குளிர்காலத்தில் கடுகு எண்ணெய் ஏன் உபயோகிக்க வேண்டும் தெரியுமா?
‘கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது’ என்பார்கள். கடுகுக்கு எப்போதுமே மவுசு அதிகம். அதில் கால்சியம், தாமிரம், இரும்பு, செலினியம், துத்தநாகம், வைட்டமின்கள் என ஏகப்பட்ட சத்துக்கள் உள்ளன. கடுகு எண்ணெய் வெப்பத்தன்மை கொண்டது. இதனை குளிர்காலத்தில் உபயோகிக்க சளி, இருமல் தொந்தரவு, குளிரால் உண்டாகும் மூட்டு வலி, உடல் வலி ஆகியவையும் ஏற்படாது. உலர்ந்த சருமத்திற்கு தூங்குவதற்கு முன் தொப்புளில் இரண்டு துளி கடுகு எண்ணெயை விட்டு தொப்புளைச் சுற்றி மசாஜ் செய்ய சிறந்த பலனைக் கொடுக்கும்.
1. இந்தியா, பங்களாதேஷ் மற்றும் பாகிஸ்தான் போன்ற பல பகுதிகளில் சமையலுக்கு கடுகெண்ணெய் பயன்படுத்தப்படுகிறது. அமெரிக்கா, கனடா போன்ற நாடுகளில் இது மசாஜ் செய்யவும், சருமம் மற்றும் முடி சிகிச்சைக்காகவும் பயன்படுத்தப்படுகிறது.
2. சில வகையான பூஞ்சை மற்றும் பாக்டீரியாக்களின் வளர்ச்சியை கடுகு எண்ணெய் குறைக்க உதவுகிறது.
3. மேற்கு வங்காளம், பங்களாதேஷ் பகுதிகளில் பிறந்த குழந்தைகளுக்கு இந்த எண்ணெயை மசாஜ் செய்ய பயன்படுத்துகிறார்கள்.
4. கடுகு எண்ணெயில் ஆல்ஃபா லினோ லெனிக் அமிலம் (ALA), ஒமேகா 3 மற்றும் ஒமேகா 6 உள்ளது. இதனை சுட வைத்து முட்டிகளில் தடவ, மூட்டு வலி, வீக்கம் குறையும்.
5. சில வகையான புற்றுநோய் செல்களின் வளர்ச்சி மற்றும் பரவலைக் குறைக்க கடுகு எண்ணெய் உதவுகிறது.
6. இதய ஆரோக்கியத்திற்கு கடுகு எண்ணெய் மிகவும் நல்லது.
7. சுத்தமான கடுகு எண்ணெய் இருமல், சளிக்கு சிறந்தது. கொதிக்கும் நீரில் சில துளிகள் கடுகு எண்ணெய் விட்டு நீராவியை உள்ளுக்கு இழுக்க அதாவது ஆவி பிடிக்க இருமல், சளியை குறைக்கிறது.
8. சிறிது கற்பூரம் கலந்து மார்பில் தடவி மெதுவாக மசாஜ் செய்ய வெப்பத்தன்மை கொண்ட கடுகு எண்ணெயால் சளி வெளிவர ஆரம்பிக்கும்.
9. கடுகு எண்ணெய் பயன்படுத்துவதால் உடலில் இரத்த ஓட்டம் அதிகரிக்கும். தலைமுடி நன்கு வளரும். சிறிது சூடு செய்து உடம்பில் தடவி மசாஜ் செய்ய உடலில் உள்ள தேவையில்லாத டாக்ஸின்ஸ் வியர்வையில் வெளியேறிவிடும்.
10. உடலில் எங்கு வலி இருந்தாலும் இந்த எண்ணெயை பயன்படுத்தலாம். கடுகு எண்ணெயில் HDL என்ற நல்ல கொழுப்பு அதிகமாக உள்ளது. இது தலைவலி, தலையில் நீர் கோர்த்துக் கொள்ளுதல் போன்ற பிரச்னைகளை சரி செய்யும். கைகளில் அரிப்பு, தேமல் போன்ற பிரச்னைகளுக்கு இதனை சிறிதளவு சூடு செய்து தடவி வர, குணமாகும்.
11. வறண்ட சருமம் உள்ளவர்கள் முகத்திற்கு ஃபேஸ் பேக் போடும்போது இதனை இரண்டு சொட்டு எடுத்து ஃபேஸ்பேக்கில் கலந்து போட, முகம் நன்கு பளபளப்பாக மின்னும்.
12. பற்களின் ஈறு பிரச்னைக்கு ஒரு ஸ்பூன் பொடி உப்பு, கடுகெண்ணெய் அரை ஸ்பூன் கலந்து பல் தேய்த்த பிறகு பற்களில் தடவி வர ஈறுகளில் இருந்து இரத்தம் வடிதல் போன்ற ஈறு பிரச்னைகள் சரியாகும்.
13. ஆயுர்வேதத்தில் கடுகு எண்ணெய் கபம் மற்றும் வாதத்தை குறைக்க பயன்படுகிறது. இது ஒரு இயற்கை வலி நிவாரணி.
14. தேங்காய் எண்ணெயுடன் கடுகு எண்ணெயைக் கலந்து உச்சந்தலையில் மசாஜ் செய்ய, பொடுகு தொல்லை போகும். முடி உதிர்வை தடுக்கும்.
15. குதிகால் வெடிப்பு, நகங்களுக்கு இதனை சூடு செய்து தடவி மசாஜ் செய்ய சிறந்த பலனைத் தரும். கடுகெண்ணெயில் வைட்டமின் பி அதிகம் உள்ளது. இது சருமத்தை பொலிவாகவும், ஆரோக்கியமானதாகவும் பராமரிக்க உதவும்.
16. கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்கும். இரத்தத்தில் கொழுப்பின் அளவை கட்டுக்குள் வைக்கும். சைனஸ் மற்றும் பாக்டீரியா தொற்றுக்களை சரி செய்யும். தினம் இரண்டு சொட்டு எண்ணை எடுத்து கண்களுக்கு கீழே மசாஜ் செய்ய, தொங்கிக் கொண்டிருக்கும் தேவையற்ற சதையை நீக்க உதவும். இரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைக்கும்.