‘சாப்பாட்டுக்கு இடையிலும், உணவு சாப்பிட்ட உடனேயேயும் தண்ணீரைக் குடிக்கக்கூடாது’ என மருத்துவர்கள் சொல்கின்றனர். இது ஏன் தெரியுமா?
நாம் அன்றாடம் உண்ணும் உணவிற்கு முக்கியம் கொடுத்து, ருசியான உணவுகளைத் தேடிப்பிடித்து, பல வகையானவற்றை சமைத்து, உண்டு மகிழ்கிறோம். இந்த உணவுகள் வயிற்றை அடைந்து சரியான நேரத்தில் செரிமானம் சீராக நடந்தால்தான் அவை உடலுக்குத் தேவையான சக்தியாக மாற்றம் பெறும். நம் உடலானது உணவைச் செரிக்க எடுத்துக்கொள்ளும் நேரம் வயிற்றில் உணவுடன் நாம் அருந்தும் நீரின் அளவைப் பொறுத்தது ஆகும்.
அன்றாடச் சமையலுக்காக அடுப்பங்கரையில் நாம் பயன்படுத்தும் மிக்சியை உற்றுக் கவனியுங்கள். திடப் பொருட்களை பாதி அளவுச் சேர்த்துவிட்டு, மிக்சி ஜார் முழுவதும் தண்ணீர் ஊற்றி அடித்துப் பாருங்கள். என்ன நடக்கிறது?
நீங்கள் மிக்சியை எவ்வளவு நேரம் ஓடவிட்டாலும் சில காய்கள், பருப்புகள், தேங்காய் துண்டுகள் போன்றவை அப்படியே முழுமையாக இருக்கும். தண்ணீரின் அளவு மிகுதியாக இருப்பதால் அரைக்க வேண்டிய திடப்பொருட்கள் சரியாக அரைபடாது.
மாறாக முதலில் தண்ணீர் ஊற்றாமல் திடப்பொருளை அரைத்த பிறகு, தண்ணீரை கொஞ்சம் கொஞ்சமாய் சேர்த்து அரைக்கும்போது அவை நன்கு எளிதாக அரைபட்டுவிடும்.
நம் வயிற்றில் செரிமானம் நடைபெறுவதும் கிட்டத்தட்ட இதே வழிமுறையில்தான்! நம் வயிற்றில் திட உணவுப் பொருட்களை உட்கிரகித்து அதை ஜீரணமாக்க தகுந்த கால அவகாசம் இரைப்பைக்கு தேவை. அதுவரை உள்ளே தண்ணீர் அதிகம் போகாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
சாப்பிட்ட உடனேயே வயிறு முட்ட தண்ணீர் குடித்தால் முழுமையான செரிமானம் நடைபெறாது. குழப்பமான செரிமானத்தால் பாதியளவு மட்டுமே ஜீரணமாகி சத்துகளாக சேரும். மீதி ஜீரணம் ஆகாமல் கொழுப்பாக சேரும். இதனால் உடல் பருமன், கொழுப்பு மிகுதல் போன்ற பிரச்னைகள் உண்டாகும்.
எனவே, உணவு சாப்பிடும்போது விக்கல் ஏற்பட்டாலொழிய தேவையில்லாமல் தண்ணீர் குடிப்பதைத் தவிர்ப்பது நல்லது.
சமையலில் காரத்தை குறைத்தால் தண்ணீர் குடிக்க வேண்டிய அவசியமே ஏற்படாது. மேலும், செரிமானம் என்பது நமது வாயிலிலேயே தொடங்குகிறது என்பதால், உணவை வாயிலிட்டு பலமுறை நன்றாக மென்று உமிழ்நீரோடு கலந்து சாப்பிடுவதை வழக்கமாக்கிக் கொள்ள வேண்டும்.
உணவு சாப்பிட்டு 30 நிமிடங்கள் கழித்து தானாகவே தாகம் எடுக்கும்போது தண்ணீர் குடிக்க வேண்டும் என்பதே உடல் நலம் காக்கும் எளிய வழிமுறை என மருத்துவர்கள் வலியுறுத்துகின்றனர்.