நாம் உண்ணும் உணவில் அறுசுவைகள் அடங்கியுள்ளன. அவற்றில் ஒன்று காரச்சுவையாகும். நம்மில் பெரும்பாலோனார் இனிப்புச்சுவையை விரும்புகிறோம். ஆனால் காரமான பலகாரங்களும் இனிப்பு விற்கப்படும் கடைகளில் விற்கப்படுகின்றன.
மற்ற நாடுகளைவிட, இந்தியர்கள் தங்களது உணவில் மிகுதியாகக் காரம் சேர்த்துக்கொள்வதாகக் கூறப்படுகிறது. அதைத் தவிர்ப்பது என்பது பலராலும் முடியாது. ஆனாலும், அளவிற்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சு என்னும் பழமொழி காரம் சேர்ந்த உணவிற்கும் பொருந்துமல்லவா?
நமது உடல் ஏற்றுக்கொள்ளக்கூடிய அளவைக் காட்டிலும் அதிகமான காரத்தை உணவில் சேர்த்துக்கொள்ளும்போது, வாய்ப்புண் முதல் வயிற்றுப்புண்வரை பல உடல்நலக் கோளாறுகள் நமக்கு ஏற்படலாம். ஏற்கெனவே வேறு நோய்களின் தாக்கம் நம் உடலில் இருப்பின், நாம் உட்கொள்ளும் அதிக காரமான உணவுகள் அவ்வாறான நோய்களின் தாக்கத்தை தீவிரபடுத்திவிடலாம்.
நாம் உண்ணும் காரம் மிகுந்த உணவுப்பொருள்கள் நமது உணவுக்குழாயையும், குடற்பகுதியையும் அரித்து விடலாம். நமது உணவில் அதிக காரம் சேர்ப்பதால் வயிற்றுப்போக்கு, வயிற்றில் எரிச்சல் ஆகிய பிரச்சினைகள் ஏற்படலாம்.
நமது உடல் ஏற்றுக்கொள்ளாவிடில் காரமான உணவுப்பொருளை உண்பதை நிறுத்திக் கொள்டுவதே நல்லது. காரம் சேர்ந்த உணவுகளை எப்போதாவது ஒரு முறை சாப்பிட்டால் பிரச்னை ஏற்படாது.
பெரும்பாலான மணமூட்டிகள் (Spices) மருத்துவக் குணம் கொண்டவை என மருத்துவ உலகம் கூறுகின்றது. ஆனால், அவற்றை குறிப்பிட்ட அளவில் மட்டுமே உண்ண வேண்டும்.
சமைக்கும்போது ஏலக்காய், இலவங்கம், கிராம்பு ஆகியவற்றை எண்ணெய்யில் நேரடியாகச் சேர்த்து உண்பது நல்லது.
மஞ்சளும் இஞ்சியும் மருத்துவப் பண்புகளை அதிகம் கொண்டவை. இஞ்சித் தேநீர் உடலுக்கு நல்லது. வெள்ளைப்பூண்டில் இதய நோயாளிகளுக்கு நற்பலன் தரக்கூடிய 'அலிசின்' எனும் வேதிப்பொருள் உள்ளது. ஆயினும், அதிகமான மிளகாய்த்தூள், அல்லது பச்சை மிளகாய் மனிதக் குடலுக்கு கேட்டினை விளைவிக்கும்.
உணவில் காரம் அதிகமாகிவிட்டால், பால், கிரீம், தயிர், தேங்காய்ப் பால், எலுமிச்சை சாறு, சர்க்கரை, உருளைக்கிழங்கு போன்றவற்றைச் சேர்த்து காரத்தை சமன் செய்யலாம். தேங்காய் சாதம், எலுமிச்சை சாதம், தக்காளி சாதம் போன்ற உணவுகளில் காரம் அதிகமாக இருந்தால், வடித்த சாதத்தை இன்னும் சேர்த்து கலந்து உண்ணலாம். குழம்பு, சாம்பார், ரசம் போன்ற உணவுகளில் நெய் அல்லது எண்ணெய் சேர்த்து காரத்தை சமன் செய்யலாம்.