மைக்ரேன் எனப்படும் ஒற்றைத் தலைவலி உள்ளவர்களுக்கு நெற்றியின் இருபுறமும் கடுமையான வலியும், கண்கள் இரண்டும் மிகவும் கனப்பது போலவும், வாந்தி வருவது போன்ற உணர்வும் இருக்கும். அந்த நேரத்தில் அவர்கள் உண்ணும் சில உணவுகள் தலைவலியை அதிகரிக்கவே செய்யும். அவர்கள் தவிர்க்கவேண்டிய உணவுப் பொருட்கள் என்ன? ஏன் அவற்றைத் தவிர்க்க வேண்டும் என்பது பற்றி இந்தப் பதிவில் பார்க்கலாம்.
பழைய பாலாடைக் கட்டிகள்: ஒற்றைத் தலைவலி பிரச்னை உள்ளவர்கள் ப்ளூ பாலாடை கட்டி என்கிற சீஸைத் தவிர்க்க வேண்டும். ஏனென்றால், இதில் அதிக அளவு கொழுப்புச்சத்து இருக்கிறது. இதை மைக்ரேன் உள்ளவர்கள் உண்டால் இன்னும் தலைவலி அதிகரிக்கும். மேலும், கடையில் வாங்கி நாளான பழைய சீஸையும் தவிர்க்க வேண்டும்.
பதப்படுத்தப்பட்ட இறைச்சிகள்: பதப்படுத்தப்பட்ட பன்றி இறைச்சி மற்றும் ஆட்டு இறைச்சி போன்றவற்றில் நைட்ரேட்டுகள் அதிகமாக உள்ளது. இவை ஒற்றைத் தலைவலியை அதிகமாக்கவே செய்யும். எனவே, இவற்றைத் தவிர்க்க வேண்டும்.
மது: சிவப்பு ஒயின், பீர் மற்றும் பிற மதுபானங்கள் தலைவலியை அதிகரிக்கும். இவற்றில் கலந்திருக்கும் சல்பைட்டுகள் மற்றும் ஹிஸ்டமின்கள் உடலுக்கு கெடுதலை ஏற்படுத்தும். தலைவலியை அதிகரிக்கும்.
காஃபின் கலந்த பானங்கள், பாட்டில் பானங்கள்: ஒற்றைத் தலைவலி இருக்கும்போது காபியை தவிர்ப்பது நல்லது. காபி, டீ போன்ற பானங்களில் உள்ள காஃபின் தலைவலியை அதிகரிக்கவே செய்யும். அதுபோல பாட்டிலில் அடைத்து விற்கப்படும் ஜூஸ் வகைகள், பானங்கள் தலைவலியைத் தூண்டும்.
சாக்லேட்: சாக்லேட்டுகளும் ஒற்றைத் தலைவலியை அதிகரிக்கும். எனவே, இவற்றை தவிர்க்க வேண்டும்.
ஊறுகாய் மற்றும் புளித்த உணவுகள்: இவற்றில் உள்ள டைரமைன் என்ற வேதிப்பொருள் தலைவலியை அதிகரிக்கும். எனவே, புளித்த தயிர், மாங்காய், எலுமிச்சை ஊறுகாய்கள், எலுமிச்சை சாதம், புளிப்பான ரசம், அதிக புளிப்பு சேர்த்த குழம்பு வகைகள் போன்றவற்றை தவிர்ப்பது நல்லது.
செயற்கை இனிப்புகள்: செயற்கை சர்க்கரைகள் மற்றும் செயற்கை இனிப்புகள் தலைவலியைத் தூண்டும். எனவே, இவற்றைத் தவிர்க்க வேண்டும்.
துரித உணவுகள்: பதப்படுத்தப்பட்ட உணவுகளில் மோனோ சோடியம் குளோபின் என்கிற ரசாயனம், சுவையை அதிகரிப்பதற்காக சேர்க்கப்படுகிறது. மேகி, கேசரிப் பவுடர், கடைகளில் விற்கப்படும் ரெடிமேட் மசாலா பொருட்கள் போன்ற உணவு வகைகளைத் தவிர்க்க வேண்டும். இன்ஸ்டன்ட் உணவுகளையும் தவிர்க்க வேண்டும். சிப்ஸ் மற்றும் பதப்படுத்தப்பட்டு பாக்கெட்டில் அடைக்கப்பட்ட ஸ்நாக்ஸ் வகைகளையும் சாப்பிடக் கூடாது.
முட்டை, தயிர், பால், கிரீம் வகைகள்: பால், தயிர் இவை அனைத்தும் தலைவலியைத் தூண்டும். எனவே, இவற்றையும் தவிர்க்கலாம். வேக வைத்த முட்டையும் தலைவலியை அதிகப்படுத்தும்.
சிட்ரஸ் பழங்கள்: ஆரஞ்சு, திராட்சை போன்ற பழங்கள் தலைவலி அறிகுறிகளை இன்னும் மோசமாக்குகின்றன.
கொட்டைகள் மற்றும் விதைகள்: சிலருக்கு பாதாம், முந்திரி, ஆளி விதைகள், சோயா விதைகள் போன்றவற்றை உட்கொண்டாலும் தலைவலி அதிகரிக்கும். வேர்க்கடலையும் தலைவலியை அதிகரிக்கும். சுண்டல் பருப்பு வகைகள் கூட ஒற்றைத் தலைவலியை அதிகரிக்கவே செய்யும்.
உட்கொள்ள வேண்டியது: அதிக அளவு தண்ணீர் குடித்து உடலை நீரேற்றத்துடன் வைத்துக்கொள்வது அவசியம். சரியான நேரத்தில் சாப்பிடாமல் விடும்போது அது இரத்த சர்க்கரை குறைவதற்கு வழிவகுத்து தலைவலியைத் தூண்டும். ஒற்றைத் தலைவலி பாடாய்ப்படுத்தும்போது கஞ்சி போன்ற எளிய உணவுகளை எடுத்துக் கொள்வது நல்லது. இஞ்சி டீ போட்டு, தேன் கலந்து அருந்தலாம்.