நம் ஆரோக்கியம் காக்க சில அன்றாட கடமைகளை அவசியம் நாம் செய்தாக வேண்டும். அதில் காலைக்கடன் தொடங்கி இரவு தூக்கம் வரை பல விஷயங்களை நாம் செய்கிறோம். அவற்றை எந்த நேரத்தில், எவ்வளவு நேரம் செய்ய வேண்டும் என்பதை பற்றி வல்லுனர்கள் கூறும் தகவல்களின் தொகுப்பு இங்கே..!
பொதுவாக ஒரு நாளைக்கு ஒருமுறை மலம் கழிப்பது நல்ல குடல் ஆரோக்கியத்தின் அறிகுறியாகப் பார்க்கப்படுகிறது. கலிபோர்னியா இரைப்பை மற்றும் குடலியல் நிபுணர் லான்ஸ் உராடோமோ கூறுகையில், கழிவறைக்குச் செல்லும்போதே அங்கு அதிக நேரம் செலவிட வேண்டும் என்ற எண்ணத்துடன் செல்வதைத் தவிர்க்க வேண்டும்.
செல்போன், புத்தகம், நாளிதழ், இதழ்கள் என எந்தவொரு பொருளையும் கழிவறைக்குள் எடுத்துச் செல்லாதீர்கள் என்கிறார். மலம் கழிக்க 8-10 நிமிடங்கள் வரை நேரம் செலவழிக்கலாம். மேலும் 10 நிமிடங்களுக்கு மேல் அங்கு நேரம் செலவழிக்க கூடாது என்கிறார்.
10 நிமிடங்களுக்கு மேல் கழிப்பறை இருக்கையில் அமர்ந்திருப்பது ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும். நீண்ட நேரம் கழிப்பறை இருக்கையில் அமர்ந்திருப்பது தொற்று அபாயத்தை அதிகரிக்கும். அதே வேளையில், நீண்ட நேரம் ஒரே நிலையில் அமர்ந்திருப்பது பல உடல் பிரச்சனைகளுக்கும் வழிவகுக்கும்.
காலையில் எழுந்ததும் அனைவரும் பல் துலக்குகிறோம். இரவில் உறங்க செல்வதற்கு முன், எத்தனை பேர் இதை செய்கிறோம்? 100 பேரில் இருவர் கூட செய்வதில்லை. ஆனால் தினமும் இரண்டு முறை பல் துலக்கினால் தான் ஆரோக்கியம் மேம்படும். காலையில் எழுந்ததும் பேஸ்ட் இல்லாமல் வெறும் பிரஸ்யைக் கொண்டு அல்லது விரலை வைத்து முதலில் பல் துலக்குங்கள். இதனால் 65 சதவீதம் பிளேக்கும், 55 சதவீதம் வாய் கிருமிகளும் வெளியேறுவதாக அமெரிக்க டென்டல் அசோசியேசன் ஆய்வில் கண்டறிந்துள்ளனர். பின்னர் வழக்கமான புளோரைடு கலந்த பேஸ்ட் கொண்டு பல் துலக்குங்கள்; இரண்டு நிமிடங்கள் பல் துலக்கினாலே போதுமானது என்கிறார்கள்.
காலையில் எழுந்ததில் இருந்து ஒரு மணி நேரத்துக்குள் குளிப்பது மட்டுமே சருமத்தின் இறந்த செல்களை நீக்குவதற்கான முறையான வழி. அழகு, ஆரோக்கியம் இரண்டையும் காலை நேர குளியல் தரும். காலையில் ஷவரில் குளிப்பவர்கள் அதிக செயல்திறன் மற்றும் அதிக உருவாக்கும் ஆற்றலுடன் செயல்படுகிறார்கள் என்பதை ஹார்வர்டு பல்கலைக்கழக ஆய்வில் கண்டறிந்துள்ளனர்.
