பால் அனைவருக்கும் பிடிக்கும் ஒரு பானம். அதோடு அதிக ஊட்டச்சத்துக்களையும் அள்ளி கொடுக்கிறது. அதனால், பால் குடிப்பது நன்மை என்றுதான் அனைவரும் அறிந்திருப்போம். சிலர் காலை எழுந்ததும் வெறும் வயிற்றில் பாலை பருகுவதுண்டு. அவ்வாறு பாலை வெறும் வயிற்றில் குடித்தால், பல விளைவுகளை சந்திக்க நேரிடும் என கூறப்படுகிறது. சிலருக்கு ஜீரண கோளாறு பிரச்னைகளை உண்டாக்குமாம். பாலில் உள்ள லாக்டோஸ் வயிறு உப்புசம், வாயு தொல்லை, வயிற்று போக்கு உள்ளிட்ட பிரச்னைகளை ஏற்படுத்தும் என சொல்லப்படுகிறது. அதை பற்றி இங்கு விரிவாக பார்க்கலாம்.
பாலினால் ஏற்படும் விளைவுகள்
அசிடிட்டி பிரச்னை
மாட்டு பால் அமிலத்தன்மை கொண்டது. இதை வெறும் வயிற்றில் குடிக்கும் போது குடலில் அமிலத்தன்மை அதிகரிக்க வாய்ப்புள்ளது. இதனால் நெஞ்சு எரிச்சல் மற்றும் செரிமான பிரச்னைகளை சந்திக்க நேரிடலாம். பாலில் உள்ள கால்சியம், ஜிங்க் மற்றும் இரும்புச் சத்து ஆகியவை உடலுக்கு தேவையான மினரல் உறிஞ்சப்படுவதை தடுக்கும். இதனால் உடலில் ஊட்டச்சத்து குறைபாடு ஏற்படவும் வாய்ப்புள்ளது.
ஹார்மோன் சமநிலை
வெறும் வயிற்றில் மாட்டு பால் குடித்தால் அதிலுள்ள ஹார்மோன்கள் உடலில் ஹார்மோன் சமநிலையை சீர்குலைத்து ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்திற்கும் கேடு விளைவிக்கும்.
எடை அதிகரிப்பு
பால், கலோரி நிறைந்த பானம் என்பதால் அதை காலையில் வெறும் வயிற்றில் குடிக்கும் போது உடல் எடை அதிகரிக்க கூடும்.
அலர்ஜி
மாட்டு பாலில் உள்ள புரத மற்றும் இதர விஷயங்கள் படை நோய், அரிப்பு போன்ற சரும பாதிப்புகளை உண்டாக்கலாம்.
சளி உற்பத்தி
உடல்நிலை சரியில்லாத நேரங்களில், சூடாக பருக வேண்டும் என்று பாலை தேர்ந்தெடுக்கலாம். அதோடு அது ஊட்டச்சத்து நிறைந்தது என்பதால், சரியான தேர்வு என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால், உண்மை என்னவென்றால் பால் மூச்சுக்குழாயில் சளி உற்பத்திக்கு வழிவகுக்கும். ஒரு சில சமயங்களில் ஆஸ்துமா மற்றும் மூச்சு திணறல் ஆகியவற்றை கூட உண்டாக்கும். அதனால் உடல்நிலை சரியில்லாத நேரங்களில் பாலை தவிர்த்து விடுங்கள்.
ஊட்டசத்து நிறைந்த மாட்டு பாலை உடல் நலனுக்காக குடிப்பது அவசியமானது தான். எனினும் காலையில் வெறும் வயிற்றில் அதை குடிப்பது நல்லதன்று. மேற்கண்ட பாதிப்புகளை புரிந்துகொண்டு முடிந்தவரை காலையில் வெறும் வயிற்றில் பால் குடிப்பதை தவிர்ப்பது நல்லது. மேலும் மருத்துவர் அல்லது ஊட்டச்சத்து நிபுணரை அணுகி உடலுக்கு தேவையான ஊட்டச்சத்தை பெற காலையில் எதை சாப்பிட வேண்டும் என ஆலோசனை கேட்டு அதன்படி, செயல்படுவது நல்லது.