மனித உடலின் வளர்ச்சி, வளர்சிதை மாற்றம், திசு செயல்பாடு, மனநிலை உள்ளிட்ட உடல் செயல்பாடுகளை ஒழுங்குபடுத்தும் முக்கியமான ரசாயன தூதர்கள் ஹார்மோன்கள். ஹார்மோன் சம நிலையின்மை உடல் மற்றும் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தில் ஏற்படுத்தும் பலவிதமான விளைவுகளைப் பற்றி இந்தப் பதிவில் பார்ப்போம்.
ஹார்மோன் சமநிலையின்மை என்றால் என்ன?
ஹார்மோன்கள் என்பது நமது உடலில் உட்சுரப்பியல் சுரப்பிகள் மூலம் சுரக்கும் ரசாயனங்கள் ஆகும். இரத்த ஓட்டத்தின் வழியாக அவை பயணம் செய்து உடலின் அனைத்து உறுப்புகளின் செயல்பாடுகளை கட்டுப்படுத்தவும் ஒருங்கிணைக்கவும் பயன்படுகிறது. ஹார்மோன்களில் உள்ள ஏற்றத்தாழ்வுகள் சில உடல் மற்றும் மன ரீதியான பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன.
பொதுவான அறிகுறிகள்: அதீதக் களைப்பு, வியர்வை, கவலை உணர்வுகள், எரிச்சல் ஊட்டும் தன்மை, கருவுறுதலில் பிரச்னை, விரைவான எடை அதிகரிப்பு, முகப்பரு, எடை இழப்பு, ஒழுங்கற்ற மாதவிடாய் சுழற்சிகள், நினைவக சரிவுகள், பலவீனமான தசைகள் மற்றும் எலும்புகள், முடி கொட்டுதல், தூங்குவதில் சிரமம், அதீத வெப்பம், மனச்சோர்வு, அலைபாயும் மனது, குடல் இயக்கங்களில் மாறுபாடு, இதயத் துடிப்பு, இரத்த அழுத்தம் மற்றும் இரத்த சர்க்கரை அளவுகளில் ஏற்படும் மாறுபாடுகள்.
ஹார்மோன் சமநிலையின்மை ஏற்படுத்தும் விளைவுகள்:
உடல் எடை மாற்றங்கள்: இன்சுலின், தைராய்டு ஹார்மோன்கள் மற்றும் மன அழுத்த ஹார்மோன்களில் ஏற்படும் ஏற்றத்தாழ்வுகள் காரணமாக உடல் எடை அதிகரித்தல் அல்லது குறைதல் போன்றவை ஏற்படும். அடிவயிற்றை சுற்றி கொழுப்புப் படிந்து உடல் எடையைக் குறைப்பதில் சிரமம் ஏற்படும்.
மாதவிடாய் மாற்றங்கள்: ஈஸ்ட்ரோஜன் மற்றும் புரோஜெஸ்ட்டிரோனில் ஏற்படும் ஏற்ற இறக்கங்களின் விளைவாக ஒழுங்கற்ற மாதவிடாய் ஏற்படலாம். பாலிசிஸ்டிக் ஓவரி சிண்ட்ரோம் போன்ற நிலைகள், முகப்பரு, அதிகப்படியான முடி வளர்ச்சி அல்லது மலட்டுத்தன்மை போன்றவற்றிற்கு வழிவகுக்கும்.
சோர்வு: தைராய்டு செயல் இழப்பு அல்லது அட்ரீனல் பற்றாக்குறையினால் நாள்பட்ட சோர்வு அல்லது குறைந்த ஆற்றல் ஏற்படலாம்.
தூக்கக் கோளாறுகள்: கார்டிசோல் மற்றும் மெலடோனின் போன்ற ஹார்மோன்களில் மாற்றம் ஏற்படுவதால் தூக்கமின்மை அல்லது முறையற்ற தூக்கம் போன்றவை ஏற்படலாம்.
சருமத்தில் உண்டாகும் மாற்றங்கள்: முகப்பரு, சரும அரிப்பு, அழற்சி, வறண்ட சருமம் போன்ற சரும பிரச்னைகள் ஏற்படும். ஹார்மோனின் ஏற்ற இறக்கங்கள் முடி உதிர்தல் அல்லது அதிகப்படியான முடி வளர்ச்சிக்கு வித்திடும்.
செரிமானப் பிரச்னைகள்: ஹார்மோன் சமநிலையின்மையின் காரணமாக செரிமானத்தைப் பாதிக்கும். குடலில் வீக்கம், மலச்சிக்கல் அல்லது வயிற்றுப்போக்கு போன்ற நிலைமைகளுக்கு வித்திடும்.
நினைவாற்றல் கோளாறுகள்: பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் ஈஸ்ட்ரோஜன் அளவு குறைவதால் இரவில் அதீதமான வியர்வை மற்றும் சூடான ஃபிளாஷ்கள் உருவாகும். மாதவிடாய் காலத்தில் பெண்களுக்கு அறிவாற்றல் செயல்பாட்டில் மாற்றங்கள், கவனம் செலுத்துவதில் சிரமம் அல்லது நினைவாற்றல் பிரச்னைகளை சந்திக்க நேரிடலாம். செரட்டோனின், கார்டிசோல் மற்றும் ஈஸ்ட்ரஜன் போன்ற ஹார்மோன்களின் ஏற்றத் தாழ்வுகளால் கவலை மற்றும் மனச்சோர்வு ஏற்படலாம். அதிகரித்த எரிச்சல் மற்றும் மனநிலை மாற்றங்கள் மாதவிடாய் சுழற்சிக் காலத்தில் ஏற்படும்.
காரணங்கள்:
1. மாதவிடாய் காலத்தில் ஈஸ்ட்ரோஜன் குறைவது போன்ற இயற்கையான ஹார்மோன் மாற்றங்கள் ஏற்படுவது.
2. நாள்பட்ட மன அழுத்தம் கார்டிசோலின் அளவை அதிகரிக்கிறது. இது மற்ற ஹார்மோன்களின் சமநிலையை சீர்குலைக்கும்.
3. நீரிழிவு, தைராய்டு கோளாறுகள் பாலசிஸ்டிக் ஓவரி சிண்ட்ரோம் போன்றவை.
4. மோசமான உணவு, உடற்பயிற்சியின்மை, போதிய தூக்கம் இன்மை, போதைப் பொருள் துஷ்பிரயோகம் ஆகியவை.
5. ஹார்மோன் கருத்தடை மற்றும் ஸ்டீராய்டுகள் உள்ளிட்ட சில மருந்துகள் ஹார்மோன் சமநிலையை பாதிக்கலாம்.
6. ஹார்மோன் சமநிலை இன்மையின் விளைவுகளை சந்திக்க நேரிடும் நபர்கள் தகுந்த சிகிச்சை எடுத்துக்கொள்வது அவசியம்.