நோய் எதிர்ப்பில் பெரும் பங்காற்றுவது பித்தம். பித்தத்தை குறைப்பதற்காகவே காலை நேரத்தில் தலைக்கு குளிக்க வேண்டும். குளிப்பதற்கு இரண்டு மணி நேரத்திற்கு முன்பு சாப்பிடுவது அல்லது குளித்து முடித்து ஒரு மணி நேரம் கழித்து சாப்பிடுவது சிறந்த வழி. குளிப்பதற்கு அதிக பட்சமாக 10 நிமிடங்கள் எடுத்துக் கொள்ளலாம். அதற்கு மேல் என்றால், அது சருமத்தின் இயல்பு நிலையில் பாதிப்பை ஏற்படுத்தும் என்கிறார்கள் ஆய்வாளர்கள்.
காலை உணவு என்பது மிக முக்கியம். சத்தான காலை உணவு, நாள் முழுவதும் ஆற்றலுக்கு இன்றியமையாதது. அதுமட்டுமின்றி உடல் செயல்பாடுகளை சீராக்கவும் உதவுகிறது. உங்கள் கடைசி உணவுக்கும் அடுத்த நாள் முதல் உணவுக்கும் இடையில் எவ்வளவு நேரம் உள்ளதோ அவ்வளவு அதிகமாக உங்கள் வளர்சிதை மாற்ற நெகிழ்வுத்தன்மை, மைட்டோகாண்ட்ரியல் செயல்பாடு மற்றும் உங்கள் ஆயுட்காலம் நீட்டிக்கப்படும் என மருத்துவர்கள் கூறுகின்றனர். காலை 6-10 க்குள் காலை உணவை சாப்பிட வேண்டும் என்கிறார்கள்.
காலை உணவோ, மதிய உணவோ, இரவு உணவோ எதுவானாலும் அது செரிமானமாக, குறைந்தது மூன்று மணி நேரமாவது ஆகும். எனவே, அதன் பிறகு, அடுத்த வேளை உணவைச் சாப்பிடுவதுதான் சரியானது. காலை உணவை சாப்பிட 7-8 சிறந்த நேரம், மதிய உணவை சாப்பிட 12-2 சிறந்த நேரம், இரவு உணவு சாப்பிட 6-8 சிறந்த நேரம் என்கிறார்கள்.
எந்த உணவாக இருந்தாலும் சரி அவற்றை நிதானமாக ரசித்து மென்று சாப்பிட வேண்டும். உணவு உண்ண 10 முதல் 15 நிமிடங்கள் எடுத்துக் கொண்டால் நல்லது என்கிறார்கள். முடிந்தவரை குடும்பத்துடன் இரவு உணவை சாப்பிடும் வழக்கத்தை கொண்டிருக்க வேண்டும் என்றும் கூறப்படுகிறது
உடல் மற்றும் மன ஆரோக்கியத்துக்கு நல்ல தூக்கம் மற்றும் ஓய்வு நேரம் அவசியம். சரியான தூக்கம் 8 மணி நேரம் என்பதை பலதரப்பட்ட ஆராய்ச்சியாளர்கள் ஒப்புக் கொள்கின்றனர். அமெரிக்காவில் எடுக்கப்பட்ட சர்வேயில் , 8 மணி நேரத்திற்கு மேல் தூங்கியவர்களின் வாழ்நாள் குறைந்துள்ளது. அது போல, 7 மணி நேரத்திற்கு குறைவாக தூங்க்கியவர்களின் வாழ்நாளும் குறைந்துள்ளது தெரிய வந்துள்ளது. இவர்களின் ஆராய்ச்சி முடிவுகள் 8 மணி நேரம் தூக்கம் அவசியம். சற்று நேரம் கூடுதலாக தூங்கினாலும் பரவாயில்லை. ஆனால் எக்காரணம் கொண்டும் 7 மணி நேரத்திற்கு குறைவாக தூங்குவது தவறு என்பது தான்.