அதிகாலையில் அருந்தும் காபி உடற்பயிற்சி செய்வதற்கு உதவும் எரிபொருளாக உடலுக்கு சக்தியளிக்கிறது. அதுவே ஒன்றிரண்டு கிலோ எடையையும் குறைக்க உதவும் என்றால் நம்ப முடிகிறதா? நம்ப முடியாதவர்கள் புல்லட்புரூஃப் காபியை அருந்திப் பாருங்கள். இது ஒரு சாதாரண காபி அல்ல. காலைப் பொழுதின் கடமைகளைத் தொடங்கத் தேவையான சக்தியைத் தரக்கூடிய வகையில் ஆரோக்கியமான முறையில் தயாரிக்கப்படுகிறது. புல்லட் காபி மிக உயர்தரமான காபி கொட்டைகளிலிருந்து தயாரித்த காபி பவுடரிலிருந்து இறக்கிய டிக்காஷனுடன் அதிகளவு நெய் சேர்த்து தயாரிக்கப்படுகிறது. இதில் சேர்க்கப்படும் நெய்யின் தரமும் பாரம்பரிய ஆயுர்வேத முறையைப் பின்பற்றித் தயாரிக்கப்படும் நெய்க்கு இணையானதாக இருக்கும். இந்த புல்லட் காபியிலிருந்து கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள் என்னென்ன என்பதை இந்தப் பதிவில் பார்க்கலாம்.
1. எடைக் குறைப்பு: இந்த காபியிலுள்ள அதிகளவு நெய் நீண்ட நேரம் வயிறு நிரம்பிய உணர்வைக் கொடுக்கும். அதனால் ஆரோக்கியமற்ற கொழுப்பு மற்றும் சர்க்கரை நிறைந்த பதப்படுத்தப்பட்ட ஸ்நாக்ஸ்களை உண்ண வேண்டும் என்ற ஆவல் எழாது. கொழுப்பு மெட்டபாலிஸத்தின்போது கேட்டோன்ஸ் (Ketones) என்றொறு வகை சக்தியின் வெளிப்பாட்டை ஊக்குவிக்க உதவும் நெய். இது கேட்டோஜெனிக் உணவு அல்லது குறைந்த கார்போஹைட்ரேட் அடங்கிய உணவு உட்கொள்ளும் முறையைப் பின்பற்ற விரும்புபவர்களுக்கு சிறந்த முறையில் உதவி புரியும்.
2. மனத் தெளிவு மற்றும் சுறுசுறுப்பு: நெய்யில் மீடியம் செயின் ட்ரைக்கிளைசெரைட்ஸ் (MCTs) எனப்படும் நன்மை செய்யும் கொழுப்புகள் அதிகம் உள்ளன. இவை காபியுடன் இணைந்து, காஃபின் தரும் தீங்குகளைக் கடந்து உடலுக்கு தொடர்ந்து சக்தி அளித்துக் கொண்டிருக்க சிறந்த முறையில் உதவி புரியும். நெய்யில் உள்ள ஆரோக்கியம் தரும் கொழுப்புகள் மூளையின் இயக்கங்களை சிறப்புறச் செய்யும். கவனம் சிதறாமல் செயல்படவும், ஞாபக சக்தியை அதிகரிக்கவும் உதவும்.
3. ஹார்மோன் சமநிலை: உடலில் ஹார்மோன்கள் உற்பத்தியாவதற்கு நெய் மற்றும் ஆரோக்கியம் தரும் கொழுப்புகள் தேவை. புல்லட் காபி தொடர்ந்து அருந்தும்போது ஹார்மோன் அளவை சமநிலையில் வைத்துப் பராமரிக்கிறது. இதனால் உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியமும் மேன்மையடையும்.
4. ஆரோக்கியம் மற்றும் நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்: நெய்யில் கொழுப்பில் கரையக்கூடிய வைட்டமின் A, D, E மற்றும் K ஆகியவை அதிகம் உள்ளன. இவை எலும்புகள், முடி மற்றும் சரும ஆரோக்கியம் மேன்மையடைய உதவுவதோடு. நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்கவும் உதவி புரியும். இந்த நெய்யை காபியுடன் கலந்து காலையில் அருந்தும்போது உடலுக்கு அதிகளவு ஊட்டச் சத்துக்கள் கிடைத்து உடல் புத்துணர்வு பெறும்.
5. இரைப்பை குடல் இயக்கம் சிறக்கும்: நெய்யில் உள்ள ப்யூடைரிக் (Butyric) ஆசிட் எனப்படும் ஒரு வகை ஷார்ட்-செயின் கொழுப்பு அமிலம் ஜீரண மண்டல உறுப்புகளின் உள் பகுதிகளுக்கு (gut lining) ஊட்டமளித்து அதன் மூலம் வீக்கங்கள் குறையவும் செரிமானம் சீரான முறையில் நடைபெறவும் உதவி புரியும். இந்த அமிலம் க்ரீமர் மற்றும் செயற்கை இனிப்பூட்டிகளுக்கு ஒரு சிறந்த மாற்றாகும்.
மொத்தத்தில் தரமான நெய் மற்றும் காபி பவுடர் சேர்த்து தயாரிக்கப்படும் இந்த புல்லட்புரூஃப் காபியை காலையில் குடிப்பதால் உடலுக்கு பல வழிகளில் நன்மை கிடைக்கும் என்பது மறுக்க முடியாத உண்மை!