உலர் கண் பிரச்னை - காரணங்களும் தீர்வுகளும்!

Dry eye
Dry eyehttps://www.everydayhealth.com

குடும்பத்தின் பொருளாதார சிக்கல்களைத் தவிர்க்க தற்போது வீட்டில் உள்ள அனைவரும் வேலை செய்தாக வேண்டிய சூழ்நிலையில் உள்ளோம். பெரும்பாலும், அனைத்து அலுவலகங்களிலும் தற்போது கணினியில்தான் பணிபுரிந்தாக வேண்டி உள்ளது. தொடர்ச்சியாக பல மணி நேரம் கணினி திரையையே பார்த்துக் கொண்டிருப்பதால் கண்களில் பல்வேறு பிரச்னைகள் ஏற்படுகின்றன. அவற்றில் முக்கியமானது உலர் கண் (Dry eye) பிரச்னையாகும். இந்த உலர் கண் பிரச்னையைத் தவிர்க்க சில வழிமுறைகளை இந்தப் பதிவில் காண்போம்.

கண்களின் வெளிப்புற அடுக்கில் எண்ணெய்யும், மைய அடுக்கில் நீரும், உள் அடுக்கில் புரதமும் இருக்கின்றன. இந்த மூன்று கண் அடுக்குகளில் உண்டாகும் மாற்றமே உலர் கண் பிரச்னையாகும். கண்களின் சீரான தன்மை மற்றும் செயல்பாட்டிற்கு அதில் சுரக்கக்கூடிய தண்ணீரின் அளவு அடிப்படையானதாகும்.

உலர் கண் பிரச்னை ஏற்படும்போது கண்களில் சுரக்கும் தண்ணீரின் அளவு குறையத் தொடங்கும். இதனால் கண்களில் வலி, எரிச்சல், சிவத்தல், நீர் வடிதல் போன்ற பிரச்னைகள் இருப்பதே உலர் கண் நோயின் அறிகுறிகளாகும். பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் பிரச்னைகள், சீரற்ற ஹார்மோன் சுரப்பு, ஊட்டச்சத்து குறைபாடு, சர்க்கரை நோய் போன்றவையும் இந்தப் பிரச்னைக்குக் காரணமாக இருக்கலாம்.

தூய்மையற்ற மாசுக்கள் நிறைந்த இடத்தில் பணி செய்யும்போது விழிப் படலத்தில் பாதிப்பு ஏற்படும். காற்றில் ஏற்படும் வெப்பநிலை, குறிப்பாக ஏ,சி. பயன்பாட்டினால் வெப்பநிலை குறைந்து ஈரப்பதம் அதிகரிக்கும். இது கண் இமைகளில் உள்ள சுரப்பிகளின் உற்பத்தியைத் தடுத்து, விழி நீர் படலத்தில் பாதிப்பை ஏற்படுத்தும்.

இதையும் படியுங்கள்:
கால்களை ஏன் வலுவாக வைத்துக்கொள்ள வேண்டும்?
Dry eye

இதற்கெல்லாம் தீர்வாக கண்களுக்கான முறையான பயிற்சி, சீரான இடைவெளியில் கண்களுக்கு ஓய்வு தருதல், வெளியில் செல்லும்போது சன் கிளாஸ் அணிவது, வைட்டமின் ஏ நிறைந்த உணவுகளை உண்பது போன்றவற்றை மேற்கொள்ள இந்தப் பிரச்னையில் இருந்து பாதுகாப்பு கிடைக்கும்.

குளிர்ந்த அல்லது அதிக சூடான இடங்களில் நீண்ட நேரம் இருப்பதை தவிர்க்கலாம். நேரடியாகக் கண்களில் வேகமான காற்று படும்படி இருப்பதைத் தவிர்க்க வேண்டும். அடிக்கடி ஆவி பிடிப்பது, சாம்பிராணி புகை போடுவதைத் தவிர்க்க வேண்டும். குளிர்ந்த நீரால் அவ்வப்போது முகத்தைக் கழுவ, கண்களுக்குப் புத்துணர்வை தருவதோடு, கண்களுக்கு தெளிவையும் தரலாம். சரியான கவனிப்பின்றி விடப்படும் உலர் கண் பிரச்னை பின்னாளில் பல கேடுகளுக்கு வழிவகுத்து விடும். ஆகவே, கண்களைப் பாதுகாத்தல் எல்லா காலங்களிலும் அனைவருக்கும் அவசியமானதாகும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com