இந்திய மக்களின் பிரதான உணவாக அரிசி கருதப்படுகிறது. சாதம் சாப்பிடாமல் நம்முடைய அன்றாட நாள் நிறைவு பெறாது. அத்தகைய சாதத்தை எந்த நேரத்தில் சாப்பிட வேண்டும் என்று சில வரைமுறைகள் உள்ளன. காலை, மதிய வேளைகளில் சாதம் சாப்பிடுவதால் எந்தப் பிரச்னையும் இல்லை. இதுவே இரவு நேரத்தில் சாதம் எடுத்துக்கொள்வது ஆரோக்கியத்திற்கு பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும். அதைப்பற்றி இந்தப் பதிவில் காண்போம்.
1. உடல் எடையைக் குறைக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் அரிசி உணவை காலையில் எடுத்துக்கொள்வது நல்ல பலனைத் தரும். இதுவே இரவு கார்போஹைட்ரேட் அதிகமாக எடுத்துக்கொள்வது நல்லதல்ல என்று சொல்லப்படுகிறது.
2. இரவில் அரிசி உணவை சாப்பிடும்போது வயிறு உப்புசம், செரிமானப் பிரச்னைகள் ஏற்படும். இரவில் உணவு செரிப்பதற்கான செயல்முறை உடலில் மெதுவாகவே நடைபெறும். எனவே, செரிப்பதற்கு அதிக நேரம் எடுத்துக்கொள்ளும்போது தூக்கப்பிரச்னை, அஜீரணக் கோளாறு உண்டாகும்.
2. இரவில் அதிகமாக உடலுக்கு சக்தி தேவைப்படாது. அந்த நேரத்தில் அதிகமாக அரிசி உணவு சாப்பிடும்போது அது கொழுப்பாக மாறி உடலில் சேமிக்கப்படுகிறது. இதனால், இரவில் அரிசி உணவு சாப்பிடுவது உடல் எடையை அதிகரிக்கும்.
3. இரவு நேரத்தில் அதிக அளவில் சாதம் எடுத்துக்கொள்வது இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை அதிகரிக்கிறது. இதனால் தூக்கமின்மை, வளர்சிதை மாற்றக் கோளாறு போன்ற பிரச்னைகள் வரக்கூடும். எனவே, இரவில் குறைந்த கிளைகெமிக் உணவுகளை எடுத்துக்கொள்வது சர்க்கரை அளவை கட்டுப்பாட்டுக்குள் வைத்து நல்ல உறக்கத்திற்கு வழிவகுக்கும்.
4. அதிக சளி, இருமல் பிரச்னை இருப்பவர்கள் இரவில் சாதம் சாப்பிடக்கூடாது. சர்க்கரை நோயாளிகள் மற்றும் 50 வயதிற்கு மேல் உள்ளவர்கள் இரவில் சாதத்தை தவிர்ப்பது நல்லது. இரவில் அரிசி சாதத்தை விட அதிக நார்ச்சத்து உள்ள உணவுகளை எடுத்துக்கொள்வது சிறந்தது. அரிசி சாதத்தை சாப்பிடுவதை நிறுத்த முடியவில்லை என்றால், பழுப்பு அரிசியை எடுத்துக் கொள்ளலாம். ஆயுர்வேத மருத்துவம் இரவில் அரிசி, தயிர், அசைவ உணவுகள் ஆகியவற்றை தவிர்க்க வேண்டும் என்று வழியுறுத்துகிறது. எனவே, சாதத்தை எடுத்துக்கொள்வதற்கான சரியான நேரம் மதியமேயாகும்.