சமையலில் மக்களால் அதிகம் புறக்கணிக்கப்படும் உணவு எதுவென்றால் கசப்பு சுவையுடைய பொருட்களை பயன்படுத்தி செய்யப்படும் உணவுகள்தான். அறுசுவை உணவுகளில் மக்கள் அதிகம் ஒதுக்குவது கசப்பு சுவை. ஆனால் இத்தகைய உணவுகளில்தான் நம் உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது. இவற்றை நாம் உணவில் சேர்த்துக் கொள்வது மூலமாக நமது ஒட்டுமொத்த நல்வாழ்வுக்கும் பலனளிக்கும். இந்தப் பதிவில் எதுபோன்ற கசப்பு நிறைந்த உணவுகளை நாம் எடுத்துக்கொள்ள வேண்டும் என்பது பற்றி தெரிந்து கொள்ளலாம்.
வேப்பிலை: வேப்ப மரத்தின் இலை, காய், பூ, பழம், பட்டை என அனைத்துமே மருத்துவ குணம் கொண்டது. குறிப்பாக அதிக கசப்பு சுவையுடைய அதன் இலை ஆயுர்வேத மருத்துவத்தில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. இதில் அழற்சி எதிர்ப்புப் பண்பு, பாக்டீரியா எதிர்ப்புப் பண்பு மற்றும் ஆன்ட்டி ஆக்ஸிடென்ட்கள் நிறைந்துள்ளதால், செரிமானத்தை மேம்படுத்தி உடலில் உள்ள நச்சுக்களை நீக்கும்.
மஞ்சள்: இந்திய உணவு என்றாலே அதில் மஞ்சள் தவிர்க்க முடியாத பொருளாகும். இது உணவுகளின் சுவையை உயர்த்திக் கொடுக்கும் கசப்பு தன்மை கொண்ட பொருள். இது நம் ஆரோக்கியத்தில் பெரும் பங்கு வகிக்கிறது. குறிப்பாக மஞ்சளில் இருக்கும் குர்குமின் என்ற கெமிக்கல், சக்தி வாய்ந்த நோய் எதிர்ப்பு மற்றும் ஆக்சிஜனேற்றப் பண்புகளைக் கொண்டுள்ளது.
வெந்தயம்: வெந்தயமும் பல நூறு ஆண்டுகளாக இந்திய சமையலிலும் மருத்துவத்திலும் பயன்படுத்தப்பட்டு வரும் பொருளாகும். இது நம் ஆரோக்கியத்திற்கு பெரிதளவில் உதவுகிறது. இது ஒரு விதமான கசப்பு சுவை கொண்டதாக இருந்தாலும் அதிகப்படியான நார்ச்சத்து, தாதுக்கள், விட்டமின்கள் போன்றவை இருப்பதால் ரத்த சர்க்கரை அளவைக் குறைக்க பெரிதும் உதவுகிறது..
பாகற்காய்: பாகற்காய் இந்தியாவின் மிகவும் பிரபலமான காய்கறி ஆகும். கசப்பு சுவை என்றாலே நமக்கு பாகற்காய் தான் ஞாபகம் வரும். இதனாலையே பலர் பாகற்காய் உட்கொள்வதைத் தவிர்க்கிறார்கள். ஆனால் பாகற்காயில் உடலுக்குத் தேவையான தாதுக்கள் விட்டமின்கள் மேலும் எண்ணிலடங்கா ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது. பாகற்காயை வேண்டாம் என ஒதுக்குவதில் நீங்களும் ஒருவராக இருந்தால், தயவுசெய்து வாரம் ஒருமுறையாவது பாகற்காய் சாப்பிடும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள்.
இந்த நான்கு கசப்பு நிறைந்த பொருட்களை நீங்கள் உணவில் சேர்த்துக் கொள்வது மூலமாக உடலில் உள்ள அத்தனை பிரச்சினைகளும் நீங்கி வலிமையாக உணருவீர்கள். பொதுவாகவே நாம் எல்லா விதமான சுவையும் கொண்ட உணவுகளை சாப்பிட வேண்டியது அவசியம். எனவே கசப்பு சுவையுடைய எல்லா பொருட்களுமே உடலுக்கு நல்லது என்பதை உணருங்கள்.