
நம் உடலில் எவ்வித நோயுமின்றி வாழ்வதே, நலமான வாழ்வின் முதற்படியாகும். ஆனால் நாம் தினமும் செய்யும் சில தவறான பழக்கங்கள்தான் நம்மை பெரிய உடல்நல பிரச்சனைகளுக்கு அழைத்துச் செல்கின்றன. குறிப்பாக, சிறுநீரகங்களை பாதிக்கக்கூடிய சில சாதாரண பழக்கங்கள் குறித்து நாம் கவனமாக இருக்க வேண்டிய அவசியம் உள்ளது.
பொதுவாக, எந்த ஒரு நோயும் வந்த பிறகு அதற்கு சிகிச்சை பெறுவதை விட, அவை வருமுன் காப்பதே சிறந்தது. எனவே, உடலுக்கு தீங்கு விளைவிக்கும் செயல்களை தவிர்த்து, உடல் ஆரோக்கியத்தை நாம் காக்க வேண்டியது மிகவும் அவசியமாகும். சில உணவுப் பழக்கவழக்கங்கள் உடல் உறுப்புகளை பாதிக்கக்கூடியதாக உள்ளன. அந்த வகையில், நம் உடலின் முக்கிய உறுப்பான சிறுநீரகத்துக்கு பாதிப்பு ஏற்படுத்தும் செயல்களை நாம் தவிர்ப்பது நல்லது.
* மருத்துவ ஆலோசனையின்றி அதிக அளவு வலி நிவாரண மருந்துகளை உட்கொள்வது, சிறுநீரகத்தின் ஆரோக்கியத்திற்கு பெரும் ஆபத்தாக அமையும் என்று மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கிறார்கள்.
வலி நிவாரணிகளின் நீண்ட கால அல்லது அதிகப்படியான பயன்பாடு, நாள்பட்ட இடைநிலை நெஃப்ரிடிஸுக்கு (சிறுநீரக அழற்சி) வழிவகுக்கும். இது சிறுநீரக செயலிழப்பை ஏற்படுத்தக்கூடிய அபாயம் கொண்ட நோயாகும்.
* தூள் உப்புகளை விட கல் உப்பு அல்லது 'ஹிமாலயன் பிங்க் சால்ட்' நமது உடல்நலனுக்கு நல்லது என நம்மில் சிலர் நம்புகிறோம். ஆனால், உண்மையில் அனைத்து வகை உப்புகளும் வேதியல் பொருளான சோடியம் குளோரைடினை கொண்டவைதான். அதிக அளவு சோடியம் உட்கொள்வது இரத்த அழுத்தத்தை அதிகரித்து, சிறுநீரகங்களை பாதிக்கிறது. உடலில் உப்பு அதிகமானால், அதை சமன்செய்ய சிறுநீரகம் கடுமையாக உழைக்க வேண்டியிருக்கிறது. இது நாளடைவில் சிறுநீரகத்தின் செயல்பாட்டில் சிக்கல்களை ஏற்படுத்தலாம். எனவே, நமது அன்றாட உணவில் உப்பை தேவையான அளவுக்கு மட்டும் பயன்படுத்த வேண்டும்.
* தேவையான அளவு நீர் குடிப்பது உடலுக்கு நல்லது. ஆனால், அதிக அளவு தண்ணீர் தினமும் குடிப்பதுவும் சிறுநீரகத்திற்கு தீங்கு விளைவிக்கக்கூடும். அதிகமான தண்ணீர் குடிப்பதால், இரத்தத்தில் சோடியத்தின் அளவு குறையும். இது சிறுநீரகத்திற்கு அதிக வேலைப்பளுவை ஏற்படுத்தும். சில சமயங்களில் இது மூளையில் வீக்கம், வலிப்பு, அல்லது மரணத்திற்குக் கூட வழிவகுக்கலாம்.
ஒரு நாளைக்கு 2 முதல் 3 லிட்டர் மட்டுமே தண்ணீர் குடிப்பதே ஆரோக்கியமானது. இது தட்பவெப்ப நிலை மற்றும் நம் உடல் உழைப்பின் அடிப்படையில் மாறுபடும்.எந்த நோயிக்கும் மருத்துவரின் ஆலோசனையுடன் மட்டுமே மருந்துகளை பயன்படுத்த வேண்டும்.
* தூக்கம், உணவு, நடைபயிற்சி ஆகியவற்றுக்கும் முக்கியத்துவம் தர வேண்டும். சிறுநீரகத்தின் ஆரோக்கியமே நமது முழு உடல் நலனுக்கு அடிப்படையானது என்பதை மனதில் கொண்டு வாழ வேண்டும்.
* சிறுநீரகத்தில் ஏற்படும் பொதுவான நோய் சிறுநீரகத் தொற்றாகும். இதன் பொதுவான அறிகுறிகள் சிறுநீர் கழிக்கும் போது வலி அல்லது எரிச்சல் ஏற்படுவது, அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டும் என்ற உணர்வு ஏற்படுவது, அடிவயிற்றில் வலி, துர்நாற்றம் வீசும் சிறுநீர் ஆகியவையாகும். சிறுநீரகத் தொற்றாக இருந்தால், காய்ச்சல், முதுகு வலி அல்லது முதுகின் பக்கவாட்டில் வலி ஆகியவை ஏற்படலாம்.
இந்த அறிகுறிகள் ஏதேனும் நமக்கு இருந்தால், குறிப்பாக காய்ச்சல் அல்லது அதிக முதுகுவலி இருந்தால், உடனடியாக மருத்துவரின் உதவியை நாட வேண்டும். தவறாமல், தாமதிக்காமல் சிகிச்சை பெறுவது சிறுநீரகச் செயல்பாட்டில் மேலும் சிக்கல்கள் ஏற்படுவதை தவிர்க்கும்.
* உயர் இரத்த அழுத்தம், நீரிழவு நோய் உள்ளவர்கள் மூன்று மாதத்திற்கு ஒரு முறை வழக்கமான இரத்த பரிசோதனைகளுடன் இரத்தத்தில் கிரியேட்டினின் அளவு கட்டுப்பாட்டுக்குள் இருப்பதை உறுதி செய்து கொள்வது நல்லது.
* சிறுநீர் பாதை நோய்த்தொற்று (UTI) என்பது நமது சிறுநீர் அமைப்பில் ஏதேனும் ஒரு பகுதியில் ஏற்படும் தொற்று ஆகும். இதற்கு எல்லாம் தொடக்க நிலையிலேயே மருத்துவச் சிகிச்சை எடுத்துக் கொண்டால் நலமுடன் நீண்டநாள் நமது சிறுநீரகத்தில் எந்த பாதிப்பும் ஏற்படாமல் நம்மால் வாழமுடியும்.
எனவே, சிறுநீரகத்தின் செயல்பாட்டின் அருமை உணர்வோம். அற்புதமான வாழ்வை வாழ்வோம்.
(முக்கிய குறிப்பு: இந்தத் தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே. மருத்துவ ஆலோசனைக்கு சரியான தகுந்த மருத்துவரை அணுகவும்)