தினமும் காலையில் அதிகமாக Mouth wash பயன்படுத்துபவர்களுக்கு இரத்தக் கொதிப்பு வரும் வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக சமீபத்திய ஆய்வு கூறுகிறது. இதைப் பற்றி இந்தப் பதிவில் காண்போம்.
காலையில் எழுந்து பிரஷ் செய்த பிறகு Mouth wash பயன்படுத்தும் பழக்கம் நிறைய பேருக்கு உண்டு. பெரும்பாலும் நாம் சூப்பர் மார்க்கெட்டில் வாங்கும் மவுத் வாஷில் 99.9 சதவீதம் கிருமிகளை கொல்லும் என்று எழுதியிருப்பதைப் பார்த்திருப்போம்.
நம்முடைய வாயில் நல்ல பாக்டீரியா மற்றும் கெட்ட பாக்டீரியா இரண்டுமே உள்ளன. இவை இரண்டுமே சமநிலையில் இருக்க வேண்டியது அவசியமாகும். நம் வாயில் இருக்கும் நல்ல பாக்டீரியா நைட்ரிக் ஆக்ஸைடை உற்பத்தி செய்யும். இந்த நைட்ரிக் ஆக்ஸைட் நம் உடலில் நன்றாக இரத்தம் ஓட்டம் இருக்க உதவுகிறது.
அடிக்கடி மவுத் வாஷ் பயன்படுத்துவதால் நம் வாயில் உள்ள நல்ல பாக்டீரியாவும் சேர்த்து அழிந்துப்போவதால், நைட்ரிக் ஆக்ஸைட் உற்பத்தி ஆகாது. எனவே, நம் உடலில் இரத்த ஓட்டம் சீராக இருக்காது. இதனால் அதிகமான இரத்த அழுத்தம் ஏற்படும் என்று சொல்லப்படுகிறது. அதுமட்டுமில்லாமல், சிலருக்கு மவுத் வாஷ் பயன்படுத்துவதால், அதில் உள்ள ஆல்கஹால் காரணமாக வாயில் எரிச்சல் ஏற்படுகிறது. சில மவுத் வாஷில் உள்ள Dye பல்லில் கறையை ஏற்படுத்தும் பிரச்னையும் உள்ளது.
மவுத் வாஷ் பயன்படுத்தக் கூடாது என்று சொல்லவில்லை. அதை தினமும் பயன்படுத்துவதைத் தவிர்த்து விடுங்கள். மவுத் வாஷை மருந்து போல பாவிப்பது நல்லது. உங்களுடைய Dentist பரிந்துரைக்கும்போது அவர் சொல்லும் கால அளவு வரை மட்டும் பயன்படுத்தினால் போதுமானதாகும். மருத்துவர் எந்த பிரச்னைக்காகப் பயன்படுத்தச் சொன்னாரோ அதற்கு மட்டும் பயன்படுத்திவிட்டு நிறுத்திவிடுவது சிறந்தது.
மார்க்கெட்டில் சுலபமாகக் கிடைக்கிறது, விதவிதமான பிளேவர்கள் இருக்கிறது, ஆப்பர் நிறைய இருக்கிறது போன்ற காரணங்களுக்காகப் பயன்படுத்துவதைத் தவிர்த்து விடுங்கள். மவுத் வாஷ் வாயில் உள்ள தூர்நாற்றத்தை மறைக்க உதவுகிறதே தவிர, துர்நாற்றத்திற்கான காரணத்தைப் போக்குவதில்லை. எனவே, வாயில் துர்நாற்றம் இருப்பவர்கள் அதை மவுத் வாஷ் வைத்து மறைப்பதை விட்டுவிட்டு நல்ல பல் மருத்துவரை பார்ப்பது சிறந்தது.