி குடிக்க, எளிதில் உடல் அரிப்பு பிரச்னை தீரும்.
2. இரண்டு வெற்றிலையுடன் ஐந்து மிளகு சேர்த்து வாயில் போட்டு மென்று அதன் சாறை விழுங்க, உடல் அரிப்பு, பூச்சி கடிக்கு சிறந்த மருந்தாக அமையும்.
3. கீழாநெல்லி இலைகளை ஒரு கைப்பிடி அளவு எடுத்து அரை ஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து அரைத்து உடம்பில் தேய்த்து குளிக்க அரிப்பு, சருமத் தடிப்பு சரியாகும்.
4. கற்பூரவல்லி இலைகள் ஐந்து அல்லது ஆறு எடுத்து கையால் நன்கு கசக்கி அரிப்பு எடுக்கும் இடத்தில் தடவி வர, அரிப்பு, நமைச்சல் சரியாகும்.
5. திருநீற்றுப்பச்சிலையை சிறிது எடுத்து அரைத்து அந்தச் சாறுடன் தேங்காய் எண்ணெய் சேர்த்து குழைத்து அரிப்பு இருக்கும் இடங்களில் தடவ, நல்ல பலன் கிடைக்கும். இவையெல்லாம் நம்மைச் சுற்றி காணப்படும் சிறந்த மூலிகைகள். இவற்றைப் பயன்படுத்தி செலவில்லாமல் வைத்தியம் செய்து கொள்ளலாம். அப்படியும் தீராத அரிப்பு ஏற்படும் பட்சத்தில் அருகில் உள்ள சரும மருத்துவரை கலந்து ஆலோசிக்கலாம்.
சரும அரிப்பை குறைக்க நிறைய லோஷன்கள் உள்ளன. மாத்திரைகளும் உள்ளன. தகுந்த மருத்துவரைக் கலந்து ஆலோசித்து அவர் சொல்லும் கால அளவு வரை மருந்துகளை எடுத்துக்கொள்ள வேண்டியது அவசியம். இவையெல்லாம் நீண்ட நாட்களாக இருக்கும் பிரச்னைகளுக்கான வழிகள்.