
பொதுவாக இரவு நேரத்தில் தயிர் சாப்பிடுவது ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல என்றொரு கருத்து உண்டு. ஆனால், அதிகளவு ப்ரோட்டீன் மற்றும் புரோபயோட்டிக் சத்துக்கள் நிறைந்த யோகர்டை இரவில் படுக்கைக்குச் செல்லும் முன் உட்கொள்வதால் பல வகையான ஆரோக்கிய நன்மைகள் நம் உடலுக்குக் கிடைக்கின்றன. அவற்றில் எட்டினைப் பற்றி இப்பதிவில் பார்க்கலாம்.
1. நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்க
இரவில் நோயெதிர்ப்பு மண்டல செல்கள், உடலின் சேதமடைந்த செல்களை ரிப்பேர் செய்யும் பணியில் ஈடுபட்டிருக்கையில், யோகர்ட் அச்செயலை ஊக்குவிக்க உதவி புரியும். மேலும், யோகர்ட்டில் உள்ள புரோபயோட்டிக்ஸ், நோயெதிர்ப்பு செல்கள் நோய்க் கிருமிகளை அடையாளம் காணவும், உடனடியாக அவற்றை எதிர்த்துப் போராடவும் பயிற்சியளிக்கின்றன. இதனால் ஃபுளு, சளி போன்ற நோய்கள் வரும் அபாயம் தடுக்கப்படுகிறது.
2. சேதமடைந்த தசைகளைப் புதுப்பிக்க
பகல் நேரத்தில் ஸ்ட்ரெஸ்ஸுக்கு உள்ளான தசை செல்கள் மற்றும் திசுக்களை, இரவில் உடல் சரி செய்து கொண்டிருக்கும்போது, யோகர்ட்டில் உள்ள கசீன் (casein) என்ற ப்ரோட்டீன் மெதுவாக ஜீரணிக்கப்பட்டு, இரவில் அமினோ ஆசிட்களை தொடர்ந்து வெளியேற்றும். இதனால் தசைகள் வலுவடைந்து காலையில் பழைய நிலைக்கு திரும்பிவிடும்.
3. சிறப்பான செரிமானத்துக்கு உதவும்
யோகர்ட்டில் உள்ள நல்ல பாக்டீரியாக்கள் குடலில் உள்ள மைக்ரோபியோம்களை சமநிலையில் வைக்க உதவும். இரவில் ஜீரண உறுப்புகள் ஓய்விலிருக்கும் போது நல்ல பாக்டீரியாக்கள் வளர்ச்சியடைந்து, நாளடைவில் வயிற்றில் வீக்கம், மலச்சிக்கல் போன்ற அசௌகரியங்களைத் தடுத்து செரிமானம் சிறப்பாக நடைபெற உதவும்.
4. எடை பராமரிப்பிற்கு உதவும்
இரவில் உட்கொள்ளும் யோகர்ட்டில் உள்ள ப்ரோட்டீன் வயிறு நிரம்பிய உணர்வை கொடுத்து, ஆரோக்கியமற்ற ஸ்னாக்ஸ் உண்ணும் பழக்கத்தை தடுத்து நிறுத்த உதவுகிறது. மெட்டபாலிசம் சிறப்பாக நடைபெறவும் ஊக்கமளிக்கிறது. இதனால் எடையை சம நிலையில் வைத்துப் பராமரிக்கவும் யோகர்ட் உதவி புரிகிறது.
5. இதய ஆரோக்கியம் காக்கும்
யோகர்ட்டில் உள்ள பொட்டாசியம் சத்து உடலில் சோடியம் அளவு சம நிலையில் இருக்க உதவி புரிகிறது. இதனால் இரத்த அழுத்தம் சமநிலைப்படுகிறது. மேலும், புரோபயோட்டிக்ஸ் இரத்தக் குழாய்களில் வீக்கம் உண்டாகாமல் பாதுகாக்க உதவி புரிகிறது. இதனால் இதய நோய்கள் உண்டாகும் ஆபத்து தடுக்கப்படுகிறது.
6. இரத்த சர்க்கரை அளவை சமநிலைப்படுத்தும்
யோகர்ட்டில் உள்ள ப்ரோட்டீன், சர்க்கரை இரத்தத்தில் கலக்கும் செயலை மெதுவாக நடைபெற செய்கிறது. இதனால் இரத்த சர்க்கரை அளவு திடீரென அதிகரிக்காமலும், தூக்கம் கெடாமலும் உடலைப் பாதுகாக்க முடிகிறது.
7. எலும்புகளை வலுவாக்கும்
யோகர்டில் உள்ள ப்ரோட்டீன் மற்றும் கால்சியம் ஆகிய இரண்டு சத்துக்களும் இணைந்து செயல்பட்டு வலுவான எலும்புகளை உருவாக்கவும், அவற்றை ஆரோக்கியமாகப் பராமரிக்கவும் உதவுகின்றன. சீனியர் சிடிசன்ஸ் இரவில் படுக்கப் போகும் முன் ஒரு பௌல் யோகர்ட் சாப்பிட்டு விட்டுப் படுப்பது, அவர்களுக்கு ஆஸ்ட்டியோபொரோசிஸ் நோய் வருவதைத் தடுக்கும்.
8. சிறப்பான தூக்கத்துக்கு உதவும்
சரியான நேரத்தில் உறங்கவும் எழுந்து கொள்ளவும் உதவும் ஹார்மோனான மெலட்டோனின் உற்பத்தியை சமநிலைப்படுத்துவதில் யோகர்டில் உள்ள கால்சியம் மற்றும் மக்னீசியம் ஆகிய சத்துக்களின் பங்களிப்பு முக்கியமாக உள்ளது. யோகர்ட் போன்ற நொதிக்கச் செய்த உணவுகள் குடலில் உள்ள நல்ல பாக்ட்டீரியாக்களின் அளவை அதிகரிக்கவும், அவற்றின் வளர்ச்சியை துரிதப்படுத்தவும் செய்கின்றன.
யோகர்டில் உள்ள ட்ரிப்ட்டோஃபன் (Tryptophan), கால்சியம் மற்றும் மக்னீசியம் போன்ற சத்துக்கள் தரமான தூக்கம் உடனடியாகப் பெற உதவுகின்றன.
இரவில் உட்கொள்ளும் ஒரு கப் யோகர்டில் இத்தனை ஆரோக்கிய நன்மைகள் நிறைந்திருப்பதால், நீங்களும் உட்கொண்டு பல நன்மைகள் பெறலாமே!
(முக்கிய குறிப்பு: இந்தத் தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே. மருத்துவ ஆலோசனைக்கு சரியான தகுந்த மருத்துவரை அணுகவும்)