
“காலையில் எழுந்த உடனே ஒரு காபி குடித்தால்தான் நிம்மதியாக இருக்கும்” என பலர் சொல்வதைக் கேட்டிருப்பீர்கள். அந்த அளவுக்கு காபி நம் அன்றாட வாழ்வில் இன்றியமையாத ஒரு பானமாக மாறிவிட்டது. ஆனால், நீங்கள் விரும்பிக் குடிக்கும் காபி உண்மையிலேயே நல்லது தானா?
சமீபத்திய ஆய்வுகள், காபி குடிப்பதால் பல நன்மைகள் கிடைப்பதாகத் தெரிவிக்கின்றன. அதுவும் குறிப்பாக காபி நம் ஆயுளை அதிகரிக்கும் என்ற செய்தி உண்மையிலேயே ஆச்சரியமாக உள்ளது. போர்ச்சுகலில் உள்ள கோயம்ப்ரா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் நடத்திய ஆய்வில், தினசரி மிதமான அளவில் காபி குடிப்பது நம் வாழ்வில் இரண்டு ஆண்டுகளை கூடுதலாக சேர்க்கும் என்பதைக் கண்டறிந்துள்ளனர்.
காபி இதய நோய் வரும் அபாயத்தை குறைக்கிறதாம். இதில் ஆக்சிஜனேற்றிகள், அழற்சி எதிர்ப்பு பண்புகள் இருப்பதால், இதயம் ஆரோக்கியத்துடன் இருக்க உதவுகிறது. மேலும், இது மூளையின் செயல் திறனை மேம்படுத்தி அல்சைமர் போன்ற நரம்பியல் நோய்கள் வரும் அபாயத்தைக் குறைக்க உதவுகிறது. தொடர்ச்சியாக காபி குடிப்பதால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து நாம் பல்வேறு விதமான நோய்களிலிருந்து பாதுகாக்கப்படுகிறோம்.
காபி உடலில் உள்ள கெட்ட கொழுப்பை எரிக்க உதவுகிறது. எனவே, உடல் எடையைக் குறைக்க விரும்புவோர் தினசரி மிதமான அளவு காபி குடிப்பது நல்லது. இதில் உள்ள சில கலவைகள் மனச்சோர்வு மற்றும் மன அழுத்தத்தை போக்கி நிம்மதியான உணர்வை ஏற்படுத்துகிறது.
காபி குடிப்பதில் பல நன்மைகள் இருந்தாலும் சில விஷயங்களை நீங்கள் கவனத்தில் கொள்ள வேண்டும். அளவுக்கு அதிகமாக காபி குடிக்காமல் தினசரி மிதமாகக் குடிப்பது நல்லது. அதிகமாக காபி குடிப்பதால் பதட்டம், நடுக்கம், தூக்கமின்மை போன்ற பிரச்சனைகள் ஏற்படலாம். மேலும் இதில் அதிகமாக சர்க்கரை சேர்த்து குடிக்கும்போது உங்களது உடல் எடை அதிகரிக்கவும் வாய்ப்புள்ளது.
ஆரோக்கியமான முறையில் காபி குடிக்க, தினசரி இரண்டு அல்லது மூன்று கப் காபி மட்டும் குடியுங்கள். காபியில் அதிகமாக பால் மற்றும் சர்க்கரை சேர்த்து குடிப்பதைத் தவிர்க்கவும். குறிப்பாக, வெறும் வயிற்றில் காபி குடித்தால் அது அஜீரணப் பிரச்சனையை ஏற்படுத்தும். தொடர்ச்சியாக சில மருந்துகளை எடுத்துக் கொள்பவர்களுக்கு காபி குடிப்பது அதன் செயல்பாட்டை பாதிக்கக்கூடும். எனவே, நீங்கள் மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுவது நல்லது.