கோடைக்கால மாதங்களில்தான் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும். இதிலிருந்து தப்பிக்க கோடைக்கு ஏற்ற பானங்களை அருந்துவது நல்லது.
பருவ கால பழச்சாறுகள்:
அந்தந்த சீசன்களில் விளையக்கூடிய பழங்களில் பானங்கள் தயாரித்து குடிப்பதால் ஆரோக்கியம் கிடைக்கும்.
குறிப்பாக தர்பூசணி, மாதுளை,0 ஆரஞ்சு போன்ற பழங்களை அதிகமாக உட்கொள்ளலாம். உடலுக்கு ஆற்றலை அளிக்கும். அதே சமயம் இதில் நீர் சத்துகளும் அதிக அளவில் இருப்பதால் உடலை எப்போதும் நீர்ஏற்றத்துடன் வைத்து உடல் சூட்டையும் தணிக்கும்.
துளசி பானம்:
கோடை வெயிலில் இருந்து பாதுகாக்க மற்றொரு பானங்களில் ஒன்று துளசி. கோடை காலத்திலும், குளிர் காலத்திலும் சளி பிரச்னைகள் அதிக அளவில் ஏற்படும். இதிலிருந்து பாதுகாக்க இந்த துளசியை நீரிலிட்டு சிறிது நேரம் கழித்து ஏலக்காய் தூள், நாட்டுச் சர்க்கரை அல்லது வெல்லம் கலந்து வடிகட்டி தினமும் பருகலாம். உடல் சளி, இருமலை தணிக்கவும் இது உதவி செய்யும்.
எலுமிச்சை பானம்:
வெயிலின் காரணமாக ஏற்படும் தலை சுற்றல் பிரச்னையை தீர்க்க எலுமிச்சையில் உப்பு, புதினா, இஞ்சி கலந்து நீர்விட்டு வடிகட்டி சாப்பிடும்போது உடலுக்கு நல்ல ஆற்றலை வழங்கும். எலுமிச்சையில் உள்ள வைட்டமின் சி உள்ளிட்ட ஊட்டச்சத்துக்கள் வெயில் காலத்தில் உடலை குளிர்ச்சியாக வைப்பதற்கு உதவுகிறது. எலுமிச்சை பழத்துடன் புதினா மற்றும் இஞ்சி போன்றவற்றை சேர்க்கும்போது கோடையில், உடல் குளிர்ச்சியாகவும் நீர் ஏற்றத்துடனும் இருக்கும்.
கரும்புச் சாறு:
கோடை வந்தாலே கரும்புச்சாறு குடித்தால் வெயிலுக்கு இதமாக இருக்கும். இதில் உள்ள ஆன்ட்டி ஆக்சிடென்ட்கள், இரும்பு, மெக்னீசியம், கால்சியம் போன்ற ஊட்டச்சத்துக்கள் உடலை ஆரோக்கியத்துடன் வைப்பதால் நோய் எதிர்ப்பு சக்தி, அதிகரிக்கிறது. உடலுக்கு தேவையான நீர்ச்சத்தையும் வழங்குகிறது.
பப்பாளி ஜூஸ்:
கோடை வெப்பத்தை வெல்வதற்கு அருமையான பானங்களில் ஒன்றுதான் பப்பாளி இதில் உள்ள அதிக நார்ச்சத்துக்கள் மற்றும் உற்பத்தி செய்யும் என்சைம்களால் உடலுக்கு தேவையான ஆற்றல் கிடைக்கும். அதே சமயம் வெயிலுக்கு இதமாகவும் இருக்கும்..
மிக்ஸ்டு ரூட் ஜூஸ்:
கோடையில் ஆரஞ்சு, திராட்சை குளிர்ந்த நீர் எலுமிச்சை சாறு, சிறு துண்டு இஞ்சி, உப்பு சேர்த்து ஜூஸரில்அடித்து வடிகட்டி இதில் தேன் சேர்த்து குடிக்க மிகவும் இதமாக இருக்கும். பழங்களில் உள்ள சத்துக்கள் உடலுக்கு குளிர்ச்சி தரும்.
மோர் பானம்:
கோடையில் அனைவரும் விரும்பி அருந்தும் பானங்களில் ஒன்று மோர் ஆகும். மோரில் பல்வேறு ஊட்டச்சத்துக்கள் உள்ளது.
இதில் வைட்டமின் பி12, கால்சியம், துத்தநாகம், புரதம் ஆகியவை அதிகளவில் காணப்படுகின்றன.
கடைந்த மோரில் உப்பு, கொத்தமல்லி, கறிவேப்பிலை, இஞ்சி அரைத்து வடிகட்டி நீர் சேர்த்து குடிக்க வயிற்றுக்கு இதமாக இருக்கும்.
கோடையில் உடலுக்கு புத்துணர்வு கொடுக்கும் கம்பங்கூழ்:
கோடையில் பாரம்பரிய தானியத்தில் ஒன்றான கம்பு இரத்தத்தில் உள்ள கழிவுகளை போக்கி உடல் இரத்தத்தை சுத்தப்படுத்தும். நாள் முழுவதும் சுறுசுறுப்பாக இருக்கும். இதில் புரதம், இரும்புச்சத்து, பொட்டாசியம், வைட்டமின்கள் ஈ, பி போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளன. கம்பங் கூழை காலை உணவாகவும், நீராகாரம், போன்று எடுத்துக்கொண்டால் கோடைவெயில் காலத்தில் உடல் சூட்டைக் குறைக்கலாம். நன்னாரி சர்பதும் குடிக்கலாம்.