காக்கை கால் சுருக்கம் என்பது கண்களைச் சுற்றிலும் உள்ள பகுதிகளில் சிரிக்கும்போது தோன்றுவது. கண்களைச் சுற்றிலும் உள்ள சருமப் பகுதி மிகவும் மெலிதானது. அது சுருங்கும்போது பார்ப்பதற்கு காக்கையின் கால்கள் (Crow’s feet) போன்று இருக்கும். வயது முதிர்வு காரணமாக கண்களைச் சுற்றியுள்ள திசுக்களில் உள்ள கொலாஜன் மற்றும் எலாஸ்டிசிட்டி குறைந்து சுருக்கங்கள் தோன்றுகின்றன. வெளியில் சூரிய ஒளியில் செல்லும்போது, புற ஊதாக் கதிர்களும் இந்த சுருக்கங்களுக்கு ஒரு காரணம்.
அதிலும் மாநிறமாகவோ அல்லது கருப்பாகவோ இருப்பவர்களுக்கு இந்த சுருக்கங்கள் அவ்வளவாக பாதிப்பை ஏற்படுத்துவதில்லை. மிகுந்த சிவப்பு நிறம், வெள்ளை நிறம் கொண்ட மேலை நாட்டவர்களுக்கு, இருபது முப்பது வயதுகளிலேயே இந்த சுருக்கங்கள் தோன்றும். ஏனென்றால், அவர்களுடைய வெள்ளை சருமத்துக்கு, சூரியனுடைய வெப்பத்தையோ, புற ஊதா கதிர்களையோ தாங்கும் சக்தி இல்லை.
அடிக்கடி முகம் கழுவுவதும் சுருக்கத்திற்கு காரணம். குழாய் தண்ணீரை வைத்து கழுவும்போது முகத்தில் உள்ள இயற்கையான எண்ணையையும் ஈரத்தையும் உறிஞ்சி சுருக்கங்கள் வரச் செய்கிறது. மாதவிலக்கு நிற்றல் காலத்தில் ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் சுரப்பு குறைந்து பெண்களுக்கு காக்கைக் கால் சுருக்கங்கள் தோன்றுகின்றன.
அடிக்கடி கண்களைச் சுற்றிலும் உள்ள பகுதியைத் தேய்ப்பது, கண்களை கசக்குவது, புகைப்பழக்கம், ஒரு சாய்த்து ஒரே பக்கமாக படுத்து தூங்குவதும் காக்கை கால் சுருக்கத்தை ஏற்படுத்தும்.
காக்கைக் கால் சுருக்கத்திற்கான தீர்வுகள்:
நடுத்தர வயதில் கண்களில் ஏதாவது பார்வை குறைபாடு இருந்தால் உடனே கண் மருத்துவரை சந்தித்து ரீடிங் கிளாசஸ் போட்டுக் கொள்ளலாம். கண்களை சுருக்கிக்கொண்டு கம்ப்யூட்டர் திரையை பார்ப்பதும் கூட இதற்கு காரணமாகலாம். வெளியில் செல்லும்போது சன் ஸ்கிரீன் லோஷன் போட்டுக் கொள்ளலாம். அகலமான தொப்பி மற்றும் சன் கிளாசஸ் அணிந்து கொள்ளலாம்.
தினமும் நான்கு ஐந்து பச்சை கேரட்டைகளை கழுவி பச்சையாக சாப்பிடலாம். இது முகத்தில் உள்ள கொலாஜனை இளமையாக வைக்கும்.
சிட்ரஸ் அதிகம் உள்ள எலுமிச்சை, ஆரஞ்சு, வாழைப்பழம், திராட்சை அதிகம் உண்ண வேண்டும். ஒமேகா 3 உள்ள மீன்களும் பேட்டி ஆசிட் நிறைந்த சாலமன் வகை மீன்களும், உலர் பழங்கள், விதைகள், அவகோடா பழங்கள் போன்றவை காக்கைச் சுருக்கத்தை கொஞ்சம் தள்ளிப்போடும். வெள்ளை சர்க்கரை சேர்த்த உணவுகளை எடுத்துக் கொள்ளக் கூடாது. இது கொலாஜன் உற்பத்தியை குறைக்கும்.